திருமணத்துக்கு முன் வழிகாட்டும் ஆலோசனை – பகுதி 1


தாயின் மடியில் மகள்!

அது வரை வெகுளியாக துள்ளிக் குதித்து ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த சிறுமி – இப்போது அவள் பருவமடைந்த ஒரு பெண்!

உடல் வளர்ச்சியிலே சில மாற்றங்கள். மனத்தளவிலும் பல மாற்றங்கள்.


அது வரை பெற்ற தாயிடம் அனைத்தையும் பேசித்தீர்த்து விடுகின்ற அவள் இப்போதெல்லாம் சற்றே அம்மாவிடமிருந்து விலகுகின்றாள். தாய்க்கு ஒன்றும் புரிவதில்லை! பேச்சு கொடுத்தாலும் ஒரு வரி பதில் தான்!


என்ன ஆயிற்று என் அன்பு மகளுக்கு என்று திகைக்கின்றாள் தாய்!

பொதுவாகவே தாய் மகள் உறவு என்பது ஒரு அற்புதமான உறவாகும். ஒரு தாய்க்கும் மகனுக்குமான உறவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

தாயும் ஒரு பெண். மகளும் ஒரு பெண். எனவே இருவருக்குமே பொதுவான இயல்புகள்!

பெண் உணர்வு மயமானவள். உணர்வுகளைப் புரிந்து கொள்பவள். உணர்வுகளுக்கு மொழி வடிவம் கொடுத்து பேசுவதில் சிறந்தவள். (ஆண்களுக்கு இது கஷ்டம்!). எனவே ஒருதாய் தன் மகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு நடப்பது எளிது!

அது போலவே பெண்கள் உணர்ச்சி வசப்பட்டு விடுபவர்கள். எது அவர்களுக்கு பலமோ அதுவே அவர்களின் பலவீனமும் கூட! அவர்கள் சில சமயங்களில் சிந்தனை ஏதுமின்றி உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது செய்து விடுவார்கள். ஆனால் பின்னர் வருந்துவார்கள்!

எனவே பருவமடைந்த தன் மகளுக்கு அவள் தன் உணர்வுகளைக் கையாள்வது குறித்து ஒரு தாயின் வழிகாட்டுதல் அவசியம்.

இப்படிப்பட்ட தாய்க்கு சில இங்கே சில குறிப்புகள்:

உங்கள் (அதாவது பெற்றோர்களின்) இல்லற வாழ்வு மகிழ்ச்சியாக விளங்கட்டும். மகளின் முன்னால் சண்டையிட வேண்டாம்.

குடும்பத்தில் இஸ்லாமிய சூழல் அவசியம். தொழுகை, குர்ஆனை ஓதுதல் மட்டுமல்ல; உடை விஷயம், ஹலால்- ஹராம் விஷயம் அனைத்திலும் மார்க்கத்தின் வழிகாட்டுதல்கள் பேணப்பட வேண்டும்.

குடும்பத்தில் நெகிழ்ச்சிக்கு இடமளிக்கின்ற கட்டுப்பாடுகள் அவசியம். பொருள்களை ஒழுங்கு படுத்தி வைத்தல் மற்றும் ‘இந்த நேரத்தில் இது தான்’ எனும் நேரக்கட்டுப்பாடு – இவை அனைத்தும் பேணப்பட வேண்டும்.

இப்படிப்பட்ட சூழலில் பருவமடைந்த ஒரு முஸ்லிம் பெண் வளர்ந்து வரும்போது அவளுக்கு ஒரு பிரச்னை! அது என்ன?

பருவமடைந்த பெண்களை நாம் படிக்க வைக்க பள்ளிக்கோ கல்லூரிக்கோ அனுப்பி வைக்கின்றோம். ஆனால் அங்கே வேறு ஒரு சூழ்நிலை. அங்கே மாணவர்களும் மாணவிகளும் சேர்ந்து படிக்கின்ற சூழல். பெரும்பாலான மாணவர்களும் மாணவிகளும் முஸ்லிம் அல்லாதவர்கள். இன்றைய பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் இஸ்லாத்தின் இயல்புகளுக்கு முற்றிலும் வேறுபட்ட ஒரு கலாச்சாரச் சூழல். அது மேற்கத்திய கலாச்சாரத்தைத் தழுவியதொரு புதிய கலாச்சாரம்.

அங்கே ஒரு மாணவனும் ஒரு மாணவியும் தனிமையில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். இருவரும் சேர்ந்து தேநீர் அருந்த செல்வார்கள். அவர்கள் இருவரும் தங்களை “நண்பர்கள்” (boy friend-girl friend) என்று அறிமுகப்படுத்திக் கொள்வார்கள்.

இந்தச் சூழலில் ஒரு முஸ்லிம் பெண் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்கிறாள். மற்ற மாணவிகளோ – “ஏன் ஒதுங்கிச் செல்கிறாய்? ஏங்களோடு கலந்து பழகிட வேண்டியது தானே? ஏன் தயக்கம்?” – என்று அழைப்பு விடுக்கின்றார்கள். இதற்குப் பெயர் தான் – peer pressure!

நமது முஸ்லிம் பெண்ணுக்கு சற்றே மனக்குழப்பம்!

இப்படிப்பட்ட ஆண்-பெண் கலந்துறவாடும் கலாச்சாரத்துக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்பது அவளுக்கு நன்றாகவே புரிகின்றது. ஆனால் அதே நேரத்தில் மற்ற மாணவிகளிடமிருந்து முற்றாக விலகிச் செல்வதையும் அவள் மனம் ஏற்க மறுக்கின்றது! தான் தனித்து விடப்பட்டதைப் போல உணர்கிறாள் அவள்.

இந்த மனப்போராட்டத்தை அவள் யாரிடம் பகிர்ந்து கொள்வாள்?

தன் தாயிடம் தானே!

இதோ ஓடி வருகின்றாள் நீங்கள் பெற்ற உங்கள் அருமை மகள்! தன் உள்ளத்தில் கிடப்பதை அள்ளிக் கொட்டுகின்றாள் அவள்.

தாயின் மடியில் மகள்!

அவளுக்கு நீங்கள் தரப்போவது என்ன?


என் தாய் என்னைப் புரிந்து கொள்வதே இல்லை!

பெண்கள் உணர்ச்சிமயமானவர்கள் என்பதை முன்னரேயே சொல்லியிருக்கின்றோம் அல்லவா?

உங்கள் பருவமடைந்த மகளும் அப்படித்தான் என்பதை முதலில் ஒரு தாய் அவசியம் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

இது நாள் வரை நன்றாகப் பழகிக் கொண்டிருந்த ஒரு தோழி திடீரென்று தன்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டு விட்டால் உணர்ச்சிவசப்படுவாள் பெண்!

அக்கம்பக்கத்தில் உள்ள பெண்கள் எல்லாம் சேர்ந்து கூட்டாஞ்சோறு ஆக்கப்போகிறார்களாம்; சென்ற தடவை தன்னைச் சேர்த்துக் கொண்டவர்கள் இந்தத்தடவை என்னவோ தெரியவில்லை – சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் சோகமயமாகி விடுவாள் பெண்!

இது போன்ற தருணங்களில் தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முதலில் ஒரு பெண் நாடுவது தன் தாயைத்தான்!

ஆனால் – ஒரு தாய் – தன் மகள் தன்னிடம் வந்து – தனது உள்ளக் கிடக்கைகளைப் பகிர்ந்து கொள்ள முற்படும்போது – “ஆமாம்! இதுவெல்லாம் ஒரு பிரச்னையா? அவர்கள் கிடக்கின்றார்கள்! நீ போய் வேறு வேலையைப் பார்!” என்று சொல்லி விட்டால்…..?

மகள் என்ன நினைப்பாள் தெரியுமா?

என் தாய் என்னைப் புரிந்து கொள்வதே இல்லை!

ஒரு தடவை, இரண்டு தடவை என்று தன் தாயிடம் ஒரு மகள் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முற்படும்போது – தன் தாய் அதற்கு சரியாக செவி சாய்க்கவில்லை எனில் என்ன செய்வாள் மகள்?

தன் தாயிடம் பேசுவதைப் படிப்படியாக குறைத்துக் கொண்டு விடுவாள் மகள்!

இது தான் முதல் ஆபத்து!

எனவே தான் சொல்கின்றோம்: உங்கள் மகள் உங்களிடம் வந்து தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வரும்போது – உங்கள் தலைக்கு மேலே என்ன வேலை இருந்தாலும் – அவைகளை அப்படியே வைத்து விட்டு – உங்கள் மகளுக்காக நேரம் ஒதுக்கி அவள் சொல்வதை காது தாழ்த்தி முழுமையான கவனத்துடன் கேளுங்கள்!

இப்படி நேரம் ஒதுக்குவதை – Quality time – என்று சொல்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்.

அவர்கள் சொல்வதை நீங்கள் அக்கரையுடன் கேட்பது ஒன்றே கூடப் போதும் அவர்களுக்கு! அவர்களின் பிரச்னைகளுக்கு நீங்கள் தீர்வு சொல்லிட வேண்டிய அவசியம் கூட இல்லை! தன்னைப் புரிந்து கொள்கிறாளா தன் தாய் என்பதே மகளின் எதிர்பார்ப்பு!

தன் மகள் தன்னிடம் ஏதோ சொல்ல வருகின்றாள் என்றால் ஒரு தாய் என்ன செய்திட வேண்டும்; என்னவெல்லாம் செய்திடக்கூடாது என்பதைப் பார்ப்போம்.

தன் மகள் சொல்ல வருவதை தான் காது கொடுத்துக் கேட்கத் தான் தயார் என்பதை அவளுக்கு உணர்த்திட வேண்டும். அந்த சமயத்தில் அந்த ஒரு வேலையை விட வேறு எந்த வேலையும் தனக்கு முக்கியம் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ளச் செய்திட வேண்டும்.

தன் மகளுடன் உரையாடும் போது – அந்த உரையாடல் – ஒரு நெகிழ்ச்சியான சூழலாக (relaxed atmosphere) அமைந்திட வேண்டும். இருக்கமான சூழலாக மாற விட்டு விடக்கூடாது!

மகள் சொல்வதை உன்னிப்பாக கவனித்துக் கேட்டிட வேண்டும். (active listening);

அடிக்கடி குறுக்கிட்டு இடை மறித்துப் பேசிடக் கூடாது.

அதனை ஒரு விவாதமாக மாறிட அனுமதித்திடக் கூடாது.

அந்த சமயத்தில் போய் உங்கள் மகளின் குறைகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கக் கூடாது.

மாறாக உங்கள் மகளின் நற்குணங்களைப் பாராட்டிட இந்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

நீங்கள் பேசிடும் போது மென்மையைக் கடைபிடிக்க வேண்டும்.

உங்கள் மகளின் உணர்வுகளைத் தாம் புரிந்து கொள்வதாக அவளிடம் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு நீங்கள் தொடர்ந்து உங்கள் மகளிடம் ஒரு கருத்துப் பரிமாற்றத்தை (open communication) வைத்துக் கொள்தல் மிக மிக அவசியம். இது ஒன்றே உங்கள் மகள் தனது உணர்ச்சிப் போராட்டங்களைத் திறமையுடன் கையாள்வதற்கு மிகச் சிறந்த துணையாக அமைந்திடும்.

அப்படிப்பட்ட ஒரு தாய் தனக்கு இல்லாதபோது அல்லது தன் தாய் தனது உணர்வுகளை உதாசீனப்படுத்தும்போது ஒரு மகள் என்ன செய்வாள்? எங்கே செல்வாள்?

யோசிக்க வேண்டிய விஷயம் இது!


மகளே! நீ ஒரு பொக்கிஷம்!!

“மனிதர்கள் சுரங்கங்கள்! தங்கத்தைப் போல, வெள்ளியைப் போல!” – என்றார்கள் நபியவர்கள்.

மனிதர்கள் அனைவருமே தங்கத்தைப் போல வெள்ளியைப் போல் எனும் போது நீங்கள் பெற்றெடுத்த செல்வங்கள் அனைவருமே விலை மதிப்பற்ற சுரங்கங்கள் தானே! They are so precious!

நபி மொழி ஒன்று உண்டு:

“உங்கள் குழந்தைகளை கண்ணியப்படுத்துங்கள்!” – (இப்னு மாஜா)

இந்த நபி மொழியின் படி உங்கள் மகளை நீங்கள் கண்ணியப்படுத்திட வேண்டும்!

எப்படி கண்ணியப்படுத்துவீர்கள்?

இதோ இன்னொரு நபி மொழி:

“பெண்கள் பொக்கிஷங்கள்!”

இந்த நபிமொழியை மனதில் வைத்து – பெற்றோர்கள் தங்கள் மகள்களிடம் – “நீ ஒரு பொக்கிஷம்… நீ ஒரு பொக்கிஷம்!” – என்று வலியுருத்திக் கொண்டே இருந்திட வேண்டும்!

ஆங்கிலத்தில் ஒரு சொற் பிரயோகம் உண்டு: அதனை Self Esteem என்று சொல்கிறார்கள். இதற்கு “சுய மதிப்பு” என்று பொருள் கொள்ளலாம். அதாவது – நமக்கு நாமே போட்டுக் கொள்கின்ற மதிப்பு!! அதாவது நமது மதிப்பை நாம் தான் நிர்ணயம் செய்து கொள்கிறோம். இந்த Self Esteem நமது வாழ்க்கையின் வெற்றிக்கு மிக அவசியம்.

நம்மைப் பற்றிய நமது மதிப்பீடு குறைவாக இருக்கிறது என்றால் இதனை Low Self Esteem என்கிறார்கள். இப்படி குறைவாக தங்களை மதிப்பிட்டுக்கொள்பவர்கள் தான் தங்கள் வாழ்வை நாசப் படுத்திக் கொண்டு விடுகிறார்கள். இது ஏனெனில் தங்களைப் பற்றி உயர்வான எண்ணம் அறவே இல்லாத காரணத்தினால் – தவறுகளில் வீழ்வது ஒன்றும் அவர்களுக்குப் பெரிய இழப்பாகத் தோன்றுவதில்லை!

எனவே பெற்றோர்கள் செய்திட வேண்டியது எல்லாம் தங்கள் குழந்தைகளின் – குறிப்பாக தங்கள் மகள்களின் – சுய மதிப்பீட்டை “கட்டி எழுப்பிட வேண்டும்”. (to build a strong self esteem).

எப்படி கட்டி எழுப்புவது நமது மதிப்பீட்டை?

இதற்கு இரண்டு வழிகள் தான் உண்டு?

ஒன்று – உங்களுக்கும் உங்களைப் படைத்த இறைவனுக்கும் ஒரு உறவுப் பாலத்தை அமைத்துக் கொள்வது.

இரண்டு – என்னால் இவ்வுலகுக்கு “எனது திறமைகளைக் கொண்டு நல்லதொரு பங்களிப்பைச் செய்திட முடியும் என்று கருதும் போது!

இரண்டு: என்னால் இவ்வுலகுக்கு “எனது திறமைகளைக் கொண்டு நல்லதொரு பங்களிப்பைச் செய்திட முடியும்!” – என்று ஒருவர் கருதும் போது அவரின் சுய மதிப்பு உயர்கிறது! இது எப்போது சாத்தியம் என்றால் – ஒருவன் தனது உள்ளாற்றல்களைக் கண்டு பிடித்திடும் போது தான். இதனை ஆங்கிலத்தில் Self discovery என்கிறார்கள். இது குறித்து நாம் பின்னர் பார்ப்போம்.

இப்போது முதல் வழியை மட்டும் இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்:

என்னைப் படைத்த இறைவனை நான் ஏற்றுக் கொள்ளும் போது – எனக்குள் அது ஏற்படுத்தும் மாற்றம் என்ன தெரியுமா?

நாம் கொள்ளும் இறை நம்பிக்கை – நமக்கும் இறைவனுக்கும் இடையே ஓர் உறவுப் பாலத்தை அமைத்து விடுகிறது!

அவனே என்னைப் படைத்தவன்! அவனே என்னை பரிபாலிப்பவன்! அவனே என் தேவைகள் அனைத்தையும் கவனித்துக் கொள்பவன்! அவனே என் எஜமானன்! நான் என்னைப் படைத்த என இறைவனின் அடிமை!

இப்படி நாம் சிந்திப்பதால் எனது மதிப்பீடு எப்படி உயரும் என்று ஒருவர் கேட்கலாம்?

நான் என் இறைவனின் அடிமை எனில் நான் என் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் நான் அடிமை இல்லை என்பதும் பொருள்!

“நான் என் இறைவனைத் தவிர் வேறு யாருக்கும் அடிமை இல்லை!” – என்று நான் சிந்திக்கும் போது எனது மதிப்பீடு உயருகிறதா இல்லையா?

எனவே பெற்றோர்கள் செய்திட வேண்டியதெல்லாம் – தங்கள் மகள்களிடம் பேசும்போதெல்லாம் – “அம்மா! நீ அல்லாஹ்வை ஈமான் கொண்ட பெண்! அவன் உன்னைக் கண்ணியப்படுத்தியிருக்கின்றான்! உன்னை ஒரு பொக்கிஷம் என்கிறான் அவன்! நீ விலை மதிப்பற்றவள்! மகளாக, மனைவியாக, தாயாக – என்று அல்லாஹுத ஆலா – உன்னை எல்லா நிலைகளிலும் சிறப்பாக்கி வைப்பான்!” – என்கின்ற முறைகளில் தான் பேசிட வேண்டும்!

அவர்களை ஒருக்காலும் நீங்களே குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது!

தன்னை உயர்வாக எண்ணுகின்ற ஒரு பெண் – தன்னை இறைவனின் அடிமை என்று நம்புகின்ற ஒரு பெண் – தவறான சூழ்நிலைகளில் எப்படி நடந்து கொள்வாள்?

நம்பிக்கை கொண்ட ஒரு பெண் – ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் – “மற்றவர்கள்” எப்படி செயல் படுகின்றார்கள் என்று பார்க்கவே மாட்டாள்! அல்லாஹு தஆலா என்ன சொல்லியிருக்கின்றான் என்றே அவள் பார்த்திடுவாள்!

சக மாணவிகள் அனைவரும் ஒரு வழியில் சென்றாலும் – தன்னைப் பற்றிய உயர்வான எண்ணத்தைக் கட்டியெழுப்பிக் கொண்ட ஒரு பெண் – மற்றவர்கள் வழி சென்றிடவே மாட்டாள்!

இறை நம்பிக்கை கொண்ட ஒரு பெண்மணி – இஸ்லாமிய வழிகாட்டுதலின் படி உறுதியுடன் நடந்திடும்போது  அதனைக் குறித்து மற்றவர்கள் கேள்வி எழுப்பினால் – அதனை எவ்வாறு எதிர்கொள்வாள்?

சான்றுக்கு ஒன்று:

நோபல் பரிசுப் பெற்ற யெமன் நாட்டின் தவக்குல் கர்மானிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வியொன்றை எழுப்பினார்!

“ஏன் நீங்கள் ஹிஜாபை அணிகின்றீர்கள் ? அது எவ்வாறு உங்களுடைய கல்விக்கும், அறிவுக்கும் பொருந்துகிறது ?” என்று.

தவக்குல் கர்மான் இவ்வாறு பதிலளித்தார்: “ஆதி மனிதர்கள் நிர்வாணமாக இருந்தார்கள். அவர்களுடைய அறிவு வளர்ச்சி அடைந்த பொழுது ஆடையை அணியத் துவங்கினார்கள். நானும், எனது ஆடை முறையும் பிரதிபலிப்பது மனிதன் பெற்ற மிகவும் உன்னதமான கலாச்சாரத்தை ஆகும். மனிதன் மீண்டும் நிர்வாணமாக மாறுவது அவன் தனது துவக்க காலத்தை நோக்கி செல்வதன் அடையாளமாகும்.” என்றார்!

இதற்குப் பெயர் தான் நெத்தியடியோ?

Comments