வீட்டுக்காரியின் வேலைகள்!

கணவன்மார்களே! மனைவியின் நிலையில் உங்களை வைத்து சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

அவர்களின் அன்றாட வேலைகள் என்னென்ன என்று பட்டியலிட்டுப் பாருங்கள். சமைப்பது, துணி துவைப்பது, குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது என்று அந்தப் பட்டியலை சுருக்கி விடலாம் நாம்.




ஆனால் அவர்கள் செய்கின்ற சிறிய சிறிய வேலைகளை சற்றே உற்று கவனியுங்கள். அதில் அவர்கள் படுகின்ற அல்லல்களை கவனியுங்கள். அந்த சிறிய வேலைகளைக்கூட ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நம்மால் செய்திட முடியுமா என்று எண்ணிப்பாருங்கள்.

காலையில் குழந்தைகளை எழுப்பி விடுதல் என்று ஒரு வேலை! கணினியில் – Enter – பட்டன் தட்டுவதைப்போல அல்ல இந்த வேலை! சில குழந்தைகள் என்னமாய் பாடாய் படுத்தும் தெரியுமா?

அது இருக்கட்டும்; நீங்கள் அனுதினமும் குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து விடுபவர் தானா?

குழந்தைகளை எழுப்பி, அவர்களை பல் துலக்க வைத்து, குளிப்பாட்டி, உடை அணிவித்து, தலை சீவி, உணவு ஊட்டி விட்டு, மதிய உணவையும் தயாரித்து டப்பாவில் அடைத்து, பாட்டிலில் தண்ணீர் நிரப்பி – அனைத்தையும் குறித்த நேரத்துக்குள் செய்து முடித்து – குழந்தைகளை பள்ளிகளுக்கும் அனுப்பி விட்டு -

- அதே நேரத்தில் – உங்களையும் அது போன்றே கவனித்து – உங்களை அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கின்ற – இந்த காலை நேர ஒரே ஒரு வேலையை மட்டும் ஒரு மூன்று நாட்களுக்கு நீங்களே செய்து பாருங்களேன்!

அந்த மனைவிக்கு நீங்கள் தருவது என்ன?

ஒரு பாராட்டு? புன்னகை கலந்த ஒரு பார்வை? நன்றியான சொற்களுடன் ஒரு ஆசை முத்தம்?

நமது அவசர கதியில் இதற்கெல்லாம் எங்கே நேரம் என்கிறீர்களா?

சரி! காலை வேலைகளை முடித்து விட்டு அவர்கள் சிற்றுண்டி சாப்பிடும் நேரம் என்ன? பத்து அல்லது பத்தரை மணி!

அடுத்தது – அடுக்களைப் பணி! சமையலறையை சுத்தம் செய்வது! முதல் நாள் சமையல் மிச்சங்களின் “வாசனையை” முகர்ந்து பார்த்ததுண்டா நீங்கள்?

ஒரு தடவை பாத்திரங்கள் கழுவும் வேலையைச் செய்து பாருங்களேன்! தோள் பட்டை மற்றும் இடுப்பு வலி என்று மூன்று நாட்களுக்குச் சொல்லிக் காட்டிக் கொண்டிருப்போம் நாம்!

ஒரு நாள். ஒரே ஒரு நாள். சமையல் பொறுப்பு முழுவதையும் நீங்களே ஏற்றுக் கொண்டு செய்து பாருங்களேன்! அவ்வளவு வேண்டாம். காய்கறிகளை நறுக்குவது மட்டும்? ஒரு நாள் செய்து பாருங்களேன். பொறுமை இருக்காது நமக்கு!

ஆனால் ஒவ்வொரு நாளும் – தொடர்ந்து செய்திட வேண்டி இருக்கின்றதே என்று அலுத்துக் கொள்ள முடியுமா அவர்களால்? செய்து தானே தீர வேண்டும்!

மதியம் சற்றே அவர்களுக்கு ஓய்வு கிட்டும் தான். ஆனால் – அவர்களின் கவலை என்னென்ன தெரியுமா?

வீட்டுக்கு ஒட்டடை அடிப்பது எப்போது? ஜன்னல்களைத் துடைப்பது எப்போது? தரைகளைக் கழுவி விடுவது எப்போது? கழிவறைகளை சுத்தம் செய்வது எப்போது?

ஒவ்வொன்றாக நிதானமாகப் பார்ப்பார்கள்! உங்களை எப்போதாவது துணைக்கு அழைப்பார்கள்.

நமது பதில்: “ம்ஹூம்! நான் மாட்டேன்ப்பா!”

இதற்கிடையில் – உடல் நலம் இல்லாத மாமனாரை / மாமியாரைக் கவனித்துக் கொள்ள வேண்டும்; வீட்டுக்கு வரும் விருந்தினர்களைக் கவனித்து அனுப்ப வேண்டும்;

பல வீடுகளில் – மாதாந்திர பட்ஜெட் போடுதல், ரேஷன் கடைக்குப் போய் வருதல், காய்கறி வாங்கி வருதல்….. எல்லாமே “வீட்டுக்காரியின்” வேலைகள் தான்.

குடும்பத்தில் யாருக்கேனும் உடல் நலம் இல்லையா? கவலை மட்டுமல்ல; கூடுதல் வேலைகளும் மனைவிக்குத்தான்!

ஆனால் – மனைவிக்கு உடல் நலம் இல்லாமல் போய் விட்டால்?

சிரமம் பார்க்க மாட்டார்; முடிந்த வரை எல்லா வேலைகளையும் தொடர்ந்து செய்திட முயற்சித்துக் கொண்டே இருப்பார்! இயலாமல் போகும் வரை!

வேலை! வேலை! வேலை!

வேலை செய்யும் மெஷின்! அயராது வேலை செய்திடும் மெஷின்! குறை சொல்லாத மெஷின்!

அவர்களுக்கு கணவன்மார்கள் தரப்போவது என்ன?

இரண்டு ஆலோசனைகள்:

ஒன்று

வீட்டு வேலைகளில் இயன்ற அளவு பங்கெடுங்கள். இது நபியவர்களின் முன்மாதிரி என்பதை மறக்க வேண்டாம்.

ஆயிஷா (ரலி) சொல்கிறார்கள்: நபிகளார் மனிதர்களில் ஒரு மனிதராக இருந்தார்கள். தம் ஆடைகளைத் தாமே துவைப்பார்கள். ஆட்டில் பால் கறப்பார்கள். தம் வேலையைத் தாமே செய்து கொள்வார்கள். (முஸ்னது அஹ்மது 26237)

தம் ஆடையைத் துவைப்பார்கள். அறுந்து விட்ட தம் செருப்பையும் தைப்பார்கள். வீட்டில் ஆண்கள் செய்ய முடிகின்ற வேலைகளைச் செய்வார்கள். (முஸ்னது அஹ்மது 26282)

இரண்டு:

உங்கள் மனைவியை – நீங்கள் வெளியே அழைத்துச் செல்லுங்கள்! அவ்வப்போது! அவர்களுடன் ஆசை தீர உரையாடுங்கள். அவர்களின் மனத்தைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பாக அந்த சூழலைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவர்களுக்காக சற்றே தாராளமாகச் செலவு செய்யுங்கள்.

நபியவர்கள் போர்க்களங்களுக்குச் செல்லும்போது கூட தமது மனைவியருள் ஒருவரை அழைத்துச் செல்வது வழக்கம்!

உங்களுக்கு என்ன தான் வேலைப்பளு இருந்தாலும் – மனைவிக்கென குறிப்பிட்ட நேரத்தை நீங்கள் ஒதுக்கியே ஆக வேண்டும்.

மார்க்கம் தடுத்திடாத எந்த ஒன்றாக இருந்தாலும் – அது உங்கள் மனைவியின் விருப்பமானால் அந்தத் தேவைகளை அவர்களோடு சேர்ந்து நிறைவேற்றிக் கொடுங்கள். “இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை!” – என்று அலட்சியம் செய்து விடாதீர்கள்!

நீங்கள் உங்கள் மனைவியை நேசிப்பது உண்மையானால்  அவர்களுடைய சிறிய சிறிய ஆசைகளையும் – சலிக்காமல் நிறைவேற்றிக் கொடுங்கள்!

என்ன நடக்கும்?

அவர்களின் களைப்பு தீரும். புத்துணர்வு பெறுவார்கள்! அதனால் காதல் மலரும் – உங்களுக்குள்!!

Comments