தாய்மையின் சிறப்பு!

• குழந்தைகள் நம் இல்லங்களை அலங்கரிக்க வருகின்ற அலங்காரப் பொக்கிஷங்கள் (குர்ஆன் 18: 46).

• குழந்தைகள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற பெட்டகங்கள்(குர்ஆன் 25: 74).

• குழந்தைகள் இறைவன் புறத்திலிருந்து நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற அருட்கொடைகள். ஆம் அது ஒரு நிஃமத்.

• குழந்தைகள் ஒரு அமானத்தும் கூட. எனவே குழந்தை வளர்ப்பு என்பது ஒரு பொறுப்பு (responsibility).





ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லதொரு குடும்பச் சூழல் அவசியம். ஒரு குழந்தையைப் படைத்து அதனை உலகுக்கு அனுப்பி வைக்கு முன்பேயே அக்குழந்தையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவன் அல்லாஹூதஆலா! எனவே ஒரு இல்லத்திலே குழந்தை ஒன்று பிறப்பதற்கு முன்பேயே அந்தக் குழந்தையின் தாயின் மனநிலையை (psychological preparation) எவ்வாறு தயார் செய்கிறான் என்பதைப் பார்ப்போமா?


ஒரு முறை அண்ணல் நபி(சல்) அவர்களின் மகன் இப்ராஹிமின் வளர்ப்புத் தாய் சலமா (ரலி) அவர்கள் நபி (சல்) அவர்களிடத்திலே வந்து கேட்டார்கள்: யா ரஸூலுல்லாஹ்! நீங்கள் ஆண்களுக்கு அதிக நன்மைகளை வாக்களிக்கிறீர்கள். ஆனால் பெண்களுக்கு அது போல் செய்வதில்லையே! நபி(சல்) அவர்கள் கேட்டார்கள்: உங்கள் பெண் நண்பர்கள் உங்களை இவ்வாறு கேட்கச் சொல்லித் தூண்டி விட்டார்களா? ஆம் என்றார்கள் சலமா (ரலி) அவர்கள். நபி(சல்) அவர்கள் பதிலளித்தார்கள்:

தன் கணவன் மகிழ்ச்சியுற்றிருக்கும் நிலையில் உங்களில் ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளே அவள் - அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்ற ஒரு நோன்பாளி பெறுகின்ற அதே நன்மைகளைப் (reward) பெறுகிறாளே அது உங்களுக்கு திருப்தியளித்திடவில்லையா?

பிரசவ வலியால் துடித்திடும் அந்தப் பெண்ணுக்காக எப்படிப்பட்ட அளவிலா நன்மைகள் காத்திருக்கின்றன என்பதை வானத்திலோ பூமியிலோ உள்ள எந்தப் படைப்பினமும் அறிந்திடாது.

அவள் குழந்தையைப் பெற்றெடுத்து அக்குழந்தை குடிக்கின்ற ஒவ்வொரு மிடறு பாலுக்காகவும் அவளுக்கு நன்மைகள் வழங்கப் படும்.

அக்குழந்தைக்காக அதன் தாய் இரவில் கண் விழிக்கிறாளே அதற்காக அவளுக்கு வழங்கப் படும் கூலி என்ன தெரியுமா? 70 அடிமைகளை அல்லாஹ்வுக்காக உரிமை விட்டவர் பெறுகின்ற அதே அளவு கூலியைத்தான்! (ஆதார நூல் : தபரானி)

தாய்மார்களே! இவ்வளவு சிறப்புகளையும் நீங்கள் ஒவ்வொருவரும் பெற்றிட நாங்கள் துஆ செய்;திடும் அதே வேளையில் குழந்தை வளர்ப்பு என்பது எவ்வளவு மகத்தான பொறுப்பு என்பதையும் நீங்கள் உணர்ந்திட வேண்டும் என்பதே எங்கள் அவா! (இன்ஷா அல்லாஹ் தொடர்வோமே)

Comments