விடலைப்பருவம் - 1

விடலைப் பருவத்து இளைஞர்கள் மற்றும் இளைஞிகளின் மன நிலை!

பெற்றோர்கள் தங்கள் விடலைப் பருவத்துச் செல்வங்களின் எதிர்காலம் குறித்து ஆழமாகக் கவலைப்படுவார்கள்! தாம் பெற்றெடுத்த செல்வங்களின் வாழ்க்கையில் - மகிழ்ச்சி, பொருள் வளம், உடல் நலம், பாதுகாப்பு - இவையெல்லாம் நிறைவாக இருந்திட வேண்டும் என்று பெரிதும் விரும்புவார்கள். அவர்களின் நல்லெண்ணத்தில்  எந்த சந்தேகமும் இல்லை!


இந்த அடிப்படையில் தாம் பெற்றெடுத்த விடலைச் செல்வங்களுக்கு உதவி செய்திட  முன் வருவார்கள் கவலைப்படும் பெற்றோர்கள்! ஆனால் - அந்த விடலைச் செல்வங்களோ அந்த உதவியை - தங்கள் விஷயத்தில் பெற்றோர்கள் தேவையின்றித் தலையிடுவதாக எடுத்துக் கொள்வார்கள்! எரிச்சல் படுவார்கள்!

அவர்களுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்று அச்சப்படுவார்கள் பெற்றோர்கள்! ஆனால் - "நாங்கள் என்ன இன்னும் சின்னக் குழந்தைகளா?" என கேட்பார்கள் விடலைகள்.

அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பெற்றோர்கள் சற்றே கூர்ந்து கவனித்தால் - அதனை தன் மீது பெற்றோர் தொடுக்கும் போராகவே எண்ணுவார்கள் - விடலைகள்!

அவர்களுக்கு அறிவுரை சொல்ல முன் வருவார்கள் பெற்றோர்கள்! ஆனால் அவர்கள் - "எங்களை இன்னும் ஏன் அடக்கி வைக்க நினைக்கிறீர்கள்?" - என்று புறம் தள்ளி விடுவார்கள் பெற்றோர்களின் அறிவுரைகளை!

தன் விருப்பத்தில் குறுக்கிட யாரையும் அனுமதிக்க மாட்டார்கள்! அப்படி யாராவது குறுக்கிட்டால் - அது யாராக இருந்தாலும் அவர்களைத தங்களின் எதிரியாகவே எண்ணத் தொடங்கி விடுவார்கள்!

இப்படிப்பட்ட விடலைகளின் பெற்றோர்களுக்கு - இஸ்லாமிய அடிப்படையில் வழிகாட்டிட வேண்டியது அறிஞர்களின் கடமை!

Comments