மனைவிக்குத் தேவை சகிப்புத் தன்மை!

அரபியில் ஒரு சொல்: ஹில்ம்!

ஹில்ம் எனும் – இச்சொல்லும் இச்சொல்லின் துணைச் சொற்களும் சேர்த்து திருமறையில் 21 தடவைகள் இடம் பெற்றுள்ளன.

ஹில்ம் என்பதை எந்த ஒரு மொழியிலும் முழுமையாக மொழிபெயர்த்திட முடியாது!




ஆங்கிலத்தில் ஹில்ம் என்பதற்கு – gentleness, clemency, mildness, forbearance, indulgence, patience, insight, discernment, understanding, intelligence, reason – என்றும்

இந்த குணத்தை உடையரைக் குறிப்பிடும் – ஹலீம் – என்ற சொல்லுக்கு mild tempered, gentle, patient – என்றும் மொழிபெயர்க்கின்றனர்.

அல்லாஹு தஆலாவுக்கு அல்-ஹலீம் என்ற பெயரும் உண்டு. மிக்க பொறுமை உடையவன் என்று மொழிபெயர்க்கப்படுகிறது. அதாவது தன் அடியார்கள் செய்கின்ற பாவமான காரியங்களை எல்லாம் மிகவும் பொறுமையாக – சகித்துக் கொண்டு – அவர்களை மன்னித்தும் விடுகின்றான் அல்லாஹு தஆலா. Ghafoorun Haleem – என்று அல்லாஹ் தன்னை அழைத்துக் கொள்கின்றான். இதற்கு – அல்லாஹ் – “பொறுமையுடன் சகித்துக் கொண்டு மன்னிப்பவன்” என்று பொருள்.

இந்த ஹில்ம் எனும் அருமையான பண்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் – ஹள்ரத் இப்ராஹிம் (அலை) அவர்கள்! இப்ராஹிம் (அலை) அவர்களை அல்லாஹு தஆலா – அவ்வாஹுன் ஹலீம் – என்று அழைக்கிறான்.

நிச்சயமாக இப்ராஹீம் பொறுமையுடையவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்தார். (9: 114)

நிச்சயமாக இப்றாஹீம் சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனங்கொண்டவராகவும் (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார். (11:75)

அதே போன்று ஹள்ரத் இஸ்மாயில் (அலை) அவர்களும் இந்த அருங்குணத்துக்குச் சொந்தக்காரராக விளங்கினர்கள்.

இஸ்மாயில் (அலை) அவர்களை – “குலாமுன் ஹலீமுன்” என்று குறிப்பிடுகிறான் வல்லோன் அல்லாஹ். அதாவது சகிப்புத்தன்மை உடைய குழந்தை என்று மொழிபெயர்ப்போம்.

“எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்” (37: 101).

ஹலீம் என்ற சொல்லுக்கு சாந்த குணம் உடையவர் என்று சய்யித் மவ்தூதி அவர்களின் மொழிபெயர்ப்பு கூறுகிறது.

திருக்குர்ஆன் விரிவுரையாளர் யூசுப் அலி அவர்கள் தரும் விளக்கத்தை இங்கே பார்ப்போம்:

இறைக்கட்டளைகளுக்குக் கட்டுப்படுவதற்காக – எத்தகைய இன்னல்களையும், துன்பங்களையும் சகித்துக் கொண்டு இன்முகத்துடன் பொறுமை காக்கும் தன்மையே ஹில்ம் எனப்படுவது!

இப்ராஹிம் (அலை) அவர்களின் சகிப்புத்தன்மையைப் பறைசாற்றும் வரலாற்றுச் சம்பவங்கள் இதோ:

நெருப்புக் குண்டத்தை சந்தித்திட வேண்டிய நிலையில் பொறுமை காத்தது; மனைவியையும் மகனையும் – பாலைவனத்தில் விட்டு விட்டுத் திரும்ப வேண்டும் என்ற கட்டளையை அப்படியே செயல்படுத்தியது; பெற்ற மகனையே அறுத்துப் பலியிடத் துணிந்தது.

இஸ்மாயில் அலை அவர்களின் சகிப்புத்தன்மை:

தந்தை தன்னை அறுத்துப்பலியிட அனுமதி கேட்ட போது அதற்கு உடன்பட்டது.

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் – என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.” (37: 102)

சற்றே உற்று நோக்கினால் அன்னை ஹாஜரா அவர்களிடத்திலும் இந்தப் பண்பு நிறைந்து காணப்படுவதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

அன்னை ஹாஜரா அவர்களின் சகிப்புத் தன்மை:

பாலைவனத்தில் கணவன் தன்னையும் தன் குழந்தையையும் தன்னந்தனியே விட்டு விட்டுச் செல்வதை பொறுத்துக் கொண்டது.

தண்ணீர் தீர்ந்ததும் அங்கிங்கும் ஓடி அலைந்த நேரத்திலும் அவர்கள் – அல்லாஹ்வையும் குறை சொல்லிடவில்லை; தன் கணவன் இப்படி தன்னையும் குழந்தையையும் தவிக்க விட்டு விட்டுப் போய் விட்டாரே என்று நொந்து கொள்ளவும் இல்லை!

தன் இறுதி நாட்கள் வரை அதே பாலைவன வாழ்க்கையைப் பொறுமையுடனும் இன்முகத்துடனும் சகித்துக் கொண்டு வாழ்கிறார்கள்.

சகிப்புத் தன்மை உடையவராக அன்னை ஹாஜரா அவர்கள் விளங்கியதால் தானோ என்னவோ சகிப்புத் தன்மை உடைய இஸ்மாயில் எனும் குழந்தையை அவர் பெற்றெடுக்கின்றார். மேலும் தாயினால் வளர்க்கப்பட்ட மகன் இஸ்மாயில் – தன் தாயின் நற்குணத்தை தனக்குரியதாக ஆக்கியிருப்பார்கள். சகிப்புத்தன்மை எனும் நற்குணத்தை தன் மகனுக்கு ஊட்டியதே அவரது தாய் அன்னை ஹாஜரா அவர்கள் தான் என்றால் அது மிகையாகாது!

ஒட்டு மொத்தத்தில் இந்தக் குடும்பமே – ஹில்ம் – எனும் சகிப்புத்தன்மைக்கு ஒரு இலக்கணமாகத் திகழ்ந்திருக்கின்றது.

அதைப்போலவே – தன் மகன் இஸ்மாயிலின் மனைவியாக வருபவருக்கு இந்த அருங்குணம் இருந்திட வேண்டும் என்று தந்தை இப்ராஹிம் அவர்கள் எதிர்பாத்திருக்கிறார்கள் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது!

இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்துக் கொண்ட பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள் தாம் விட்டுச் சென்ற தம் மனைவி மற்றும் மகனின் நிலையை அறிந்துக் கொள்வதற்காக மக்காவுக்கு வந்தார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை அவர்களது வீட்டில் காணவில்லை. ஆகவே இஸ்மாயீல் மனைவியிடம் இஹ்மாயீலை குறித்து விசாரித்தார்கள்.

அதற்கு அவர் எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார். பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலைப் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர் நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம் என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார். உடனே இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் அவரது நிலைப்படியை மாற்றி விடும்படி சொல் என்று சொன்னார்கள்.

இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது எவரோ வந்து சென்றிருப்பது போல் உணர்ந்தார்கள். ஆகவே எவரேனும் உங்களிடம் வந்தார்களா என்று கேட்டார்கள். அவருடைய மனைவி ஆம் இப்படிப்பட்ட (அடையாளஙகள் கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார் எங்களிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன். என்னிடம் உஙகள் வாழ்க்கை நிலை எப்படி உள்ளது என்று கேட்டார். நான் அவரிடம் நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம் என்று சொன்னேன் என்று பதிலளித்தார்.

அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா என்று கேட்க அதற்கு அவர் ஆம் உங்களுக்கு தன் சார்பாக சலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு உன் நிலைப்படியே மாற்றிவிடு என்று (உஙகளிடம் சொல்லச்) சொன்னார் என்று பதிலளித்தார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தைதான். உன்னைவிட்டு பிரிந்து விடும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார். ஆகவே நீ உன் (தாய்) வீட்டாருடன் போய் சேர்ந்துக்கொள் என்று சொல்லிவிட்டு உடனே அவரை விவாகரத்து செய்துவிட்டார்.

பின்னர் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவன் நாடிய காலம் வரை அவர்களைப் பார்க்க வரவில்லை. அதன் பிறகு அவர்களிடம் சென்றார். ஆனால் இஸ்மாயீல் (அலை) அவர்களை இந்த முறையும் அவர் அங்கு காணவில்லை. ஆகவே இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவர் எங்களுக்காக வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார் என்று சொன்னார். இப்ராஹீம் (அலை) அவர்கள் நீஙகள் எப்படியிருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். மேலும் அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார்.

அதற்கு இஸ்மாயீலின் துணைவியார் நாஙகள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமாக அல்லாஹ்வைப் புகழ்ந்தார்…….. இப்ராஹீம் (அலை) அவர்கள் உன் கணவன் வந்தால் அவருக்கு என் சார்பாக சலாம் உரை. அவரது வீட்டு நிலைப்படியை உறுதிபடுத்தி வைக்கும்படி சொல் என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் வீட்டிற்குத் திரும்பி வந்த போது உங்களிடம் எவரேனும் வந்தார்களா என்று கேட்க அவருடைய மனைவி ஆம் எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார் என்று சொல்லிவிட்டு அவரை புகழ்ந்தார். என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படி உள்ளது என்று கேட்டார்.

நான் நாங்கள் நலமுடன் இருக்கிறோம் என்று தெரிவித்தேன் என்று பதில் சொன்னார். அவர் உனக்கு அறிவுரை ஏதேனும் சொன்னாரா என்று இஸ்மாயீல் (அலை) கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் உஙகளுக்கு சலாம் உரைக்கிறார் உஙகள் நிலைப்படியை உறுதிப்படுத்திக் கொள்ளும்படி உஙகளுக்கு கட்டளையிடுகின்றார் என்று சொன்னார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் அவர் என் தந்தை நீ தான் அந்த நிலைப்படி உன்னை அப்படியே மனைவியாக வைத்தக் கொள்ளும்படி எனக்கு உத்திரவிட்டுள்ளார்கள் என்று சொன்னார்கள்….. (புகாரி ஹதீஸ் எண் 3364 – ன் ஒரு பகுதி)

இந்த ஹதீஸ் தரும் குறிப்புகள் நமக்கு உணர்த்துவது என்னவென்றால் – இப்ராஹிம் (அலை) அவர்கள் தன் மகனின் மனைவியாக வரக்கூடியவர் சகிப்புத் தன்மை உடையவராகத் தான் இருந்திட வேண்டும் என்பதை வஸிய்யத்தாகவே தன் மகனுக்கு ஆக்கிச் சென்றிருக்கின்றார்கள்.

நன்கு கவனியுங்கள்:

தன் மனைவி ஹாஜரா அவர்களைப் போலவே தன் மகனின் மனைவியும் சகிப்புத்தன்மை உடையவராக விளங்கிட வேண்டும் என்று இப்ராஹிம் (அலை) அவர்கள் எதிர்பார்த்தது ஏன்?

(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான். (2: 124)

“மனித குலத்துக்கே வழிகாட்டும் தலைவர் நீங்கள்!” – என்று அல்லாஹு தஆலா இப்ராஹிம் (அலை) அவர்களை அழைக்கிறான்.

அது என் சந்ததியையும் சாருமா? – என வினவுகிறார்கள் இப்ராஹிம் (அலை) அவர்கள்.

“என் வாக்குறுதி உம் சந்ததியில் உள்ள அநியாயக்காரர்களுக்குச் சேராது!” – என்கிறான் வல்லோன் அல்லாஹ்!

தன் சந்ததியில் உள்ள நல்லோர்களுக்கு – தலைமைப்பொறுப்பு வழங்கப்படும் என்ற இறைவன் வாக்களித்து விட்டதனால் – அந்த சந்ததிகளைப் பெற்றுத் தரும் தாய்மார்களிடம் இப்ராஹிம் (அலை) அவர்கள் எதிர்பார்த்தது – இந்த ஹில்ம் எனும் ஒரே ஒரு நற்பண்பை மட்டுமே!

நபி இப்ராஹிம் அலை அவர்கள் தன் மகன் இஸ்மாயில் அலை அவர்கள் உதவியுடன் இறையில்லம் கஃபாவைக் கட்டி எழுப்பி விட்டு ஒரு துஆவையும் கேட்கிறார்கள்.

“எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.”(2: 129)

நபி இப்ராஹிம் அலை அவர்களின் இந்தப் பிரார்த்தனையையும் - சேர்த்துப் பார்த்தால் - ஹள்ரத் இஸ்மாயில் அவர்களின் வழித்தோன்றல்களுக்கும், குறிப்பாக -  எதிர்காலத்தில் வர இருக்கின்ற அந்த இறைத்தூதரைப் - (முஹம்மத் ஸல் அவர்களைப்) - பெற்றெடுக்கும் - தாய்மார்களுக்கும் - இந்த பொறுமையும் சகிப்புத் தன்மையும் அவசியம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள் என்பதையே இது காட்டுகிறது.

நபியவர்கள் ஹில்ம் எனும் சகிப்புத் தன்மை உடையவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்தே இருக்கின்றோம்.

அடுத்து நாம் பார்க்க இருப்பது அன்னை பாத்திமா (ரலி) அவர்களின் சகிப்புத் தன்மை பற்றி.

நவீன ஆய்வுகள் தெரிவிப்பது என்னவெனில் – ஆண் குழந்தைகள் தாயின் குணத்தை அப்படியே எடுத்துக் கொள்ளுமாம். பெண் குழந்தைகள் தந்தையின் குணங்களை அப்படியே காப்பியடிக்குமாம்.

தந்தையின் குணங்களை மகள்கள் உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்ற ஆய்வு அன்னை பாத்திமா அவர்கள் விஷயத்தில் அப்படியே ஒத்துப் போகின்றது.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : பாத்திமா ரலி அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் போலவே (குணாதிசயங்களைப் பெற்று) இருந்தார்கள். அவர்களது பேச்சு, உட்காரும் முறை, எழுந்திருக்கும் முறை மற்றும் நடக்கும் முறை – இன்னும் வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் அவர்களது அனைத்து குணநலன்களும் மற்றும் பாவனைகளும் (இறைத்தூதர் (ஸல்)) அவர்களைப் போலவே இருந்தது.

பாத்திமா ரலி அவர்களை அண்ணலார் எப்படி வளர்த்தார்கள்? செல்லம் கொடுத்து வளர்த்தார்களா? இல்லையே! ஏன்?

பாத்திமா (ரலி) அவர்கள் தனது இளமைப் பருவத்திலேயே சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்திருக்கிறார்கள். மக்காவில் உள்ள அபீதாலிப் பள்ளத்தாக்கில் முஸ்லிம்கள் சமூக பகிஷ்காரம் செய்யப்பட்டு மூன்று வருடங்கள் கடுந் துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டிருந்தார்கள். இதில் தனது தந்தை மற்றும் தாய், சகோதரிகள் மற்றுமுள்ள முஸ்லிம்களுடன் முஸ்லிம்களாக எல்லாத் துன்பங்களையும் தாங்கிக்கொண்டு அன்னை பாத்திமா (ரலி) அவர்களும் உறுதியான மனநிலை கொண்டவராக வாழ்ந்திருக்கின்றார்கள். இந்த சோதனைகளும், வேதனைகளும் அந்த அபீதாலிப் கணவாயோடு மட்டும் முடியவில்லை. அங்கு அவரது உடல் நிலையில் ஏற்பட்ட தாக்கமானது, அவரது மரணம் வரைக்கும் அவரைத் துரத்திக் கொண்டே வந்தது.

சரி, தன் அருமை மகளை ஒரு பணக்கார மாப்பிள்ளைக்குக்கட்டிக் கொடுத்தார்களா? இல்லையே! ஏன்?

ஹள்ரத் அலீ ரலி அவர்கள் ஒரு பணக்காரர் அல்லவே!

ஹள்ரத் அலீ – பாத்திமா திருமணம் வல்லோன் அல்லாஹு தஆலாவினால் நிச்சயிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

பாத்திமா (ரலி) அவர்களின் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்தவர்களாக திருமண வாசகத்தை மொழிய ஆரம்பித்தார்கள். மஹர் தொகையை அறிவித்தவுடன், அங்கு கூடியிருந்த தனது தோழர்களை நோக்கி இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களுக்கு பாத்திமா (ரலி) அவர்களை மணமுடித்துக் கொடுக்குமாறு இறைவன் தான் எனக்கு கட்டளையிட்டான்” என்கிறார்கள்.

மாபெரும் சாம்ராஜ்யத்தின் தலைவரது மகளாக இருப்பினும், மாவு அரைத்தல், கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து வருதல் இன்னும் சமைத்தல் ஆகிய அனைத்து வீட்டு வேலைகளையும் பாத்திமா (ரலி) அவர்களே செய்தார்கள்.

ஒரு போரின் பொழுது அதிகமான செல்வங்களும், போர்ப் பொருட்களும், கைதிகளாக ஆண்களும், பெண்களும் முஸ்லிம்கள் வசமாகின. அப்பொழுது தனது துணைவியாரான பாத்திமா (ரலி) அவர்களை அழைத்த அலீ (ரலி) அவர்கள், பாத்திமா அவர்களே..! வீட்டு வேலைகளின் நிமித்தம் நீங்கள் அதிகக் களைப்படைந்து விடுகின்ற காரணத்தால், உங்கள் தந்தையிடம் சென்று, கைதிகளாகப் பிடிக்கப்பட்டு வந்துள்ளவர்களில் உங்களுக்கென ஒரு வேலைக்காரியைத் தருமாறு கேளுங்களேன் என்றார்கள்.

அலீ (ரலி) அவர்களின் ஆலோசனையைக் கேட்ட பின், நேராகத் தனது தந்தையைத் தேடி வீட்டிற்குச் சென்றார்கள். இவர்கள் தேடிச் சென்ற நேரத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாத காரணத்தால், தான் வந்த நோக்கத்தை இறைத்தூதர் (ஸல்)அவர்களிடம் தெரிவித்துவிடுமாறு ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவித்து விட்டு வந்து விடுகின்றார்கள்.

அன்றைய இரவு, தூங்கச் செல்வதற்கு சற்று முன்னால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது மகளாரைத் தேடி மகளின் வீட்டிற்கு வருகின்றார்கள். அப்பொழுது, மகளே..! ஒரு அடிமைப் பெண்ணை விடச் சிறந்த ஒன்றை நான் உங்களுக்கு தரட்டுமா..! என்று கேட்டு விட்டு, அல்லாஹ்வைப் புகழ்ந்து கூறக் கூடிய சில வசனங்களை தனது மகளாருக்குக் கற்றுக் கொடுக்கின்றார்கள். மகளே..! நான் சொல்லித்தரக் கூடிய இந்த வசனங்கள் ஒரு வேலைக்காரியை விடச் சிறந்தது. நீங்கள் 33 தடவை சுப்ஹானல்லாஹ் என்றும், 33 தடவை அல்ஹம்துலில்லாஹ் என்றும், இன்னும் 34 முறை அல்லாஹு அக்பர் என்று கூறுங்கள் என்று கற்றுக் கொடுத்தார்கள்.

பாத்திமா (ரலி) அவர்கள் எப்பொழுதும் பொறுமையுடையவராகவும், படைத்தவனுக்கு நன்றியுடைய நல்லடியாராகவும் வாழ்ந்து காட்டினார்கள். எத்தகைய கஷ்டமான சூழ்நிலையிலும் கூட எந்த முனுமுனுப்பும் காட்டாதவர்களாக இருந்தார்கள். இந்த உலகமும், அதன் அலங்காரங்களும் எந்த வகையிலும் அவரது வாழ்வை திசை மாற்றிடவில்லை.

ஒரு தடவை – அலீ அவர்கள் மனைவி பாத்திமா அவர்களைப் பார்த்து, “ஏன் பாத்திமா? உன் முகமெல்லாம் மஞ்சனித்து இருக்கின்றது? -என்று கேட்டார்களாம்.

“நான் சாப்பிட்டு மூன்று நாட்களாகி விட்டன!” – என்றார்கள் அன்னை பாத்திமா அவர்கள்.

“ஏன், என்னிடம் இதனைச் சொல்லவில்லை? நான் ஏதாவது உணவுக்கு ஏற்பாடு செய்திருப்பேனே!”

“அலீ அவர்களே! நீங்கள் கேட்டதனால் சொல்கிறேன்; நம் திருமணத்தின் போது – என் தந்தை எனக்கு உபதேசம் ஒன்றைச் செய்திருந்தார்கள். அது என்ன தெரியுமா? “பாத்திமா! அலீயிடம் எதனையும் கேட்காதே! கொடுத்தால் மட்டும் வாங்கிக் கொள்!” – என்பது தான் அந்த உபதேசம்!

அன்னை பாத்திமா அவர்களின் இந்த சகிப்புத் தன்மை மிக்க வாழ்க்கையினால் விளைந்த நன்மை என்ன?

அன்னை பாத்திமா அவர்களின் இந்த சகிப்புத் தன்மை அவர்களது குழந்தைகள் ஹஸன் மற்றும் ஹுஸைன் – இருவரது வாழ்விலும் பிரதிபலிப்பதை அவர்கள் வாழ்க்கை வரலாற்றிலும் நாம் காண்கிறோம்.

அடுத்து பனீ இஸ்ரவேலர்களின் சந்ததிகளில் சிலரைப் பற்றியும் ஆய்வோம்.

யாகூப் (அலை) அவர்களுக்கு மொத்தம் 12 குழந்தைகள். அவர்களுக்கு நான்கு மனைவியர். முதல் மூன்று மனைவியர் மூலம் அவர்களுக்கு பத்து குழந்தைகள். இந்த பத்து பேரும் நல்ல குழந்தைகளாக இல்லை!

நான்காவது மனைவி மூலம் இரண்டு குழந்தைகள். இந்த இரண்டு குழந்தைகள் தான் – ஹள்ரத் யூசுப் நபியவர்களும் அவருடைய சகோதரர் புன்யாமீன் அவர்களும். இவர்கள் இருவருமே நல்ல குழந்தைகளாக வளர்கிறார்கள்.

நாம் யூகிப்பது என்னவென்றால் – யூசுப் (அலை) மற்றும் புன்யாமினைப் பெற்ற அந்தத் தாய் ஒரு புண்ணியவதியாகத் தன் இருந்திருக்க வேண்டும்!

ஒரு நபியின் குழந்தை காஃபிராக மாறுவது எதனால்? மனைவியினாலா? – என்று ஆய்வு செய்திடலாம்.

நபி நூஹ் (அலை) அவர்கள் மகன் ஈமான் கொள்ளவில்லை! நூஹ் (அலை) செய்த கப்பலில் ஏறிக் கொள்ள அவன் மறுத்து விட்டான். அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகி விட்டான்!

இறைவன் நூஹ் (அலை) அவர்களிடத்தில் கூறினான்:

நூஹே! உண்மையாகவே அவன் உம் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களையே செய்து கொண்டிருந்தான்; (11: 46)

ஒரு நபியின் மகனாக இருந்தும் அவன் காஃபிராக, ஒழுக்கம் கெட்டவனாகப் போனது எப்படி? விடை நூஹ் நபியின் மனைவியிடத்தில் இருக்கிறது.

நூஹ் நபியின் மனைவி யார்?

நிராகரிப்பவர்களுக்கு, நூஹ்வுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கின்றான். இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர்; எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர்…. (66:10)

நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது என்னவென்றால் -

ஒரு பெண் சகிப்புத் தன்மை உடையவராக இருந்தால் – அவருடைய சந்ததி நன்றாக விளங்கும்.

சகிப்புத்தன்மை உடைய தாய்மார்களின் குழந்தைகளே நல்ல தலைவர்களாக உருவாவார்கள்.

எனவே

தாய்மார்களே! உங்கள் ஆண் குழந்தைகள் உங்கள் குணத்தைத் தான் அதிகமாகக் காப்பி அடிப்பார்கள். எனவே – மாறிக் கொள்ளுங்கள்

தந்தைமார்களே! உங்கள் மகள் சிறந்து விளங்குவது உங்கள் கரங்களில்;

தாய்மார்களே! உங்கள் மகன்கள் சிறந்து விளங்குவது உங்கள் கரங்களில்!

இளைஞர்களே! சகிப்புத் தன்மை உள்ள பெண்ணைத் தேர்ந்தெடுத்து மணம் முடியுங்கள்!

Comments