இன்றைய குழந்தைகள் படுசுட்டிகள்!

அன்று ஒரு நாள் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இஸ்லாம் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். பாடத்தைத் துவங்கிடும் முன்பு கேள்வி ஒன்றைக் கேட்டேன்:

'முஸ்லிம் என்றால் யார்?'

ஆளுக்கொரு பதிலைச் சொன்னார்கள். நான் கேட்டேன்:

முஸ்லிமான தாய் தந்தைக்குப் பிறந்த ஒருவரே முஸ்லிம் ஆவார் - இது சரியா? தவறா?





'தவறு சார்' என்றான் ஒரு மாணவன் உடனேயே.

'எப்படி?'

'முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு முஸ்லிம்! ஆனால் அவர்களின் தந்தை ஒரு முஸ்லிமாக இருந்திடவில்லையே சார்! '

'சார்! சார்!' என்று எழுந்து நின்றான் மற்றொரு மாணவன்

'என்ன பையா? '


'இப்ராஹிம் நபி(அலைஹிஸ்ஸலாம்)யின் தந்தை சிலைகளை விற்று வந்தார். ஆனால் அவர் மகன் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) ஒரு முஸ்லிம்தானே' என்றான்.

இவர்கள்தாம் இன்றைய குழந்தைகள். படு சுட்டிகள்! படு வேகமாக சிந்திப்பவர்கள். நாமே வியந்து அசந்து போகும் அளவுக்கு அவர்களிடம் சிந்தனை வளம் (creative thinking) கொட்டிக் கிடக்கிறது.

ஒரு தடவை ஆங்கிலக் கலந்துரையாடல் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தேன். மாணவர்களிடம் கற்பனையாக 'நீங்கள் இப்போது தான் சிங்கப்பூரிலிருந்து சென்னை விமான நிலையம் வந்திருக்கின்றீர்கள். விமான நிலைய அதிகாரிகளிடம் நீங்கள் உரையாடிட வேண்டும். எவ்வாறு உரையாடுவீர்கள்? செய்து காட்டுங்கள் பார்ப்போம் ' என்றேன்.

அவர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து உரையாடலைத் தொடங்கினார்கள். சற்று நேரத்தில் அவர்களில் ஒருவனை கவனித்தேன். மூக்கின் மேல் ஒரு கர்ச்சீப்பை வைத்துக் கட்டிக் கொண்டிருந்தான். ஏன் என்று கேட்டேன். 'சார்ஸ் ' வியாதிக்கு பயந்து தான் சார் என்றான். (அப்போது சிங்கப்பூரில் 'சார்ஸ் ' பயம் இருந்தது உண்மை தான்). மாணவனின் கற்பனை வளத்தைப் பார்த்தீர்களா? இவர்கள்தாம் இன்றைய மாணவர்கள்.

பெற்றோர்களே! ஆசிரியர்களே!

உங்கள் குழந்தைகளும் மாணவர்களும் படு சுட்டிகளே என்பதை பல தருணங்களில் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அவற்றை ஒரு கணம் நினைவு படுத்தி அசை போட்டுப் பாருங்கள்;. அத்தகைய 'சுட்டித்தனம் ' குழந்தைகளுக்கு அவசியம். அவர்களின் எதிர்கால வெற்றிக்கு அவர்களிடம் கொட்டிக் கிடக்கின்ற புதுப்புது சிந்தனைத் திறன்தான் பெரிதும் உதவும். அவற்றை அள்ளி அள்ளி வெளிக்கொணர வேண்டுமே தவிர கிள்ளி எறிந்து விடக் கூடாது.

சில சமயங்களில் நமது குழந்தைகள் நமது எதிர்பார்ப்புகளுக்குத் தகுந்தவாறு 'அடக்கம் ஒடுக்கமாக' நடந்திட மாட்டார்கள். அப்போதெல்லாம் பெரியவர்கள் நாம் என்ன செய்வோம்? நமது பழங்கதைகளைத் துவங்கி விடுவோம்.

அந்தக் காலத்தில் நாங்களெல்லாம் இப்படியா இருந்தோம். கையைக் கட்டி,  வாயைப் பொத்தி நில் என்றால் நிற்போம். உட்கார் என்றால் உட்காருவோம். நீங்களும் இருக்கிறீர்களே என்று நீட்டி முழக்கத் துவங்கி விடுவோம்.

நமது பழங்கதைகள் (flashback) அவர்களுக்கு சுவைப்பதில்லை. குழந்தைகள்தானே - அவர்களுக்கு என்ன தெரியும் என்று நினைக்காதீர்கள்.

பெற்றோர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் வேறு உங்கள் குழந்தைகள் வேறு. நீங்கள் வாழ்ந்த காலம் வேறு. அவர்கள் வளர்கின்ற இன்றைய காலம் முற்றிலும் வேறு. நமது பெற்றோர் நம்மை வளர்த்தது போல நாம் நமது குழந்தைகளை நிச்சயமாக வளர்த்திட முடியாது. கூடாது!!

எனவேதான் சொல்கிறோம்.இன்றைய குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது என்பது ஒரு பெரிய சவால் ஆகும். அதற்கு நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு!

இன்ஷா அல்லாஹ் தொடரும்

Comments