உணர்ச்சிகள் குறித்து இஸ்லாம் சொல்வதென்ன?

இஸ்லாம் – அடிப்படையிலேயே – சிந்தனையின் பக்கமும் அறிவின் பக்கமும் அழைப்பு விடுக்கின்ற மார்க்கமாகும். சிந்திப்பவர்களை இறைவன் பாராட்டுகிறான். சிந்திக்க மறுக்கின்றவர்களைக் கடிந்தும் கொள்கின்றான். இக்ரஃ என்று திருமறையின் முதல் வசனத்தை இறக்கி வைக்கின்றான். நாம் சிந்தித்து செயல்படுவதையே இறைவன் பெரிதும் விரும்புகிறான்.



அதே நேரத்தில் பல உணர்வுகளுக்குச் சொந்தக் காரர்களாகவும் தான் நம்மை இறைவன் படைத்துள்ளான். அன்பு (முஹப்பத்), நேசம் (மவத்தத்) போன்ற சொற்கள் திருக் குர் ஆனில் பல தடவைகள் பயன் படுத்தப் பட்டுள்ளன. இறைவனே கருணையாளனாகவும் (ரஹ்மான்), அன்புள்ளவனாகவும் (ரஹீம்) தான் இருக்கின்றான்.

எனவே அறிவும் உணர்வும் – இஸ்லாத்தில் எப்படி கை கோர்த்துச் செயல் படுகின்றன என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக இப்பகுதியில் பார்ப்போம்.

முதலில் மனதில் ஆழமாக இதனைப் பதிய வையுங்கள்.

எந்த ஒரு உணர்வாக இருந்தாலும் அது நம்மை ஒரு செயலுக்குத் தூண்டி விடுவதாகவே இருக்கும். இந்தத் தூண்டலின் அடிப்படையில் நாம் செயல் பட வேண்டுமா வேண்டாமா என்று தீர்மானிப்பது நமது சிந்தனையும் அறிவும். சிந்தனை அனுமதித்தால் செயல் படுகிறோம். இல்லாவிட்டால் தூண்டலைத் தவிர்த்து விடுகிறோம்.

ஆனால் நாம் உணர்ச்சி வசப் பட்டு விட்டால் அந்த உணர்ச்சிகள் உடனடியான செயல்பாட்டிற்கு நம்மைத் தூண்டி விட்டு விடும். இந்தத் தூண்டல் மிக வலிமையானது. உடனடியானது. இதற்குக் காரணம் நமது ‘ஹார்மோன்களே’.

இந்த ஹார்மோன் தூண்டுதல் நமது மூளையின் ‘அறிவு ரீதியாக ஆய்வு செய்து முடிவு செய்திடும்’ பகுதிகளைச் (cognitive centres) எனவே அந்தத் தருணங்களில் – நமது செயல்களை ஒரே ஒரு வினாடி – தாமதித்து விட்டால் போதும். நமது அறிவு வேலை செய்யத் தொடங்கி விடும்.


ஆனால் பெரும்பாலான சமயங்களில் அந்த ஒரு வினாடி தாமதம் கூட நமக்கு சாத்தியப் படுவதில்லை. அதனை சாத்தியப் படுத்தும் தாரக மந்திரம் தான் – குர் ஆன் எடுத்துச் சொல்லும் ‘சப்ர்’ (SABR) என்றால் வியப்பாக இருக்கிறது இல்லையா?

இவ்வளவு காலம் நாம் சப்ர் என்றால் பொறுமை என்று சாதாரணமாகப் பொருள் கொண்டு விட்டோம். அன்று! சப்ர் என்பது மிக ஆழமான பல பொருள்களை உள்ளடக்கிய ஒரு சொல். நாம் அனைவரும் மிக ஆழமாக ஆய்வு செய்திட வேண்டிய ஒரு சொல்! அதன் ஒரே ஒரு அம்சம் தான் உணர்ச்சி வசப் படும் போது – உடன் நிதானத்துக்கு வருதலைக் குறிப்பதாகும்.

இந்த நபி மொழியைப் பாருங்கள்:

மண்ணறை ஒன்றின் அருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்ற போது ‘அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! பொறுமையாக இரு!’ என்றார்கள். அதற்கு அப்பெண், ‘ என்னை விட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துன்பம் உமக்கேற்படவில்லை’ என்று – நபி (ஸல்) அவர்கள் யாரென அறியாமல் கூறினாள்.

அவர் நபியெனக் கூறப்பட்டதும் அப்பெண், நபி (ஸல்) அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தாள். அங்கு காவலாளிகள் எவருமில்லை – ‘நான் உங்களை யாரென அறியவில்லை’ என நபி (ஸல்) அவர்களிடம் கூறினாள். ‘பொறுமை என்பது, அதிர்ச்சி ஏற்பட்ட உடனேயே கைகொள்வது தான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபி மொழி ஆதார நூல்: புகாரி)

நபி மொழியில் ‘இன்னமஸ் ஸப்ரு இன்தஸ் ஸத்மதில் ஊலா’ என்று வருகிறது. ஸத்மத் என்ற சொல்லை பொதுவாக துன்பம் என்று மொழி பெயர்க்கிறார்கள்; ஆனால் அது போதாது. ஏனெனில் ஸத்மத் என்பதற்கு ஆங்கிலத்தில் – push, thrust, jolt, shock, blow, stroke, upset, commotion, psychic shock, obstacle, difficulty – என்றெல்லாம் மொழி பெயர்க்கப் படுகிறது.

இதனை வைத்துப் பார்க்கும்போது நபியவர்கள் சொன்ன செய்தியின் ஆழம் நமக்குப் புலப்படுகிறது.

நமக்கு மனத்தளவில் ஏதேனும் ஒரு அதிர்ச்சி ஏற்படும்போது உடனேயே உணர்ச்சிகளின் கொந்தளிப்புகளுக்கு நாம் ஆளாகி விடுகின்றோம். ஆனால் – அதே சமயத்திலேயே – நம்மிடம் பொறுமையை எதிர்பார்க்கிறான் இறைவன்.

அந்த சமயத்தில் சற்று நிதானித்து – நமது ‘சிந்தனைக்கு’ இடம் கொடுத்து விடுவோமேயானால் நமது செயல்கள் எதுவும் அறிவுக்குப் புறம்பாக அமையாது. இந்தத் திறமையைத் தான் உணர்ச்சித் திறன் என்கிறார்கள். இந்த உணர்ச்சித் திறன் நமது வெற்றிக்கு மிக அவசியம். இத்தகைய உணர்ச்சித் திறனை நாம் வளர்த்துக் கொள்ள முடியுமா?

பிறகு விரிவாக – இன்ஷா அல்லாஹ்!

Comments