மனக்கட்டுப்பாடு - அணியின் வெற்றிக்கு அவசியம்!

(ஒத்தித் தான் போடுங்களேன்! என்ன குறைந்து விடும்?)

மனத்தூண்டலினால் தான் நினைத்த ஒன்றை ஒருவர் உடனேயே அடைந்திடத் துடிக்கின்றாரா? இந்தத் தன்மையை ஆங்கிலத்தில் Instant gratification என்று அழைக்கிறார்கள்.

ஆனால் மனம் தூண்டுகின்ற ஒன்றை, உடனே அனுபவித்திடத் துடிக்காமல், அறிவார்ந்த காரணங்களுக்காக ஒத்திப் போடுகின்ற தன்மை ஒருவருக்கு இருந்தால் அதனை Delaying gratification என்று அழைக்கிறார்கள்.



இப்படி ஒத்திப் போடுகின்ற தன்மையை ஒருவர் வளர்த்துக் கொள்ள ஒருவருக்குத் தேவை – சுயக் கட்டுப்பாடு! ஆங்கிலத்தில் இதனை – Self discipline, self control, self management, self governance – என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

குறிப்பாக இப்படிப்பட்ட கட்டுப்பாடு – ஒரு குழுவாகப் பணியாற்றுகின்ற அனைவரிடத்திலும் இருந்திட வேண்டும். அப்போது தான் ஒரு குறிப்பிட்ட காரியத்தை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (deadline) ஒரு குழுவினரால் முடித்துக் கொடுக்க முடியும்.

அந்தக் குழுவில் இப்படிப்பட்ட கட்டுப்பாடு இல்லாமல் – எதனையும் “உடனே அனுபவித்து விடும்” தன்மை உள்ளவர்கள் ஒரு சிலர் இருந்து விட்டால் கூட அந்தக் குழு செம்மையாக செயல் பட முடியாது! காரியத்தைக் கெடுத்துக் குட்டி சுவராக்கி விடுவார்கள்.

குர் ஆனில் இடம் பெற்றுள்ள பின் வரும் வரலாற்று நிகழ்ச்சியை ஊன்றிப் படியுங்கள்.

“பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது அவர் “நிச்சயமாக அல்லாஹ் உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்; யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர்; தவிர, ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதில் நின்றும் (அதிகமாக) நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர்” என்று கூறினார்.

“அவர்களில் ஒரு சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள்; பின்னர் தாலூத்தும், அவருடன் ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர்) “ஜாலூத்துடனும், அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்லை” என்று கூறிவிட்டனர்;

“ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், “எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்; மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்” என்று கூறினார்கள். (2: 249)

பின்னர் என்ன நடந்தது? அந்த கட்டுப்பாடு மிக்க ஒரு சிலர் இறைவனிடம் இறைஞ்சினார்கள். பொறுமையைக் கேட்டார்கள். தங்களின் பாதங்களை உறுதிப் படுத்திடுமாறு வேண்டினார்கள். இறைவனின் உதவிக்காகப் பிரார்த்தித்தார்கள்.

அல்லாஹு தஆலா அவர்களுடைய இறைஞ்சுதலை ஏற்றுக் கொண்டான். ஜாலூத்தின் படையை அவர்கள் முறியடித்தார்கள்.

இதில் பல படிப்பினைகள் நமக்கு இருக்கின்றன:

1. மனக் கட்டுப்பாடு இல்லாதவர்களைக் (people of instant gratificatrion) கூடவே வைத்துக் கொண்டு எந்த ஒரு காரியத்திலும் நாம் வெற்றி பெற இயலாது.

2. மனக் கட்டுப்பாடு உடையவர்கள் (people of delaying gratification)- அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுகிறார்கள்.

3. மனக்கட்டுப்பாடு அற்றவர்களைப் பிரித்தறிய வேண்டியது – அணித் தலைவருக்கு அவசியம்.

தன் (இழிவான) இச்சையையே தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே!) நீர் பார்த்தீரா? அ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா? (25:43)

4. மனக் கட்டுப்பாடு உடையவர்கள் பொறுமையாளர்கள். இறைவன் இவர்களின் பாதங்களை உறுதிப் படுத்துகின்றான். இவர்களுக்கு இறைவனின் உதவி கிடைக்கின்றது. இவர்களே வெற்றி பெறுகின்றார்கள்!

Comments