உங்கள் குழந்தைகளை நீங்களே குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள்!


“மக்கள் சுரங்கங்கள்” – எனும் இந்த நபி மொழியை நாம் திரும்பவும் இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம். இக்கட்டுரையில் இன்னும் ஒரு பாடத்தைப் படித்துக் கொள்வோம்.


மனிதர்கள் அனைவருமே தங்கத்தைப் போல வெள்ளியைப் போல் எனும் போது நீங்கள் பெற்றெடுத்த செல்வங்கள் அனைவருமே விலை மதிப்பற்ற சுரங்கங்கள் தானே! They are so precious!


ஆங்கிலத்தில் ஒரு சொற் பிரயோகம் உண்டு: அதனை Self Esteem என்று சொல்கிறார்கள். இதற்கு “சுய மதிப்பு” என்று பொருள் கொள்ளலாம். அதாவது – நமக்கு நாமே போட்டுக் கொள்கின்ற மதிப்பு!! அதாவது நமது மதிப்பை நாம் தான் நிர்ணயம் செய்து கொள்கிறோம். இந்த Self Esteem நமது வாழ்க்கையின் வெற்றிக்கு மிக அவசியம்.

நம்மைப் பற்றிய நமது மதிப்பீடு குறைவாக இருக்கிறது என்றால் இதனை Low Self Esteem என்கிறார்கள். இப்படி குறைவாக தங்களை மதிப்பிட்டுக் கொள்பவர்கள் தான் தன்னம்பிக்கை உடையவர்களாக விளங்கிட இயலாது! எனவே பெற்றோர்கள் செய்திட வேண்டியது எல்லாம் தங்கள் குழந்தைகளின் சுய மதிப்பீட்டை “கட்டி எழுப்பிட வேண்டும்”. (to build a strong self esteem). எப்படி கட்டி எழுப்புவது உங்கள் குழந்தைகளின் சுய மதிப்பீட்டை?

இதற்கு இரண்டு வழிகள் தான் உண்டு!

ஒன்று – உங்கள் குழந்தைகளுக்கும் உங்களைப் படைத்த இறைவனுக்கும் ஒரு உறவுப் பாலத்தை அமைத்துக் கொடுப்பதன் மூலம்.

இரண்டு – தன்னால் இவ்வுலகுக்கு தனது திறமைகளைக் கொண்டு நல்லதொரு பங்களிப்பைச் செய்திட முடியும்! - என்று உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் நம்பிக்கை ஊட்டுவதன் மூலம்.

இது எப்போது சாத்தியம் என்றால் – ஒருவன் தனது உள்ளாற்றல்களைக் கண்டு பிடித்திடும் போது தான். இதனை ஆங்கிலத்தில் Self discovery என்கிறார்கள்.

இப்போது முதல் வழியை மட்டும் இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்:

என்னைப் படைத்த இறைவனை நான் ஏற்றுக் கொள்ளும் போது – எனக்குள் அது ஏற்படுத்தும் மாற்றம் என்ன தெரியுமா?

அவனே என்னைப் படைத்தவன்! அவனே என்னை பரிபாலிப்பவன்! அவனே என் தேவைகள் அனைத்தையும் கவனித்துக் கொள்பவன்! அவனே என் எஜமானன்! நான் என்னைப் படைத்த என் இறைவனின் அடிமை! – என்ற சிந்தனை கிளர்ந்தெழுகின்றது!

இப்படி ஒரு குழந்தை சிந்திப்பதால் அவனது மதிப்பீடு எப்படி உயரும் என்று ஒருவர் கேட்கலாம்?

நான் என் இறைவனின் அடிமை எனில் நான் என் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் நான் அடிமை இல்லை என்பதும் பொருள்!

“நான் என் இறைவனைத் தவிர் வேறு யாருக்கும் அடிமை இல்லை!” – என்று ஒரு குழந்தை சிந்திக்கும் போது அவனது மதிப்பீடு உயருகிறதா இல்லையா?

நபி மொழி ஒன்று உண்டு:

“உங்கள் குழந்தைகளை கண்ணியப்படுத்துங்கள்!” – (இப்னு மாஜா)

இந்த நபி மொழியின் படி உங்கள் மகளை நீங்கள் கண்ணியப்படுத்திட வேண்டும்! எப்படி கண்ணியப்படுத்துவீர்கள்?

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் – “நீ மதிப்பு மிக்கவன்! நீ உயர்வானவன்! நீ ஆற்றல் மிக்கவன்! நீ சிறந்தவன்! நீ நல்லவன்! நீ ஒரு பொக்கிஷம்! நீ ஒரு சுரங்கம்! நீ அல்லாஹ்வை ஈமான் கொண்டவன்! அவன் உன்னைக் கண்ணியப்படுத்தியிருக்கின்றான்! உன்னை ஒரு பொக்கிஷம் என்கிறான் அவன்! நீ விலை மதிப்பற்றவன்! அல்லாஹு தஆலா உன்னை எல்லா நிலைகளிலும் சிறப்பாக்கி வைப்பான்!” – என்றெல்லாம் நாளும் பொழுதும் சொல்லி சொல்லியே வளர்த்திட வேண்டும்! அவர்களை ஒருக்காலும் நீங்களே குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது!

பெற்றோர்களே நீங்கள் ஏழையாக இருக்கலாம்! உங்கள் குழந்தைகளுக்கு மற்றவர்களைப்போல் தாராளமாக செலவு செய்திட இயலாமல் போகலாம். அதனால் என்ன? நீங்களும் ஒரு சுரங்கம் தான்! உங்கள் குழந்தையும் ஒரு சுரங்கம் தான்!

உங்கள் குழந்தை கருப்பாக இருக்கலாம். அல்லது குட்டையாக இருக்கலாம். அதனால் என்ன? அப்போதும் உங்கள் குழந்தைகள் சுரங்கங்கள் தான்!

அதே நேரத்தில் உங்கள் குழந்தைகளின் திறமைகள் கண்டுபிடிக்கப் பட்டாக வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதைத் தவிர்த்திட இயலாது! இது குறித்து நாம் பின்னர் பார்ப்போம்.

இன்னொரு மிக முக்கியமான பாடம்:

தாங்கள் மதிப்பு மிக்கவர்கள் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் உணர்த்துவது போலவே – மற்ற குழந்தைகளும் மதிப்பு மிக்கவர்களே என்றும் அவர்கள் அனைவரையும் அவ்வாறே “மதித்திட வேண்டும்” என்பதையும் சேர்த்தே கற்றுக் கொடுங்கள்.

யாரையும் அவர்கள் மட்டம் தட்டிப் பேசிட அனுமதிக்காதீர்கள். உங்கள் வீட்டு வேலைக்காரருக்குக் கூட உங்கள் குழந்தைகள் மதிப்பளிக்கக் கற்றுக் கொடுங்கள். நீங்களும் மதிப்பளியுங்கள்.

யாரும் யாரையும் இழிவாகக் கருதிட வேண்டாம் என்பது நபிமொழி.

நபி (ஸல்) அவர்கள் வரலாற்றில் காணக் கிடைக்கின்ற ஒரு நிகழ்ச்சி இது:

மக்களால் அவ்வளவாக மதிக்கப்படாத அடிமை ஒருவர். இவர் நபி ஸல் அவர்களை சந்திக்க அவ்வப்போது மதினா வருவார். வரும்போதெல்லாம் தவறாமல் நபியவர்களுக்கு ஏதேனும் ஒரு அன்பளிப்பு ஒன்றை வாங்கி வரத் தவறுவதில்லை.

ஒரு முறை – அவர் நபியவர்களை சந்திக்க மதினா வந்து அன்பளிப்புப் பொருள் ஒன்றை வாங்க அங்காடி ஒன்றுக்கு சென்றிருந்தார். இவரைக் கண்ட மற்ற நபித்தோழர்கள், அவருடைய வருகை குறித்து நபியவர்களிடம் தெரிவித்து விட்டனர். உடனே நபியவர்கள் அந்த அங்காடிக்குச் சென்று, அவரை பின் பக்கமாகச் சென்று கட்டிப் பிடித்துக் கொண்டு, “இவரை விலைக்கு வாங்குவார் யாரும் உண்டா?” – என்று கேட்டார்கள்.

தன்னைக் கட்டிப்பிடித்தது நபியவர்கள் என்று அறியாத அவர், தன்னை விடுவித்துக் கொண்டு திரும்பிப் பார்த்திட அது நபியவர்கள் தான் என்பதைக் கண்ட அவர், “யார் இந்த அடிமையை விலை கொடுத்து வாங்குவார்கள் நபியே?” என்று கேட்க, அல்லாஹ்விடத்தில் உமது மதிப்பு மிக மிக அதிகமே” என்றார்களாம்.

இதுவே நமது மற்றும் நமது குழந்தைகளின் மனப்பாங்காக அமைந்திட வேண்டும்!

Comments