நூல்: தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி!

நூல்: தொழுகை கற்றுத்தரும் வாழ்க்கையில் வெற்றி!

SUCCESS THROUGH SALAT

உண்மையான வெற்றி - தொழுகை மூலமே!

தொழுகையை விட்டவன் மறுப்பாளன்! தொழுகை சொர்க்கத்தின் திறவுகோள்! தொழுகையே மறுமையில் கேட்கப்படும் முதல் கேள்வி!


தொழுகைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் இஸ்லாத்தில்?


தொழுகையின் பக்கம் வாருங்கள்! வெற்றியின் பக்கம் வாருங்கள்! – இது நாம் தினமும் ஐவேளை தொழுகைக்கான அழைப்பொலியில் கேட்கக் கூடிய வாசகங்கள் தான்.

தொழுகைக்கும் வெற்றிக்கும் என்ன சம்பந்தம்? நமது தோல்விகளுக்கு நாம் தொழாமல் இருப்பது தான் காரணமா?

யார் தொழுகையை நிலை நிறுத்துகிறாரோ அவர் தீனை நிலை நிறுத்தியவராவார். யார் தொழுகையை விட்டு விடுகிறாரோ, அவர் தீனைத் தகர்த்தவர் ஆவார் என்பதுவும் நபிமொழி தான்!

தீன் என்பது என்ன? மார்க்கம் அல்லவா? அது ஒரு முழுமையான வாழ்கை நெறி அல்லவா?

அப்படியானால் – தொழுகை நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைக்கப் பட்டுள்ளதா?

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களைப்பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தம்முடைய ஆளுநர்கள் அனைவருக்கும் பின்வருமாறு கடிதம் எழுதினார்கள்:

உங்களுடைய பணிகளில் என்னிடம் அனைத்தையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது தொழுகையே! எவன் தன் தொழுகையைப் பேணுகின்றானோ அதனைக் கண்காணித்த வண்ணம் இருப்பானோ அவன் தன் மார்க்கம் முழுவதையும் பேணி நடப்பான். எவன் தன் தொழுகையை வீணடித்து விடுகின்றானோ அவன் மற்ற விஷயங்களைத் தாராளமாக வீணடிக்கக் கூடியவனாகவே இருப்பான். (மிஷ்காத்)

தொழுகையின் அலட்சியம் – நமது வாழ்வின் மற்ற பகுதிகளிலும் பிரதிபலித்திடுமா?

தொழுகை நமது முழுமையான வாழ்க்கை நெறியோடு பிண்ணிப் பிணைக்கப்பட்டுள்ளதா?

மனிதன் தன் வாழ்வில் வெற்றி பெற அவன் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டுமோ – அவை அனைத்தையும் தொழுகை கற்றுத் தருகின்றதா? ஆம்! அல்லாஹு தஆலா நமது வாழ்க்கையோடு தொழுகையை அந்த அளவு பின்னிப் பிணைத்திருக்கின்றான்.

எப்படி என்கிறீர்களா?

சான்றாக – தொழுகையுடன் சுத்தம் இணைந்துள்ளது. உளூ இல்லாமல் தொழ முடியாது. இடம் சுத்தம், உடை சுத்தம், உடல் சுத்தம் அவசியம். சுத்தம் வெற்றி தருமா தராதா?

தொழுகை – நேரத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. நேரத்தைப் பேணுபவர்கள் வெற்றி பெறுவார்களா மாட்டார்களா?

தொழுகை – நல்லொழுக்கத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. இந்த நல்லொழுக்கம் வெற்றியைத் தருமா தராதா?

தொழுகை – பொறுமையுடன் இணைக்கப் பட்டுள்ளது. பொறுமையாளர்கள் வெற்றி பெறுவார்களா? மாட்டார்களா?

தொழுகை – ஜகாத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. தர்மம் நமக்கு வெற்றியைத் தருமா தராதா?

தொழுகை – ஒற்றுமையைக் கற்றுத்தருகிறது. வெற்றிக்கு – ஒற்றுமை அவசியமா? இல்லையா?

தொழுகை – தலைமைக்குக் கட்டுப் படுவதன் அவசியத்தைக் கற்றுத்தருகிறது. வெற்றிக்கு – தலைமைக்குக் கட்டுப் படுவது அவசியமா? இல்லையா?

நாம் தொழுகையை ஒரு சடங்காகவே கருதிக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு மதத்துக்கும் வணக்க வழிபாடுகள் இருப்பது போலவே – இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகளில் ஒன்று தான் தொழுகை என்று எண்ணுகின்றோம் நாம். ஒரு சிலர் – தொழுகை என்பது இஸ்லாத்தின் யோகா என்று கூட நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பாவம்! அறியாமை!!

தொழுகை குறித்து ஒரு பெரிய ஆய்வையே நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. இன்ஷா அல்லாஹ் ஆய்வு செய்வோம்!


வாழ்க்கையின் வெற்றிக்கு முதல் தேவை – ஒரு இலக்கு!

தனிப்பட்ட மனிதன் எப்படி வாழ்ந்திட வேண்டும் என்பதையும், மனிதர்கள் குடும்ப வாழ்விலும், கூட்டு வாழ்விலும் எவ்வாறு வாழ்ந்திட வேண்டும் என்பதையும் துல்லியமாக தொழுகையை வைத்தே கற்றுத் தருகின்றான் வல்லோன் அல்லாஹு தஆலா!

மனிதனின் தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையின் வெற்றிக்கு – தொழுகை எவைகளையெல்லாம் கற்றுத் தருகின்றன என்பதை சிறு சிறு கட்டுரைகளாகத் தொடர்ந்து எழுதுவோம்.

முதலில் நாம் எடுத்துக் கொள்வது – வாழ்வின் இலக்கு! (Life Goal)

மனித வாழ்க்கையின் வெற்றிக்கு முதல் தேவை – ஒரு இலக்கு! அதாவது Life Goal! நாம் எந்த ஊருக்குச் சென்றிட வேண்டும் என்பது முடிவாகாவிட்டால் எல்லாப் பேருந்துகளுமே நமது பேருந்துகள் தான் என்று சொல்வார்கள்! வாழ்க்கையில் இலக்கு ஒன்றை நிர்ணயித்துக் கொள்பவர்கள் தான் அந்த இலக்கு நோக்கி தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வார்கள்! இலக்கு என்று ஒன்று இருந்தால் தானே – வெற்றி பற்றி நாம் பேசிட முடியும்? இலக்கே இல்லாதவர்களுக்கு ஏது வெற்றி?

இந்த அடிப்படையில் தான் – ஒரு இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கி நம்மைப் பயணிக்க வைக்கின்றது தொழுகை! அது என்ன இலக்கு?

மரணம் வரை – இறைவனுக்கு அடிபணிந்து வாழ்ந்து, அவனது திருப்தியைப் பெற்று, அவன் வாக்களித்துள்ள சுவர்க்கத்தை அடைவது தான் நமது இலக்கு!

தொழுகையையும் சுவர்க்கத்தையும் இணைத்துச் சொல்லப்பட்டிருப்பதன் நுணுக்கம் – தொழுகையாளியை ஒரு இலக்கு உடையவனாக ஆக்கிடத்தான்!

இலக்கு ஒன்றைத் தலையில் சுமந்திருப்பவன் – தனது இலக்கு பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பான்! அதற்கென செய்ய வேண்டுவன பற்றியே அவனது கவனம் இருக்கும்.

அதே போலத்தான் ஐந்து வேளைத் தொழுபவன் – ஒரு வேளை தொழுது விட்டுத் திரும்பினாலும் அடுத்த வேளை தொழுகை குறித்தே அவனது கவனம் இருக்கும்.

ஒருவனுக்கு எந்த ஒன்றில் ஆர்வம் மிகைத்திருக்கின்றதோ அந்த ஒன்றில் தான் அவனது வாழ்வின் இலக்கும் அமைந்திருக்கும். இலக்கை அடைந்திட உறுதியுடன் செயல் படும்போது அவனது ஆர்வம் சற்றும் குறைந்திடுவதில்லை!

ஒரு இறைநம்பிக்கையாளனின் தொழுகையும் அப்படிப்பட்டது தான். தொழுகையில் அவனது ஆர்வம் கிஞ்சிற்றும் குறையாது. ஏனெனில் ஆர்வமற்ற தொழுகையை இறைவன் அங்கீகரிப்பதில்லை என்பதை அவன் அறிந்தே வைத்திருக்கின்றான்! (மாவூன் அத்தியாயம் பார்க்க!)

அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவப் பொறுப்பு வழங்கப்பட்ட துவக்க காலத்திலேயே – நபியவர்களுக்கு தொழுகையும் கடமையாக்கப்பட்டு விட்டது என்பதை நாம் அறிவோம்! நபியவர்களின் வாழ்வின் இலக்கு – இஸ்லாத்தை வெற்றி பெறச் செய்வதே! அதாவது நபியவர்களின் இறுதி மூச்சு வரை அவர்களின் சிந்தனை மற்றும் செயல்பாடுகள் அனைத்துமே – அவர்களின் பொறுப்பை முழுமையாக நிறைவேற்றுவது குறித்துத் தான் சுற்றிச் சுழகும்.

அதே நேரத்தில் – “மரணம் வரும் வரை தொழுகையைக் கடைபிடியுங்கள்!” – என்பது இறை கட்டளை. இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் – வாழ்வின் இலக்கு (Life Goal) என்பதும் தொழுகை என்பதும் நமது மரணம் வரை தொடர வேண்டியவை.

இலக்கினை அடையத் துடிப்பவர்கள் உடையவர்கள் கூர்நோக்கு (concentration and mindfulness) உடையவர்களாகத் திகழ்ந்திட வேண்டும். அதற்கானப் பயிற்சியைத் தொழுகை செவ்வனே வழங்குகிறது.

தொழுகை கவனச் சிதறல்களில் இருந்து (distractions) நம்மைப் பாதுகாக்க வல்லது.

இலக்கு உடையவர்கள் – வீணான செயல்களில் – ஈடுபட மாட்டார்கள். வீணானவற்றில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு ஏது நேரம்? தொழுகையும் – வீணான செயல்களில் மூழ்கி விடாமல் நம்மைப் பாதுகாத்து விடும் ஒரு அரணாகும்!

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். இன்னும், அவர்கள் வீணானவற்றை விட்டு விலகியிருப்பார்கள்.(23: 1-3)

இன்ஷா அல்லாஹ் – மேலும் தொழுகைக்கும் வெற்றிக்கும் உள்ள பிணைப்பைப் பற்றி தொடர்ந்து எழுதுவோம்.


வெற்றிக்குத் தேவை நேர மேலாண்மை!


தொழுகையை வல்லோன் அல்லாஹு தஆலா – நேரத்துடன் இணைத்துள்ளான்:

நிச்சயமாகத் தொழுகை மூமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக அமைந்துள்ளது. (அல்குர்ஆன் 4:103)

அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்” என்று பதில் கூறினார்கள்…………. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவித்தார். (புகாரி 572)

ஐந்து வேளை தொழுகைகளையும் அதனதன் குறிப்பிட்ட நேர வரையறைக்குள் மட்டுமே தொழுதிட வேண்டும் என்ற கட்டுப்பாடு எப்போதும் நமக்கு உண்டு. தொழுகையை அதற்குரிய நேரத்தை விட்டு மற்ற நேரத்தில் தொழ உறங்கியவருக்கும், மறந்தவருக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

“உங்களில் எவரேனும் தொழுகையை விட்டும் உறங்கி விட்டால் அல்லது மறந்து விட்டால் நினைவு வந்ததும் தொழ வேண்டும்” என்பது நபிமொழி. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு ஏன் தொழுகைகளை நேரத்துடன் அல்லாஹு தஆலா பிணைத்திருக்கின்றான் என்று சிந்தித்துப் பார்ப்போமா?

தினம் தினம் ஐந்து வேளைத் தொழுகை என்பது ஒவ்வொரு இறைநம்பிக்கையாளனையும் நேரத்துடன் பின்னிப் பிணைத்து விடுகின்றது – அதுவும் அவனது மரணம் வரை! அவனது தூக்கம் கட்டுப்படுத்தப்பட்டு விடுகிறது. அவன் வணிகம் செய்திடும் நேரம், அவன் பணி செய்திடும் நேரம், அவனது கொடுக்கல்-வாங்கல் நேரம், அவன் தனது குடும்பத்தாருடன் அலவளாவும் நேரம், அவனது ஓய்வு நேரம் – இவை அனைத்துமே ஒரு வரையறைக்கு வந்து விடுகின்றது.

இதில் அவனுக்கு எந்த சிரமமும் வைக்கப்படவில்லை என்பது மிகவும் வியப்பான விஷயமே!

விரைவில் தூங்கச் சென்று விடு; அதிகாலை எழுந்து விடு! அப்போது ஒரு தொழுகை!

பின்னர் – மதியம் வரை உன் விருப்பம் தான்! அதன் பின் ஒரு தொழுகை!

உணவுக்குப் பின் சற்றே ஓய்வு எடு; அதன் பின் ஒரு தொழுகை! பிறகு உன் விருப்பம் தான்!

பகலவன் மறைந்ததும் ஒரு தொழுகை! பிறகு உன் விருப்பம் தான்!

இரவில் ஒரு தொழுகை! பின் உணவருந்தி விட்டு உறங்கச் சென்று விடு!

இப்படிப்பட்ட நேரக்கட்டுப்பாட்டினால் என்ன நன்மைகள்?

குறிப்பிட்ட நேரங்களில் தான் தொழுதிட வேண்டும் என்ற கட்டுப்பாடு – குறிப்பிட்ட நேர வரையறைக்குள்ளேயே எந்த ஒரு செயலையும் செய்து முடித்து விட வேண்டும் என்ற நல்லதொரு பழக்கத்தை (habit) நம்மை அறியாமலேயே கற்றுக் கொள்ள வழி வகுக்கின்றது! செய்திட வேண்டிய எந்த ஒரு வேலையையும் ஒத்திப்போட்டு ஒத்திப்போட்டு (procrastination) நேரத்தை வீணடித்து விடுகின்ற கெட்டப் பழக்கம் இதன் மூலம் தடுக்கப்பட்டு விடுகின்றது.

காலம் தவறாமையைக் (puncutality) கற்றுத் தருகின்றது ஐவேளைத் தொழுகை! இது மனித உறவுகளைப் (human relationship) பாது காக்கிறது; நம்பகத்தன்மைக்கு (trustworhtiness) வழி வகுக்கின்றது!

நேர மேலாண்மையைக் (time management) கற்றுத் தருகின்றது ஐவேளைத் தொழுகை! எப்படியெனில் – ஒரு வேலையைச் செய்திட ஒரு நேரத்தை நாம் தேர்வு செய்கின்றோம் எனில் அந்த வேலையை அடுத்த தொழுகைக்குள் முடித்திட முனைவோம். சற்றே பெரிய அல்லது மிகப்பெரிய வேலையாக இருந்தாலும், அதனை – சில பகுதிகளாகப் பிரித்து – தொழுகையையும் விட்டு விடாமல், வேலையையும் செவ்வனே செய்திட வழி வகுத்துத் தருகின்றது ஐவேளைத் தொழுகை!

ஒரு வேளைத் தொழுகையைத் தொழுது விட்டு அடுத்த வேளைத் தொழுகைக்குக் காத்திருப்பது இறைநம்பிக்கையாளனின் அழகிய பண்புகளுள் ஒன்று. அது போலவே எந்த ஒரு வேலையாக இருந்தாலும் – அதற்காகக் காத்திருந்து, அது தருகின்ற “நேரச்சவால்களை” எதிர் கொண்டு – குறிப்பிட்ட நேரத்துக்குள் (deadline) அதனை முடித்துச் சாதிக்கின்ற திறமையையும் கற்றுத் தருகின்றது ஐவேளைத் தொழுகை!

ஆனால் வேதனை என்னவென்றால் – ஐந்து வேளை தொழுகைகளையும் நேரம் தவறாமல் தொழுபவர்களில் பலரிடம் நாம் மேலே குறிப்பிட்டுள்ள பண்புகளைக் காண முடிவதில்லை!

தொழுவார்கள்; பணிக்குத் தாமதமாக வருவதைக் குறித்துக் கவலைப்படுவதில்லை!

தொழுவார்கள்; குறிப்பிட்ட நேரத்தில் ஒருவரைச் சந்தித்திட வரச் சொல்வார்கள்; வர மாட்டார்கள்!

முதல் வரிசையிலே ஐந்து வேளையும் ஒழுங்காகத் தொழுவார்கள்; ஆனால் குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலைகளை முடித்துத் தர மாட்டார்கள்.

தொழுகையில் சுறுசுறுப்பு காட்டுவார்கள்; மற்ற விஷயங்களில் சோம்பேறிகளாக விளங்குவார்கள்!

பின் எப்படி நாம் வெற்றி பெற முடியும்?

“”காலத்தின் மீது சத்தியமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்!”- என்ற இறை வசனத்தை சற்றே ஆழமாக சிந்தித்துப் பாருங்கள்!

படிப்பினை:

தொழுகை கற்றுத்தரும் பண்புகளை வாழ்வின் இதர துறைகளிலும் செயல்படுத்திப் பாருங்கள்! வெற்றி தானாக வந்து சேரும்!


தொழுகையும் இறை சிந்தனையும்!

தொழுகை இறை சிந்தனையோடு இணைக்கப்பட்டுள்ளது.

என்னை நினைவு கூறும் பொருட்டு - தொழுகையை நிலை நிறுத்துங்கள்" (20:14)

தொழுகையின் எந்த நிலையானாலும் - நின்றாலும், குனிந்து ருகூஉ செய்தாலும், சஜ்தாவில் இருக்கும்போதும் அல்லது அதற்குப் பின்னரும், குர் ஆனை ஓதும்போதும், மற்ற தஸ்பீஹ்களை ஓதும்போதும் - நாம் செய்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான் - அது - இறை சிந்தனையே!"

ஆக இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் தொழுகையும் இறை சிந்தனையும் பின்னிப் பிணைந்தவை என்பதைத் தான்.

இறை சிந்தனை வெற்றி தரும்!

நமது வாழ்வில் சில நேரங்களில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்; சில நேரங்களில் நாம் கவலை அடைகின்றோம். ஒரு இறை நம்பிக்கையாளனைப் பொறுத்தவரை - மகிழ்ச்சியான தருணங்களில் அவன் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான். கவலையான தருணங்களில் அவன் இறை உதவியை நாடி பொறுமையைக் கடை பிடிக்கின்றான்.  ஆக இரண்டு நிலைகளிலும் அவன் மன நிம்மதியுடன் தான் இருக்கின்றான்.

(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! (13:28)

எனவே நமக்கு ஒரு சோதனை ஏற்படுகின்றது எனில் உடன் நாம் தொழுகையின் பக்கம் விரைந்து ஓடி வல்லோனிடம் நமது கவலையைப் பற்றி முறையிட்டு விட்டு - செய்வன திருந்தச் செய்து விட்டு - பொறுப்பை இறைவனிடம் ஒப்படைத்து விடுகிறோம்.

நமது வாழ்வு முழுவதும் இதே நிலை தான்! இதுவே ஒரு வெற்றியாளனின் நிலை ஆகும்.

குடும்ப வாழ்வில் பிரச்னையா? கணவனும் மனைவியும் சேர்ந்து இறைவனைத் தொழுது உதவி வேண்டி நின்றால் - குடும்பத்தில் மன அமைதி தானாக வரும். இது ஒரு குடும்பத்தின் வெற்றி!

அது போலவே - குழந்தை வளர்ப்பிலும் - அவர்களை சிறு வயதிலிருந்தே - தொழுகைக்குப் பழக்குவதன் மூலமும், இறை உதவி குறித்து அவர்களுடன் கலந்துறவாடுவதன் மூலமும் - எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ளும் குழந்தைகளை நாம் உருவாக்கிட முடியும். இதுவே குழந்தை வளர்ப்பின் வெற்றியாகும்!

ஆம்! இறை சிந்தனை வெற்றிக்கு வழி வகுக்கும்!




தொழுகையும் உள்ளச்சமும்!

"அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையை உள்ளச்சத்தோடு தொழுவார்கள்." (23:2)

உள்ளச்சம் என்றால் என்ன?

அரபி மொழியில் "khusu'a" என்று குறிப்பிடப் படக்கூடிய உள்ளச்சம் என்பது எதைக் குறிக்கும்?

இறைவனின் முன்பு மிகுந்த பணிவுடன் நிற்பதை இது குறிக்கும்.

இதில் மூன்று விஷயங்கள் உள்ளன என்று விளக்குகிறார் அல்லாமா யூசுப் அலி அவர்கள்.

1. இறைவனின் முன்னால் எனது மதிப்பு என்ன? அதாவது இறைவன் எனக்கு எவ்வளவு "மார்க்" போட்டு வைத்திருக்கிறான். என்னைப் பற்றிய அந்தரங்கங்களை அறியாத நிலையில் - உலகில் எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொடுக்கப் படலாம்; ஆனால் எனது உள்ளத்தை அறிந்த இறைவன் எனக்கு என்ன மதிப்பு தருகிறான் என்று நான் கவலைப் படுவதே உள்ளச்சத்தின் ஒரு வெளிப்பாடு.

2. இறைவனின் முன்னால் எனது ஆற்றலும் அதிகாரமும் எவ்வளவு? உலகில் நான் மிகவும் சக்தி வாய்ந்தவனாக செல்வாக்கு மிகுந்தவனாக கணிக்கப் படலாம்; ஆனால் இறைவனுக்கு முன்னால்? அதுவும் இறைவனின் உதவியை நீக்கி விட்டுப் பார்த்தால் எனது சக்தி என்பது என்ன என்ற நிதர்சனமான நிலையை உணர்வதும் உள்ளச்சத்தின் இன்னொரு வெளிப்பாடு.

3. இறைவனிடம் நாம் நமக்குத் தேவையான பல கோரிக்கைகளை வைக்கிறோம். அவைகளை நிறைவேற்ற அவன் ஒருவனாலேயே முடியும்; நம்மால் ஒன்றுமே செய்து விட முடியாது என்ற "இயலாமை" உணர்வும் உள்ளச்சத்தின் மூன்றாவது வெளிப்பாடு.

இந்த மூன்று உணர்வுகளையும் தொழுகையில் ஒருவன் கொண்டு வந்தால் அதுவே உள்ளச்சத்துடன் கூடிய தொழுகை ஆகும். அவனுக்கே வெற்றி உரித்தானது!


நிகழ் காலத்தைத் தொலைத்து விடாதீர்கள்!

கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பதில் மூன்று நன்மைகள் உண்டு.

ஒன்று – கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் படித்துக் கொள்ளலாம்.

இரண்டு – கடந்த காலத் தவறுகளுக்குத் “தவ்பா” செய்து தூய்மை அடையலாம்.மூன்று – கடந்த கால செய்திகளை நம் சந்ததிகளுக்காக ஆவணப் படுத்தி வைக்கலாம்.

இது தவிர – கடந்த காலத்தை அசை போடுவதில் வேறு எந்த நன்மையும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.

ஆனால் நம்மில் பலர்- கடந்த காலத்தைத் தாங்கள் “கவலைப் படுவதற்காகவே” நினைவு கூர்கிறார்கள். “ஆகா, இப்படி செய்து விட்டோமே…. அப்படிச் செய்திருந்தால் இப்படி நடந்திருக்காதே”.

இப்படிப் பட்ட நினைவுகளுக்கு ஒருவர் வாழ்வில் பஞ்சமே இல்லை என்பதால் இவர்கள் கடந்த காலத்திலேயே “வாழ்ந்து திளைப்பவர்கள்” என்று சொல்லலாம்.

வேறு சிலர். இவர்கள் எதிர் கால “மாயையில்” மூழ்கிக் கிடப்பவர்கள். “நாளை என்ன நடக்குமோ.. ஏது ஆகுமோ…விபத்து நடந்து விடுமோ… மவுத் ஆகி விடுவோமோ….நஷ்டம் வந்து விடுமோ…. தோற்றுப் போய் விடுவோமோ…பெயில் ஆகி விடுவோமோ…. வேலை போய் விடுமோ….”

ஆனால் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் இவர்களில் யாரும் நிகழ் காலத்தில் வாழ்வதே இல்லை!

ஆனால் நமது வாழ்க்கை என்பது என்ன? நமக்குத் திரும்பவும் கிடைக்க வாய்ப்பில்லாத கடந்த காலமா? நமக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற நிச்சயமற்ற எதிர்காலமா? அல்லது நம் கைகளில் இறைவன் வழங்கி நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் நிகழ் காலமா?

“காலத்தின் மீது சத்தியமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்” – என்று அல்லாஹு தஆலா குறிப்பிடுவதை சிந்தித்துப் பார்த்தால் மனிதன் தனக்கு நஷ்டம் விளைவித்துக் கொள்வது என்பது அவன் தன் நிகழ் காலத்தைப் பாழ் படுத்திக் கொள்வதால் தான்!

மனிதனை நஷ்டவாளியாக ஆக்குவது யார்?

வேறு யார்? ஷைத்தான் தான்!

அவன் என்ன செய்கிறான்?

நம்மை -நமது நிகழ் காலத்தைப் பற்றி சிந்திக்க விடுவதில்லை. ஒன்று – நம்மைக் கடந்த கால சிந்தனைகளில் தள்ளி விட்டு விடுவான். அல்லது -நம்மை நமது எதிர் காலம் குறித்த சிந்தனைகளில் மூழ்க வைத்திட முயல்வான்.

அதனால் நாம் நமது நிகழ் காலத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதனைப் பற்றிய உணர்வே இல்லாமல் “கடமையே” என்று காரியம் ஆற்றிக் கொண்டிருப்போம்.அதனால் அதன் பயன்களை நாம் வெகுவாக இழந்து விடுவோம்.

இப்படித் தான் நம்மில் பெரும்பாலோரின் வாழ்க்கை “இயந்திரத் தனமாக” ஓடிக் கொண்டிருக்கிறது.

இதிலிருந்து விடு பட இறைவன் நமக்கு அருட்கொடை ஒன்றை வழங்கியிருக்கின்றான். அது என்ன தெரியுமா?

அது தான் தொழுகை!

அனு தினமும் ஐவேளை தொழுகையை அல்லாஹ் நமக்குக் கடமை ஆக்கியுள்ளான்.

“நிகழ் கால விழிப்புணர்வுக்காக” சற்று ஆழமாக சிந்திப்போம் இக்கடமை குறித்து.

இப்படி சிந்தித்துப் பாருங்கள்.

அதான் – தொழுகை அழைப்பொலி – காதில் விழுகிறது. அச்சமயத்தில் நாம் எந்தக் “காலத்தில்” மயங்கிக் கிடந்தாலும் – இந்த அழைப்பொலி நம்மை நிகழ் காலத்துக்குக் கொண்டு வந்து விடுகிறதா இல்லையா? நீங்கள் சும்மா இருந்து விட முடியாது; அழைப்புக்கு பதில் சொல்லியாக வேண்டும். இது முதற் கட்டம்.

அடுத்து நீங்கள் உங்களைத் தூய்மைப் படுத்திக் கொள்வதற்காக – உளூ செய்வதற்காக – தயார் ஆகிறீர்கள். நீங்கள் அதனைப் பரிபூரணமான முறையில் நிறைவேற்றிட வேண்டும் – இது நபி வழி. இதில் நீங்கள் அலட்சியம் காட்டினால் உங்கள் உளூ ஏற்கப் பட மாட்டாது. எனவே தொழுகையும் வீணாகி விடும். எனவே நீங்கள் உளூவின் சமயத்திலும் நிகழ் காலத்துக்கு வந்தே ஆக் வேண்டும்.

அடுத்து நீங்கள் பள்ளிவாசல் நோக்கி நடக்கிறீர்கள். ஆம். கம்பீரமாக நடந்திட வேண்டும். எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடிக்கும் நமக்கு கூலி எழுதப் படுகிறது அல்லவா? உங்கள் சிந்தனையும் நிகழ் காலத்துக்கு வந்து விடுகிறது.

பள்ளிவாசலை நெருங்குகிறீர்கள். “இகாமத்” கூட்டுத் தொழுகைக்கான அழைப்பு – காதில் விழுகிறது. நமது அவசர புத்தி நம்மை ஓடச் சொல்லித் தூண்டுகிறது. அதாவது சற்றே படபடப்பு. அதாவது Anxiety. அங்கேயே அல்லாஹ் நம்மைத் தடுத்து நம்மை நிகழ் காலத்துக்குக் கொண்டு வந்து விடுகிறான்.

இகாமத் சொல்லப் பட்டால் – நீங்கள் ஓடி வர வேண்டாம்; நடந்தே வாருங்கள்; கிடைப்பதில் சேர்ந்து கொள்ளுங்கள்; கிடைக்காததை முழுமை செய்து கொள்ளுங்கள் என்பது நபி மொழி. நாம் தொழுகைக்காக நடந்து வரும் போதே நாம் தொழுகையில் தான் இருக்கின்றோம் என்பதும் நபி மொழியே. சுப்ஹானல்லாஹ்!

ஆனால் – இகாமத் கேட்டதும் வேகமாக ஓடி வரக்கூடிய பல் பேர்களை நாம் அடிக்கடி பார்த்திட முடியும். இது கூடாது.

அடுத்து தொழுகை துவங்குகிறது; ஷைத்தான் ஓடோடி வந்து விடுவான்; நாம் நிகழ் காலத்தை விடுத்து கடந்த காலத்துக்கும் எதிர் காலத்துக்கும் போய் வந்து கொண்டிருப்போம்.

ஆனால் அல்லாஹ் நம்மிடம் என்ன எதிர் பார்க்கிறான்?

நீங்கள் அல்லாஹ்வைப் பார்ப்பது போல் தொழுங்கள்; அது இயலாவிட்டால் அல்லாஹ் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்றாவது தொழுகையை நிறைவேற்றுங்கள். இதுவே தொழுகைக்கு அழகு! இதுவும் நபி மொழிக் கருத்து என்பதை நாம் அறிவோம்.

தொழுகையில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து நூற்றுக் கணக்கான நபி மொழிகள் நமக்கு வழி காட்டுகின்றன. ஆனால் நாம் தொழுகையை இயந்திரத் தனமாக அன்றாடம் நாம் செய்கின்ற ஒரு “பழக்கமான செயலாக” (habitual act) செய்து வருகிறோம்.

இப்போது நாம் கேட்டுக் கொள்வது என்னவென்றால் – இன்றிலிருந்து முயற்சி செய்யுங்கள்; உடனேயே “முழு வெற்றி” கிடைத்து விடும் என்று எதிர் பார்க்காதீர்கள்; தொடர்ந்து முயற்சி செய்து வாருங்கள்; உங்களின் முயற்சி அளவுக்கு வெற்றி கிடைக்கும்.

தொழுகையில் உங்களுக்குக் கிடைக்கும் இந்தப் பயிற்சியை நம் வாழ்வின் இதர செயல்களுக்கும் கடைபிடித்துப் பாருங்கள்.

சான்றாக – உணவு உண்ணும் சமயம் – நீங்கள் உணவு உண்ணுவது குறித்தே சிந்தித்திட வேண்டும். பிஸினஸ் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது.

உணவு உண்ணும் போது – இறைவன் பெயரால் துவக்குகின்றீர்கள். அதனைத் தந்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றீர்கள்.அதன் ருசிக்காக உங்கள் மனைவிக்கு நன்றி செலுத்துகின்றீர்கள். அருகில் இருப்பவருடன் பகிர்ந்து உண்ணுகிறீர்கள். நிதானமாக உண்ணுகிறீர்கள். அழகாக உண்ணுகிறீர்கள்;

மனைவியுடன் பேசுகிறீர்களா? அப்போதும் கையில் ஒரு பேப்பரை வைத்துக் கொண்டு மனைவி பேச்சுக்கு “உம்” “உம்” போட்டுக் கொண்டிருக்க வேண்டாம். முழுமையாக மனைவி சொல்வதை காதில் வாங்குங்கள்; அவள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் விதமாக நடந்து கொள்ளுங்கள்.

மனைவியை நெருங்கும் நேரமா? அது குறித்து மட்டும் நினையுங்கள்;

இப்படி வாழ்வின் எல்லா – பெரிய சிறிய – கட்டங்களிலும் – நிகழ் காலத்தில் வாழ்ந்து பாருங்கள். அதுவே வாழ்க்கை!

இப்பயிற்சியை அலட்சியம் செய்வதால் என்ன ஏற்படுகிறது? அதாவது – “கடந்த கால-எதிர்கால” வாழ்க்கையாளர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

கவலையோடு காணப் படுவார்கள்.

படபடப்போடு எதையும் செய்வார்கள்.

எந்த ஒன்றையும் முழுமையாக முடிக்க மாட்டார்கள்.

அவசரப் படுவார்கள். வேக வேகமாக நடப்பார்கள்.

யாரிடம் பேசும் போதும் கவனமாகக் கேட்க மாட்டார்கள்.

அவசர முடிவுகள் எடுப்பார்கள்; அந்த முடிவுகள் அவருக்கு நன்மை பயக்காது.

நண்பர்களை இழந்து விடுவார்கள்; பணியிடத்தில் திட்டு விழும்;

விபத்துகளில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

வேண்டாம் நண்பர்களே! நிகழ் காலத்தில் வாழ முயற்சிப்போம். நிம்மதியாக வாழ்வோம்!!

எதில் இருக்கிறது சூட்சுமம்?

வல்லோன் அல்லாஹு தஆலா வகுத்தளித்த நமது மார்க்கத்தின் அடிப்படை அம்சங்களுள் ஒன்று: மற்றவர்களுக்கு வழங்கி வாழ்தல் என்பதாகும். மற்றவர்களுக்கு வழங்கி வாழுங்கள் என்பது - வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே இடப்பட்ட கட்டளை அன்று! எல்லாருக்கும் தான்.

வழங்குவதற்கென்று ஒரு மனம் வேண்டும். ஆனால் அது (மற்றவர்களுக்கு மனம் உவந்து வழங்குகின்ற தன்மையைப் பெற்றுக் கொள்தல்) சுலபம் அல்ல! இந்தத்தன்மையை நாம் வளர்த்துக் கொண்டாக வேண்டும். எப்படி?

அடுத்து – கோபத்தைக் கட்டுப்படுத்திட நாம் விரும்பத்தான் செய்கின்றோம். ஆனாலும் பெரும்பாலான கட்டங்களில் நமக்கு அது இயல்வதில்லை! கோபத்தைக் கட்டுப்படுத்துதல் சுலபம் அல்ல! அதனை நாம் கற்றுக் கொண்டாகத் தான் வேண்டும். எப்படி?

அது போலவே – நமக்கு ஏதாவது ஒரு தீங்கு இழைத்தவரை மன்னிப்பது என்பதும் அப்படித்தான். அதுவும் சுலபம் அல்ல! மற்றவர்களை மன்னிக்கும் தன்மையை நாம் வளர்த்துக் கொள்தல் அவசியம். எப்படி?

பின் வரும் வசனத்தைப் படியுங்கள்:

அவர்கள் எத்தகையோர் என்றால், அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.(3:134)

நாம் மேலே குறிப்பிட்ட மூன்று தன்மைகளையும் பெற்றுக் கொண்டவர்களை “முஹ்ஸினீன்” என்று குறிப்பிடுகின்றான் வல்லோன் அல்லாஹு தஆலா.

முஹ்ஸினீன் என்பதை நன்மை செய்வோர் என்று பொதுவாக பொருள் கொள்தல் போதாது. ஈமானின் மிக உயர்ந்த நிலை தான் இஹ்ஸான். இந்த இஹ்ஸானின் நிலையை அடைந்தவர்களைத்தான் அல்லாஹ் முஹ்ஸினீன் என்று குறிப்பிடுகின்றான்.

இந்த இஹ்ஸான் எனும் உயர்ந்த நிலையைப் பெற்றுக் கொள்வது எப்படி?

இந்த நபிமொழியைப் படியுங்கள்:

இஹ்ஸான் என்றால் என்ன ? என்று நபியவர்களிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கேட்கும் போது, ”(தொழுகையில்) அல்லாஹ்வை நீ பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்க்கிறான் என்று (எண்ணி) நீ அவனை பார்ப்பது போன்று வணங்குவதாகும்” என்றுபதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி

நமது தொழுகையில் இந்தத்தன்மை நமக்கு வந்து விட்டால் அந்த மூன்று பண்புகளும் நமக்குள் தாமாகவே ஊற்றெடுக்கத் தொடங்கி விடும்.

ஆனால் நமது தொழுகையின் நிலை என்ன?

பின் வரும் நபிமொழியைப் படியுங்கள்:

“ஒரு அடியான் தொழுகிறான் எனில் – அதில் பத்தில் ஒரு பங்கு மட்டுமே அல்லது ஒன்பதில் ஒரு பங்கு மட்டுமே அல்லது எட்டில் ஒரு பங்கு மட்டுமே அல்லது ஏழில் ஒரு பங்கு மட்டுமே அல்லது ஆறில் ஒரு பங்கு மட்டுமே அல்லது ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே அல்லது நான்கில் ஒரு பங்கு மட்டுமே அல்லது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அல்லது இரண்டில் ஒரு பங்கு மட்டுமே அவருக்காக எழுதப் படுகின்றது.” (சுனன் அபூதாவுத் மற்றும் அந்-நஸாஈ)

இதில் நாம் எங்கே இருக்கின்றோம் என்று நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்வோம்.

அட! நமது நிலை “பத்தில் ஒரு பங்கு” என்று நபியவர்கள் குறிப்பிட்ட நிலை என்றே வைத்துக் கொள்வோம். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறலாம் தானே? அப்படி முன்னேறும் போது – பிறருக்கு வழங்குதல் என்பது நமது இயல்பாகவே மாறி விடும். கோபத்தை விழுங்குதலும் நமக்கு கை கூடி விடும். மன்னிக்கும் மனப்பான்மையும் நமக்குள் ஊற்றெடுக்கத் தொடங்கி விடும். சரி தானே?

சூட்சுமம் நமது தொழுகையில் இருக்கிறது!

Comments