உங்கள் குழந்தைகள் சுரங்கங்கள்!


“மனிதர்கள் சுரங்கங்கள் – தங்கத்தைப் போல, வெள்ளியைப்போல!” – என்றார்கள் இறைத்தூதர் முஹம்மது நபி(சல்) அவர்கள்.

சுரங்கம் என்றால் என்ன? தங்கம், வெள்ளி போன்ற விலை மதிப்பிற்கரிய பொருட்கள் கனிமங்களாக, தாதுப் பொருட்களாக தோண்டத் தோண்டக் கிடைத்துக் கொண்டே இருக்கும் இடம் தானே சுரங்கம் எனப்படுவது.


சுரங்கங்களில் பல வகைகள் உண்டு. தங்கச் சுரங்கம், வெள்ளிச் சுரங்கம், நிலக்கரிச் சுரங்கம் – அவற்றுள் சிலவாகும். சுரங்கங்களிலுள்ள தாதுப் பொருட்களைத் தோண்டி எடுத்துத் தூய்மைப் படுத்தினால் நமக்குச் சுத்தமான தங்கம் கிடைக்கும், வெள்ளி கிடைக்கும், நிலக்கரி கிடைக்கும். அவை மக்களுக்குப் பயன் படும்.


அது போலவே மனிதனும் ஒரு சுரங்கம் தான். ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் பொதிந்து கிடக்கின்ற கருவூலங்கள் – மனித வளங்கள் – ஏராளம். அந்த மனித வளங்களைத் தோண்டித் தோண்டி, அள்ளி அள்ளி எடுக்கலாம். தூய்மைப் படுத்தலாம். பத்தரை மாற்றுத் தங்கங்களாக மிளிரச் செய்யலாம். அப்படிச் செய்திடும்போது மனிதன் உண்மை மனிதனாக மாற்றப் படுகின்றான். அப்படி என்ன வளங்கள் தான் மனிதனுக்குள் பொதித்து வைக்கப் பட்டிருக்கின்றன என்பதைத் தொடர்ந்து வரும் கட்டுரைகளில் அலசுவோம்.

இங்கே நாம் பெற்றோர்களுக்குச் சொல்ல விரும்புவது இது தான்: பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் அனைவருமே சுரங்கங்கள் தாம்! இந்த நபிமொழியின் அடிப்படையில் – பெற்றோர்களுக்கு ஒரு மிகப் பெரிய பொறுப்பு இருக்கின்றது. அது என்னவெனில் – உங்கள் குழந்தைகள் எப்படிப்பட்ட சுரங்கங்கள் என்பதைக் கண்டுபிடிப்பது; அந்த சுரங்கங்களில் உள்ள “பொக்கிஷங்களை” வெளியில் கொண்டு வந்து வளர்த்தெடுப்பது; உங்கள் குழந்தைகளை வெற்றியாளர்களாக மாற்றிக் காட்டுவது! -இதுவே உங்களின் அந்த மகத்தான பொறுப்பாகும்.

அந்தப் பொறுப்பை செவ்வனே நிறைவேற்றிட ஒவ்வொரு பெற்றோரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று தான் – இஸ்லாத்தில் மனித வள மேம்பாடு குறித்த அறிவு! எனவே இதைத் தொடர்ந்து வருகின்ற இஸ்லாத்தின் பார்வையில் மனித வள மேம்பாடு குறித்த கட்டுரைகளை சற்றே நிதானமாகப் படித்து சிந்தியுங்கள். அந்த சிந்தனை – உங்கள் குழந்தைகளை சிறப்பாக வளர்த்திட நிச்சயம் உதவும் இன்ஷா அல்லாஹ்!

Comments