சமூக அக்கரை உடையவர்களாக – நமது குழந்தைகள்!


ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒருவர் நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (தொழுவதை விட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி)

வல்லோன் அல்லாஹு தஆலா நாம் அனைவருமே சமூக அக்கரை உடையவர்களாக விளங்கிட வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றான்.


இந்த அடிப்படையில் நாம் சமூக அக்கரை உடையவர்களாக விளங்குவதுடன் நமது பிள்ளைகளையும் சமூக அக்கரை உடையவர்களாக வார்த்தெடுக்க வேண்டியது நமது கடமை.

இறைவன் தனது திருமறையிலே கூறுகிறான்:

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள். (3:110)

இன்னும் சொல்லபோனால் சமூக அக்கரை என்பது நமது நம்பிக்கையுடன் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிந்தே இருக்கின்றோம்.

‘”நம்பிக்கைக்கு (ஈமானுக்கு) எழுபது கிளைகள் உள்ளன: அதில் மிக உயர்ந்தது லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை) என்பதாகும், அதில் மிக தாழ்ந்தது பாதையில் மக்களுக்குத் தொல்லை தருபவைகளை அகற்றுவதாகும், வெட்கமும் நம்பிக்கையின் ஒரு கிளையாகும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி).

பொதுவாகவே பெற்றோர்கள் – தங்கள் பிள்ளைகள் – சமூக விஷயங்களில் ஈடுபடுவதை – அது அவர்களுக்குத் தேவையற்ற ஒரு தலையீடாகவே கருதும் போக்கு ஒன்று நிலவுகிறது. தான் உண்டு; தன் வேலை உண்டு; தன் படிப்பு உண்டு; தன் குடும்பம் உண்டு என்று மட்டுமே இருந்திட வேண்டும் என்று தங்கள் பிள்ளைகளின் சிந்தனை வட்டத்தைச் சுருக்கி விடுகின்றார்கள் பல பெற்றோர்கள்.

விளைவு? சமூகம் சுயநலம் மிக்கவர்ளால் நிரம்பி வழிகின்றது! நபி (ஸல்) அவர்கள் தனது இளமைப் பருவத்திலேயே சமூக அக்கரை உடையவர்களாகத் திகழ்ந்தார்கள் என்பது நாம் அறிந்த விஷயமே!

பெற்றோர்கள் சிந்திப்பார்களாக!

Comments