மனைவியைக் கொஞ்சம் பேச விடுங்களேன்!

மனைவி கொல்லைப்புறத்தில் நிற்கிறார். தண்ணீர் மோட்டாரைப் போட்டு விட்டு டாங்க் நிறைவதற்காகக் காத்திருக்கிறார். ஆட்டோமாடிக் ஸ்விட்ச் கிடையாது. நாம் தான் ஸ்விட்சை அடக்க வேண்டும். தொழுது விட்டு வீடு திரும்பிய கணவன் மனைவியைப் பார்த்து விட்டு அவரும் கொல்லைப்புறத்துக்குச் செல்கிறார்.





மனைவி, “இங்க பாருங்க…. உங்க கிட்ட சொல்லனும்னு நினைச்சிட்டு இருந்தேன். நீங்களே வந்துட்டீங்க… பெரிய மச்சி வந்திருந்தாங்களா? (மருமகள்) பர்வீன் வந்து மச்சி கிட்ட பர்மிஷன் வாங்காமயே அம்மா வீட்டுக்குக் கிளம்பிடுச்சாங்க… மச்சி உடனே ஃபோன் பண்ணி சம்பந்தி கிட்ட சொன்னாங்களாம்…. அவங்க என்ன நடந்ததுன்னு கேட்காமயே மச்சியையே குறை சொல்றாங்களாம்; அவங்க எப்போதுமே….”

கணவன் சற்றே இடைமறித்து, “டாங்க் நிரம்பி விட்டது போல் இருக்கே; ஸ்விட்சை அடக்கி விடவா?” என்று கேட்கிறார்.

மனைவி உடனே – “உங்க கிட்ட எதையுமே ஷேர் பண்ணிக்க முடியாதே!” – என்று சொல்லி விட்டு விருட்டென்று வீட்டுக்கு உள்ளே சென்று விடுகிறார்.

அடுத்த வினாடியே – டாங்க் நிரம்பி தண்ணீர் வழியத் தொடங்குகிறது. கணவன் ஸ்விட்சை அடக்கி விட்டு அமைதியாக உள்ளே திரும்புகிறார்.

இப்போது கேள்வி என்னவெனில் – மனைவி தன் கணவனைக் கோபித்துக் கொண்டது எதனால்?

@@

இன்னொரு சம்பவம்.

கணவனுக்கு டின்னர் பரிமாறுகிறார் மனைவி. தோசை தான். மனைவி பேசத்தொடங்குகிறார். கணவன் சாப்பிட்டுக் கொண்டே – மனைவி பேசுவதைக் காதில் வாங்குகிறார்.

“ஏங்க! ஷம்சாத் வந்திருச்சா? எல்லாத்தையும் ஷம்சாத் கிட்ட நான் சொன்னேங்க. அவங்க நேரா அம்மாகிட்ட போய், “ஏம்மா, மச்சி தான் உங்களை நல்லா கவனிச்சுக்குதே; ஏங்க, அவங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டாமா? ஏன் இப்படி அவங்கள தொந்தரவு பண்ணுகிறாயாம்? அதுக்கு உங்க அம்மா சொல்றாங்களாம்…

கணவன் (கையிலே கறிவேப்பிலையை வைத்துக் கொண்டு): ஏம்மா, அந்த வேஸ்ட் ப்ளேட்டை எடுத்து வையேன் இங்கே!”

மனைவி: “உங்க கிட்ட போய் சொல்ல வந்தேனே? – என்று சொல்லி விட்டு – அடுத்த தோசையை சற்றே வேகமாக தட்டில் போட்டு விட்டுப் போய் விடுகிறார்.

அதே கேள்வி: இங்கேயும் மனைவி தன் கணவனைக் கோபித்துக் கொண்டது எதனால்?

இந்த இரண்டு சம்பவங்களிலும் – மனைவி பேசிக் கொண்டிருக்கும் போது கணவன் இடை மறித்துப் பேசியது நமக்கொன்றும் பெரிய தவறாகத் தெரிய வாய்ப்பில்லை. இரண்டு சம்பவங்களிலுமே – கணவன் பேசியது யதார்த்தமாகவே தெரியும்.

ஆனால் மனைவி என்ன நினைக்கிறார்?

“நான் பேசுவதைக் கொஞ்சம் காதில் வாங்கினால் தான் என்ன? என்னை முழுசாகப் பேச விடாமல் – இடைமறித்தால் என்ன அர்த்தம்? இதையெல்லாம் என்கிட்ட வந்து ஏன் சொல்கிறாய் என்று தானே அர்த்தம்? இவர்கிட்ட பகிர்ந்து கொள்ளாமல் நான் யாரிடம் பகிர்ந்து கொள்வது?”

மனைவியின் இந்த நினைப்பில் வெளிப்படுவது என்ன தெரியுமா?

“என் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் என் கணவர் மதிப்பதே இல்லை!” – என்பது தான்!

எனவே தான் சொல்கிறோம்:

மனைவி பேசினால் – அவர்களை முழுமையாகப் பேச விடுங்கள்!

இதுவும் ஒரு சுன்னத் என்பதை மறந்து விட வேண்டாம். நபியவர்களிடம் யாராவது பேச்சுக் கொடுத்தால் – அவர் பேசி முடிக்கும் வரை – வாய் திறக்கவே மாட்டார்களாம். அவரை விட்டுத் திரும்பவும் மாட்டார்களாம்.

மற்றவர்கள் பேச்சை மணிக்கணக்கில் கேட்டுக் கொண்டிருப்போம். மனைவி பேசும்போது மட்டும் ஏன் குறுக்கிட வேண்டும்?

மனைவி பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பது என்பது வீணான ஒன்று அல்ல! அது உங்கள் மனைவியின் காதல் கணக்கில் நீங்கள் சேமித்து வைக்கும் வைப்பு நிதி! அது உங்களுக்கே திரும்பவும் வந்து சேரும்!

தொடர்ந்து சேர்க்கலாம் தானே?

Comments