நம்பிக்கையாளர்கள் பொய் பேசலாமா?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘தான் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியாமல் இருந்துவிடும் மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டை(ப் பெற்றுத்தர) நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் பொய் பேசுவதைக் கைவிட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை(ப் பெற்றுத்தர) நான் பொறுப்பேற்கின்றேன்.



தன் குணங்களைச் சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவனத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் (பெற்றுத் தரப்) பொறுப்பேற்கின்றேன்.’ (அபூதாவூத்)

ஒருமுறை எங்கள் வீட்டிற்கு நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை அழைத்து, ‘இங்கே வா! உனக்கு ஒரு பொருள் தருகின்றேன்!’ என்று கூறினார்கள்.

அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்?’ என்று வினவினார்கள். அதற்கு என் தாயார், ‘நான் அவனுக்கு பேரித்தம் பழம் தர விரும்புகின்றேன்’ என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார் என் தாயாரிடம், ‘நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து கொடுக்கவில்லையென்றால், உம் வினைப்பட்டியலில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும்’ என்று கூறினார்கள். (அபூதாவூத்)

நான்கு செயல்கள் இருக்கின்றன. அவை எவனிடம் குடிகொண்டிருக்கின்றனவோ அவன் கலப்பற்ற நயவஞ்சகனேயாவான். அன்றி அவற்றில் ஒரு செயல் எவரிடம் இருக்கிறதோ அவர் அதனைக் கைவிடாதவரை அவரிடம் நயவஞ்சகத்தன்மை குடி கொண்டிருக்கிறது. அவை: 1) பேசினால் பொய் பேசுவது. 2) அமானிதம் ஒப்படைக்கப்பட்டால் அதனை மோசம் செய்வது. 3) வாக்குறுதி அளித்துவிட்டு அதை மீறுவது. 4) சண்டையிட்டால் ஒருவர் மீது அநியாயமாக பழிசுமத்தி அவதூறு கூறுவதுமாகும்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' (புகாரீ, முஸ்லிம்)

நம்பிக்கையாளர் கோழையாக இருக்க இயலுமா? என்று நாங்கள் நபி (ஸல்) அவர்களை வினவினோம். அதற்கு ஆம் என்றனர். கஞ்சனாக இருக்க இயலுமா? என்று வினவினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தனர். பொய்யனாக இருக்க இயலுமா? என்று வினவினோம். அதற்கு அவர்கள், இல்லை என்று பதிலளித்தார்கள். (முஅத்தா)

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரை (புதுமணப் பெண்ணை) அழைத்துக் கொண்டு அண்ணலாரின் இல்லத்திற்குச் சென்றோம். நாங்கள் அண்ணலாரின் வீட்டை அடைந்த பொழுது அண்ணலார் ஒரு பெரிய பால் குவளையை எடுத்து வந்தார்கள். பிறகு (அதிலிருந்து பாலை) திருப்தியடையும் அளவிற்குக் குடித்தார்கள். பின் தம் துணைவிக்குக் கொடுத்தார்கள். அத்துணைவியார் பசியிருந்தும் ‘எனக்கு விருப்பமில்லை’ என்று கூறினார்கள். அவர்கள் ஒப்புக்கு பதிலளிப்பதைப் புரிந்துகொண்ட அண்ணலார், ‘நீ பசியையும் பொய்யையும் ஒன்று சேர்க்காதே!’ என்று கூறினார்கள். (தபரானீயின் அல்முஃஜமுஸ்ஸகீர்)

நபி (ஸல்) அவர்கள் நவிலக் கேட்டிருக்கின்றேன்: ‘நீர் உம் சகோதரரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி, அதை அவர் உண்மையென்று கருதிக்கொண்டிருக்க, நீர் சொன்ன விஷயம் பொய்யாய் இருப்பது பெரும் நம்பிக்கைத் துரோகமாகும்.’ (அபூதாவூத்)

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ‘மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொல்பவனுக்குக் கேடும் தோல்வியும் உண்டாகட்டும்! அவனுக்கு அழிவு காத்திருக்கிறது.’ (திர்மிதி)

'மக்களே! உங்களுக்கு என்ன நேர்ந்தது விட்டது. ஈசல் விளக்கில் மொய்த்து மடிவது போன்று நீங்கள் பொய்மைக்குப் பலியாகி விடுகிறீர்கள். பொய்கள் அனைத்தும் ஆதமுடைய வழித்தோன்றல்கள் மீது ஹராமாகும் மூன்று செயல்களைத் தவிர. அதாவது: 1) கணவன் தம் மனைவியைத் திருப்தியுறச் செய்ய அவளிடம் பொய் கூறுதல். 2) போரில் ஒருவர் பொய் கூறுதல். 3) இரு முஸ்லிம்களுக்கிடையில் உள்ள பிணக்கை நீக்கும் பொருட்டு ஒருவர் பொய் கூறுவது ஆகும்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

Comments