குழந்தைக்கு அம்மா யார்?

சொற்பொழிவு ஒன்றில் கேட்ட நினைவு.

அவர் ஒரு சிறந்த மார்க்க அறிஞர். அவரது பெயர் - இப்ராஹிம் இப்னு அத்ஹம். ஒரு நாள் அவரிடம் ஆலோசனை கேட்க ஒருவர் வந்திருந்தாராம்.

'குழந்தை வளர்ப்பது எப்படி என்பது குறித்து தங்களிடம் ஆலோசனை பெற வந்துள்ளேன்'.

அறிஞர் கேட்டார்: 'உங்கள் குழந்தையின் வயது என்ன? '





‘ஒரு மாதம்!’

'நீங்கள் மிகவும் தாமதமாக வந்துள்ளீர்களே!'

'ஏன்? அப்படியானால் நான் எப்போது வந்திருக்க வேண்டும்?'


'நீங்கள் திருமணம் முடிப்பதற்கு முன்பே வந்திருக்க வேண்டும். ஏனெனில் குழந்தை வளர்ப்பது என்பது அந்தக் குழந்தையைப் பெற்று வளர்த்திடும் தாயைத் தேர்வு செய்திடும் நேரத்திலேயே துவங்கி விடுகிறது'.

அறிஞரின் பதிலில் உள்ள ஆழத்தைக் கவனித்தீர்களா?

இதோ இன்னொரு சம்பவம்.

அபுல் அஸ்வத் (ரஹ்) என்ற பெரியார், ஹஜ்ரத அலி ரலியல்லாஹ் அவர்களின் மாணவர். அவர் தமது முதுமைக் காலத்தில் தனது பிள்ளைகளை அழைத்து 'நான் உங்களுக்கு நீங்கள் பிறப்பதற்கு முன்பும் பிறந்த பின்னரும் உபகாரம் செய்துள்ளேன்' என்று சொன்னாராம். புரியவில்லையே என்றார்களாம் பிள்ளைகள். நல்ல ஸாலிஹானதொரு பெண்ணை எனக்கு மனைவியாக தேர்வு செய்ததன் மூலம் உங்களுக்கு நல்லதொரு தாயை நான் தேர்வு செய்திடவில்லையா? என்று புரிய வைத்தாராம் அந்த அறிஞர்.

இந்த இடத்தில் நாம் சில பாடங்களைப் படித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறோம்.

1. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது திருமண விஷயத்தில் முற்றிலும் பொருந்தும்.

2. வரதட்சனைக்காக பெண்ணை தேர்வு செய்யும் இளைஞர்களே! கொஞ்சம் சிந்தியுங்கள். பெண்ணின் குணத்தைப் பாருங்கள். பணத்தைப் பார்க்காதீர்கள்.

3. அவசர கோலத்தில் காதலித்து எடுத்தேன் கவிழ்த்தேன் என்று திருமணம் செய்திடத் துடிக்கும் இளைஞர்களே! சற்று நிதானித்து செயல் படுங்கள். காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். இஸ்லாத்தைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒரு சீரியஸான விஷயம். அதனை விளையாட்டாய் எடுத்துக் கொண்டால் அது உங்கள் திருமண வாழ்க்கையையும் பாதிக்கும். உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையையும் பாதிக்கும்.

4. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மார்க்கப் பற்றுள்ள பெண்களை தேர்வு செய்திடும் காலம் விரைவில் வரும் என்ற நம்பிக்கை பொய்க்கப் போவதில்லை.

Comments