நூல்: மனித உறவுகள் மேம்பட!

மனித உறவுகள் மேம்பட!

HUMAN RELATIONSHIP IN ISLAM

ஆசிரியர்: S A மன்சூர் அலி


நமது அணுகுமுறை மாறட்டும்!

பொதுவாகவே இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களில் பலர், இஸ்லாத்தைப் பின்பற்றாத முஸ்லிம்களை சற்றே ஏளனமாகப் பார்க்கின்றனர். இது தவறு.


கடந்த காலங்களில் நாம் கூட ஏதேனும் சில பாவங்களில் ஈடுபட்டு பின்னர் திருந்தியவர்கள் தாம். நாம் திருந்துவதற்கு நமக்கும் கூட சற்று கால அவகாசம் தேவைப்பட்டிருக்கலாம். நம்மில் பெரும்பாலோரின் நிலை இதுவாகத்தான் இருக்கும்.

எனவே நம்மைச் சுற்றியிருக்கும் முஸ்லிம்கள் ஏதேனும் பாவங்களைச் செய்தால் அவர் திருந்துவதற்கும் சற்றே கால அவகாசம் தேவைப்படலாம் இல்லையா? பிறகு ஏன் நாம் அத்தகையவர்களை ஏளனமாகப் பார்த்திட வேண்டும்?

பின் வரும் நபிமொழியை சற்றே ஆழமாக சிந்தியுங்கள்:

உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அறிவித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் ‘அப்துல்லாஹ்’ என்றொருவர் இருந்தார். அவர் ‘ஹிமார்’ (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டுவந்தார். அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களை சிரிக்கவைப்பார். மது அருந்தியதற்காக அவரை நபி(ஸல்) அவர்கள் அடித்துள்ளார்கள். (போதையிலிருந்த) அவர் ஒரு நாள் (நபியவர்களிடம்)  கொண்டு வரப்பட்டார்.

அவரை அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அடிக்கப்பட்டார்.

அப்போது (அங்கிருந்த) மக்களில் ஒருவர், ‘இறைவா! இவர் மீது உன் சாபம் ஏற்படட்டும்! இவர் (குடித்ததற்காக) எத்தனை முறை கொண்டு வரப்பட்டுள்ளார்!’ என்று கூறினார்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இவரை சபிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் என்றே நான் அறிந்துள்ளேன்’ என்று கூறினார்கள். (நூல்;புஹாரி,எண் 6780)

இந்த நபிமொழியிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள்:

1. அல்லாஹ்வையும் அவனது தூதரவர்களையும் நேசிப்பவர்கள் கூட அல்லாஹ் தடுத்திட்ட பாவங்களில் ஈடுபட்டு விடுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

2. பாவத்தில் ஈடுபட்டு விட்ட எவரது ஈமானையும் சந்தேகிப்பதற்குக்கூட நமக்கு உரிமை கிடையாது. அவரை இழிவாகக் கருதி விடவும் கூடாது.

3. பாவங்களில் ஈடுபட்டிருக்கும் ஒரு முஸ்லிமிடத்தில் – வேறு நற்பண்புகள் இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. அந்த நற்பண்புகளே அவரை அவருடைய பாவங்களில் இருந்து காப்பாற்றி விட இயலும். நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவருடைய நற்பண்புகளை அவருக்குத் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டிருப்பதும் அவருக்காக நாம் தனிமையில் துஆ செய்வதும் தான்.


நமது உறவுகள் மேம்பட!

பின் வரும் நபிமொழியை சற்று ஆழமாக சிந்தித்துப் பாருங்கள்:

“கவனியுங்கள்! நான் உங்களுக்கு தொழுகையை விடவும், நோன்பை விடவும், தர்மம் செய்வதை விடவும், அந்தஸ்தில் ஒரு படி மேலான ஒன்றை உங்களுக்குச் சொல்லித் தரட்டுமா?” என்று நபியவர்கள் கேட்டார்கள்.

நபித் தோழர்கள் ஆம் என்றார்கள்.

“உங்களுக்குள் உள்ள உறவுகளை சரியான விதத்தில் சீர் திருத்திக் கொள்ளுங்கள்;ஏனெனில் உங்கள் நல்லுறவில் குறைகள் ஏற்பட்டால், அது ஒரு பொருளை சிரைத்து விடும்;அபூ ஈஸா அவர்கள் இது ஆதாரப் பூர்வமான ஹதீஸ் என்று சொல்லி மேலும் அறிவிக்கிறார்கள்:நபியவர்கள் சொன்னார்கள்: உறவுகளில் குறை இருந்தால் அது முடியை சிரைத்து விடும் என்று நான் சொல்லவில்லை;மாறாக அது உங்கள் உங்கள் மார்க்கத்தை சிரைத்து விடும்!’
(சுனன் அத்-திர்மிதி)

இன்று மார்க்கத்தைப் பின்பற்றுவதாக சொல்லிக்கொள்கின்ற நமது மனித உறவுகளின் நிலை என்ன? சிந்திப்போமா?

குறிப்பாக – நம்மிடையே -

கணவன் – மனைவி உறவு எப்படி இருக்கின்றது?

பெற்றோர்-பிள்ளைகள் உறவு எப்படி இருக்கின்றது?

மாமியார் மருமகள் உறவு எப்படி இருக்கின்றது?

குடும்ப உறவுகள் மட்டுமல்ல! குடும்பம் தவிர்த்து நமது மற்ற – மனித உறவுகளும் கூட பாழ்பட்டுப் போயிருக்கின்றது என்பது உண்மை தானே?

இப்போது கேள்வி என்னவெனில் -

நாம் பின்பற்றுவது மொட்டையடிக்கப்பட்ட மார்க்கத்தையா? அல்லது முழுமையான மார்க்கத்தையா?

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்! (2:208)

இங்கே – நமது உறவுகள் மேம்பட – அல்லாஹு த ஆலா நமக்குச் சொல்லித்தருகின்ற மிக நுணுக்கமான ஒரு வழிமுறையை  நமது நினைவுக்குக் கொண்டு வருவோம்:

மேலும், நாம் உங்களில் சிலரை மற்றும் சிலருக்குச் சோதனையாக்கி இருக்கிறோம் – ஆகவே நீங்கள் பொறுமையுடன் இருப்பீர்களா? உம்முடைய இறைவன் (யாவற்றையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்(25:20)

நமக்கிடையே உள்ள உறவுகளில் பிரச்னை என்றால் அதனை நாம் எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் எனில் – இந்த உறவின் மூலம் அல்லாஹு தஆலா நம்மை சோதிக்கின்றான் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடா? இது ஒரு சோதனை என்றே எடுத்துக் கொள்தல் வேண்டும்.

மாமியார் மருமகளுக்கிடையில் சச்சரவா? இதுவும் இறைவன் புறத்திலிருந்து வருகின்ற ஒருசோதனையே!

பிள்ளைகள் நம் சொல் கேட்டு நடப்பதில்லையா? இதுவும் ஒரு சோதனையே!

இவ்வாறு உறவுப் பிரச்னைகளை இறைவன் தந்த சோதனைகள் என்று எடுத்துக் கொள்ளும்போது – இந்த சோதனைகளில் நாம் வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்தே நாம் கவனம் செலுத்திட வேண்டும்.

அதாவது – உறவுகளுக்குள் பிரச்னைகள் தோன்றும்போது – உணர்ச்சிகளைக் கொட்டி விடக் கூடாது! அடக்கிக் கொண்டு விட வேண்டும்.

இவ்வாறு நாம் செய்திடும்போது – நமது வார்த்தைகளிலும், செயல்பாடுகளிலும் நமக்கு ஒரு எச்சரிக்கை உணர்வு வந்து விடும்.  பொறுமை வந்து விடும். (மனதுக்குள் ஒரு புன்சிரிப்பு கூட தவழும்!)

இந்தப் பொறுமையைத் தான் அல்லாஹு தஆலா நம்மிடம் எதிர்பார்க்கின்றான்.

நமக்கென்ன ஆறுதல்?

நடப்பவை அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பது ஒன்றே! அது போதுமே நமக்கு!

ஆம்! இதுவே அல்லாஹுத ஆலா நமக்குக் கற்றுத்தருகின்ற அருமையான பாடம்!

***

மனித உறவுகள் மேம்பட – உணர்ச்சித்திறன் (emotional intelligence) அவசியம் என்பதை மேற்குலகம் சமீப காலமாகத்தான் உணர்ந்திருக்கின்றது!

அதிலும் குறிப்பாக பத்து பேரையோ அல்லது நூறு பேரையோ வைத்து வேலை வாங்கக் கூடிய தலைமைப் பொறுப்புக்கு வருபவர்களுக்கு இந்த உணர்ச்சித்திறன் மிக மிக அவசியம் என்றும் அவர்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். அதற்கென தொடர்ச்சியான பயிற்சியும் அவர்களுக்கு அளிக்கப் படுகின்றது.

ஆனால் மேற்கண்ட இறைவசனத்தின் மூலம் (25:20) மனித உறவுகள் மேம்பட உணர்ச்சிக்கட்டுப்பாடு அவசியம் என்பதை என்றோ நமக்குக் கற்றுக் கொடுத்து விட்டான் வல்லோன் அல்லாஹு தஆலா!



மனித உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வோம்!

பின் வரும் திருமறை வசனங்கள் நம்மை சிந்திக்க வைக்கின்ன்றன:

அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள். “ஸலாம், ஸலாம்” என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்). (56: 25 – 26)

சுவர்க்கத்து வாழ்க்கை என்பது ஒரு மகிழ்ச்சிக் கடல்! அங்கு மகிழ்ச்சியைத் தவிர வேறு எதுவுமில்லை – கவலை, துக்கம், சோகம் போன்ற எந்த ஒரு எதிர்மறை உணர்வுக்கும் அங்கு இடமில்லை! சண்டை சச்சரவுகளுக்கு அங்கே இடமில்லை!

எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் அங்கே! ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லிக் கொள்வதைத் தவிர வேறெந்த வீணான பேச்சுக்களையும் செவியுற முடியாது அங்கே!

இதிலிருந்து நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால் – மகிழ்ச்சிக்கும் மனித உறவுகளுக்கும் ஒரு நெருங்கிய பிணைப்பு இருக்கின்றது. எந்த இடத்தில் மனித உறவுகள் “மற்றவர் நலம் நாடும்” அடிப்படையில் விளங்குகின்றதோ அந்த இடம் சுவர்க்கம் போன்றது தான்!

இவ்வுலக வாழ்க்கையை சோதனைக் களமாக ஆக்கி வைத்திருக்கின்றான் வல்லோன் அல்லாஹு தஆலா. அதே நேரத்தில் – இவ்வுலக வாழ்க்கையிலும் நாம் மகிழ்ச்சியை அனுபவித்திட அவன் காட்டியிருக்கும் மிகச்சிறந்த வழி தான் – மற்றவர் நலம் நாடும் நல்லுறவு!

ஈமான் எனும் நம்பிக்கை, மனிதர்களை நேசித்தல், மற்றவர் நலம் நாடுதல், ஸலாம் சொல்லுதல், மகிழ்ச்சிகரமான சுவன வாழ்க்கை – இவை எல்லாமே இஸ்லாத்தில் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன!

பின் வரும் இரண்டு நபிமொழிகளையும் ஆழ்ந்து சிந்தியுங்கள்:

”உங்களுக்கு நம்பிக்கை (ஈமான்) பிறக்கும் வரை நீங்கள் சுவனத்தில் நுழைய முடியாது. உங்களில் ஒருவரையொருவர் உளமாற நேசிக்கும் வரை நீங்கள் நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்களாக ஆக முடியாது. எச்செயல் பிறரை உளமாற நேசிக்கவைக்கும் என்பதை உங்களுக்கு நான் சொல்லட்டுமா? உங்களுக்கிடையில் ஸலாமைப் பரப்புங்கள். (அது உங்களுக்கிடையில் நேசத்தை ஏற்படுத்தி நம்பிக்கையைப் பலப்படுத்தி, சுவனத்தில் நுழைவதற்கு வழி வகுத்துவிடுகிறது) என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்” என அபூஹுரைரா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம், அபூதாவூது, மற்றும் திர்மிதீ)

இஸ்லாத்தில் மிகச் சிறந்த நற்செயல் எது என்று ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்டதற்கு, ”பசித்தோருக்கும், ஏழைகளுக்கும் உணவு வழங்குவது. இன்னும் உனக்கு அறிமுகமான, அறிமுகமல்லாத அனைவருக்கும் ‘ஸலாம் சொல்வதுமாகும்” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்”" என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி அல் ஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். நூல்: புகாரி, முஸ்லிம் மற்றும் அபூதாவூத்

இறை நம்பிக்கை – மனிதர்களின் நேசத்துக்கு – வழி வகுக்கின்றது1

மனிதர்கள் மீது நாம் காட்டுகின்ற அன்பும் நேசமும் – மற்றவர்கள் நலம் நாடுபவர்களாக (CULTURE OF CONCERN) நம்மை மாற்றுகின்றது!

மனிதர்கள் நலம் நாடுவது என்பது பசித்தவர்க்கு உணவளிப்பது மட்டும் அல்ல! அறிந்தவர்களுக்கும் அறிமுகம் இல்லாதவர்களுக்கும் ஸலாம் சொல்வதுவும் – அவர்கள் நலம் நாடிச் செய்திடும் ஒரு பிரார்த்தனை தான்!

இவ்வாறு மனித உறவுகள் மேம்படுத்தப் படும்போது – இவ்வுலக வாழ்க்கையிலும் சுவனத்தின் சாயலை நாம் அனுபவிக்கலாம்!

நாம் அன்பளிக்கின்ற புன்முறுவல் கூட மகிழ்ச்சியை மற்றவர் முகத்துக்குக் கொண்டு வந்து விடும்.

Emotions are contagious!

உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே என்று என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூதர் (ரலி) அறிவிக்கிறார். நூல்: முஸ்லிம்

மற்றவர் நலம் நாடுதல் என்பது முஸ்லிம்களை மட்டுமா குறிக்கும்? இல்லை! பின் வரும் இறைவசனமே சான்று:

(நபியே!) இந்த (வேத) அறிவிப்பில் அவர்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால், அவர்களுக்காக வியாகூலப்பட்டு, நீர் உம்மையே அழித்துக் கொள்வீர்கள் போலும்! (18: 6)

ஆனால் நமது நிலை என்ன? இரண்டு விஷயங்கள் மனதுக்குள் தோன்றுகின்றன.

ஒன்று: நாம் ஸலாம் சொல்வதில் பாரபட்சம் பார்க்கின்றோம்.

இரண்டு: ஸலாம் சொல்வது கூட ஒரு சடங்காக ஆகி விட்டிருக்கின்றது. அதாவது – மற்றவர் நலம் நாடிச் சொல்லப்படுகின்ற ஸலாம் ஆக அது இருப்பதில்லை!

ஸலாமத் என்பதன் விரிவான பொருள்களை சற்றே கவனியுங்கள்:

BLAMELESSNESS, FLAWLESSNESS, UNIMPAIRED STATE, SOUNDNESS, INTEGRITY, INTACTNESS, WELL-BEING, WELFARE, SAFETY, SECURITY, SMOOTH PROGRESS, SUCCESS…

அதாவது யாருக்கு நாம் ஸலாம் சொல்கிறோமோ – அவர்கள் எந்த ஒரு குறையும் இன்றி, பத்திரமாக, பாதுகாப்பாக, அமைதியுடன், முன்னேறிச் சென்று வெற்றி பெற வாழ்த்தி பிரார்த்திக்கின்றோம் என்று பொருள்!

இந்த தூய்மையான எண்ணங்களுடன் தான் நாம் ஸலாம் சொல்கின்றோமா?

சுய பரிசோதனைக்கு இதுவே நேரம். நம்மை நாமே திருத்திக் கொண்டால் – மற்றவர் நலம் நாடினால், மனித உறவுகளை மேம்படுத்திக் கொண்டால் – இவ்வுலக வாழ்வும் நமக்கு சுவர்க்கம் தான்!

இல்லையேல்?

****

மேலும் சிந்தித்திட படியுங்கள்:

கட்டுரை: அவர்கள் மட்டும் எப்படிக் குடித்தார்கள்?



அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்!

மற்றவர் உணர்வுகளை மதிப்பது (respecting the feelings of others) குறித்து நபிமொழிகள் நிறைய உண்டு!

அடுத்தவர் நிலையில் நம்மை வைத்து சிந்தித்தால் அவருடைய உணர்வுகளை நாம் புரிந்து கொள்ள முடியும். இதற்கு ஆங்கிலத்தில் empathy என்று பெயர்.


இவ்வாறு மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்வது நபி வழியாகும். நபியவர்கள் மற்றவர்கள் உணர்வுகளுக்கு எந்த அளவுக்கு மதிப்பளிப்பவர்கள் என்பதை சில நபிமொழிகளைக் கொண்டு ஆய்வோம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக்கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக்கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக் கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ‘ஒரு பிடி அல்லது இருபிடிகள்’ அல்லது ‘ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள்’ உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் (அதை சமைத்தபோது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) – நூல்: ஸஹீஹுல் புகாரி

இன்னொரு நபிமொழியைப் பார்ப்போம்:

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”நீங்கள் மூவர் இருந்தால் ஒருவரைத் தவிர்த்து இருவர் மட்டும் உரையாட வேண்டாம், நீங்கள் மக்களுடன் கலக்கும்வரை. ஏனெனில் அது மூன்றாமவரைக் கவலையில் ஆழ்த்திவிடும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அந்த மூன்றாவது நபருடைய நிலையில் உங்களை வைத்து சிந்தித்துப் பாருங்கள். உங்களை அந்த இருவரும் அவமானப்படுத்துவது போல் நீங்கள் உணர்வீர்கள்!

அப்துல்லாஹ இப்னு தீனார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நானும் இப்னு உமர் (ரழி) அவர்களும் கடைவீதியிலுள்ள காலித் பின் உக்பாவின் வீட்டின் அருகிலிருந்தோம். அப்போது ஒரு மனிதர் இப்னு உமர் (ரழி) அவர்களிடம் ரகசியம் பேச விரும்பினார். அது சமயம் இப்னு உமர் (ரழி) அவர்களுடன் என்னைத் தவிர வேறு எவருமில்லை. அதனால் இப்னு உமர் (ரழி) மற்றொரு மனிதரையும் அழைத்துக் கொண்டார்கள்.

இப்போது நான்கு நபர்களானோம். என்னிடமும், தான் அழைத்த மூன்றாவது நபரிடமும், ”நீங்கள் இருவரும் சிறிது நேரம் தாமதியுங்கள். ஒருவரைத் தவிர்த்து இருவர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்றார்கள். (அல் முவத்தா)

இப்னு உமர் (ரழி) அவர்கள் ஒருவர் தன்னை வழியில் சந்தித்து ரகசியம் பேச விரும்பியபோது மூன்றாம் நபருக்கு அது சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் அதைத் தவிர்த்து விட்டார்கள். நான்காமவரை அழைத்ததன் மூலம் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைக் கற்றுத் தந்து விட்டார்கள். என்ன அற்புதமான அணுகுமுறை பார்த்தீர்களா?

பின் வரும் நபிமொழியை சற்று ஆழ்ந்து சிந்தியுங்கள்:

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள், ‘நான் (கனவில்) என்னை சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு நான் அபூ தல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன். அப்போது நான் மெல்லிய காலடி யோசையைச் செவியுற்றேன். உடனே, ‘யார் அது?’ என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), ‘இவர் பிலால்’ என்று பதிலளித்தார்.

நான் (அங்கு) ஓர் அரண்மனையைக் கண்டேன். அதன் முற்றத்தில் பெண்ணொருத்தி இருந்தாள். நான், ‘இது யாருக்குரியது?’ என்று கேட்டேன்.

அவர், (வானவர்), ‘இது உமருடையது’ என்று கூறினார். எனவே, நான் அந்த அரண்மனையில் நுழைந்து அதைப் பார்க்க விரும்பினேன். அப்போது (உமரே!) உங்கள் ரோஷம் என் நினைவுக்கு வந்தது (எனவே, அதில் நுழையாமல் திரும்பிவிட்டேன்)” என்று கூறினார்கள்.

அதற்கு உமர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். உங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்” என்று கேட்டார்கள். (முக்தஸர் ஸஹீஹுல் புகாரி – 1529)

ஏன் நபியவர்கள் உமர் (ரலி) அவர்களுடைய அரண்மனையில் நுழைந்து அதனைப் பார்க்க விரும்பியும் அதனைச் செயல் படுத்திடவில்லை?

உமர் (ரலி) அவர்களுடைய ரோஷ உணர்வுக்குக்கூட நபியவர்கள் மதிப்பளித்திருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது!

நபித் தோழர்களை – அடுத்தவர் நிலையில் தம்மை வைத்து – சிந்தித்துப் பார்த்திடச் சொல்லி – பாடம் கற்பித்திருக்கின்றார்கள் நபியவர்கள்.

கேள்விப்பட்ட நபிமொழி தான் அது: நபித்தோழர் ஒருவர் நபியவர்களிடம் வந்து விபச்சாரம் செய்திட அனுமதி கேட்டிட மற்ற நபித்தோழர்களுக்குக் கோபம் வந்திட நபியவர்களோ அவரை தம் அருகில் அமர்த்திக் கொண்டு — “நீங்கள் எந்த செயலை செய்திட விரும்புகின்றீர்களோ அதே செயலை உங்கள் தாயோ, சகோதரியோ, மனைவியோ அல்லது மகளோ செய்திட விரும்பிட மாட்டீர்கள் அல்லவா?” என்று சிந்திக்க வைத்து அவரைத் திருத்திய நிகழ்ச்சியை நாம் அறிவோம்.

பொதுவாகவே – அடுத்தவர் நிலையில் நம்மை வைத்து சிந்தித்தாலே போதும் – நமது பல பிரச்னைகள் தீர்ந்து போகும்!

மேலும் படித்திட:

கட்டுரை: உங்கள் மனைவியின் நிலையில் நீங்கள் இருந்தால்?

Comments