நான் பட்ட கஷ்டங்கள் என் பிள்ளைகள் படக்கூடாது…??


“நான் பட்ட கஷ்டங்கள் என் பிள்ளைகள் படக்கூடாது என்று பெற்றோர்கள் சொல்வது ஒன்றும் சரியான கருத்தாக இருக்க முடியாது.

பெற்றோர்களுக்கு – குறிப்பாக தந்தை மார்களுக்கு நாம் சொல்வது இது தான்:


நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து பல் வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு, பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து பல தரப்பு மக்களையும் சந்தித்து உதவி கேட்டு, மூட்டை தூக்கி, பல இரவுகள் கண் விழித்து காத்திருந்து, பதற்றம், பயம், சோகம், மன அழுத்தம் போன்ற மன உளைச்சல்களுக்கு ஆளாகி, வெற்றியை சந்திப்பதற்கு முன் பல தோல்விகளை சந்தித்து, ……. ஒரு கட்டத்தில் அல்லாஹு தஆலா உங்களைக் கைத்தூக்கி விட நீங்கள் இப்போது சற்றே ஆசுவாசபடுத்திக் கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்த பிறகு… என்ன சொல்கிறீர்கள்?


“அப்பப்பா! நான் பட்ட கஷ்டங்கள் என் பிள்ளைகள் படக்கூடாது!”

இது உங்கள் குழந்தைகளைப் “பறக்க” விடாமல் தடுப்பதற்கு நீங்கள் செய்கின்ற முதல் தவறு! மகா தவறு!

கதை ஒன்று சொல்வார்கள்: வண்ணத்துப்பூச்சி ஒன்று அது பறந்து திரிவதற்கு முன் அது தனது கூட்டுக்குள் (cocoon) இருந்து வெளியே வர படு முயற்சி செய்து கொண்டிருந்ததாம். இதைக் கவனித்த சிறுவன் ஒருவன் அதன் மீது இரக்கப்பட்டு அந்தக் கூட்டை ஒரு கத்தரிக்கோலால் உடைத்து விட்டானாம். அவன் எதிர்பார்த்தது அந்த வண்ணத்துப்பூச்சி பறக்கும் என்று! ஆனால் அதனால் பறக்க முடியவில்லையாமல் கீழே விழுந்து அப்படியே செத்துப் போனதாம்!

படிப்பனை பெற வேண்டியது பெற்றோர்கள்.

பொதுவாகவே நமது குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்த பிறகும் சரி, அவர்கள் வளர்ந்ததும் கல்லூரிக்கு அனுப்பும் காலத்திலும் சரி, பல பெற்றோர்கள் செய்கின்ற தவறு என்னவெனில் – “பிள்ளைகள் கஷ்டப்பட்டு படிக்கின்றார்கள். வீட்டுப்பாடம் எழுதுகின்றார்கள். தேர்வுக்கு தயார் செய்கின்றார்கள். எனவே அவர்களை மேலும் நாம் வேலை வாங்குவது தவறு” – என்று விட்டு விடுகின்றார்கள்.

இது எதில் போய் முடியும் என்றால் – கூடு உடைக்கப்பட்டு வெளியில் வந்து விழுந்த வண்ணத்துப்பூச்சியின் நிலைக்கே கொண்டு போய் விடும்!

படிப்பு படிப்பு என்று புத்தகப்புழுவாக படித்து படிப்பு ஒன்றில் மட்டுமே தங்கள் முழுக் கவனத்தையும் செலுத்தி வேறு எந்த ஒரு திறமையையும் வளர்த்துக் கொள்ளாமல், பள்ளியிலும் கல்லூரியிலும் பல தங்க மெடல்களை வாங்கிக் குவித்த பெரும்பாலோர் – வாழ்க்கையில் வெற்றி பெற்றதில்லை என்பது வாழ்க்கை கற்றுத்தரும் பாடம்!

தனது வாழ்வில் வெற்றிக்கொடி நாட்டிய – ஒரு வன விலங்கு வீடியோகிராஃபர் சொல்கிறார்: “என் வாழ்க்கைக்குத் தேவையான பாடங்கள் பெரும்பாலானவற்றை நான் பள்ளிக்கும், கல்லூரிக்கும் வெளியில் தான் கற்றுக் கொண்டேன்!”

பள்ளிகளும் கல்லூரிகளும் படிப்பு ஒன்றை மட்டும் தான் கற்றுத்தரும். ஆனால் வாழ்க்கையில் வெற்றி பெறத்தேவையான பல விஷயங்களை நாம் கல்விக்கூடங்களுக்கு வெளியில் தான் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

சிந்திக்கும் திறமை, கருத்துப் பரிமாற்றத் திறமை, மற்றவர்களுடன் கலந்து பழகும் திறமை, தலைமைத்துவத் திறமை, குழுவில் ஒரு அங்கமாக இருந்து மற்றவர்களுடன் சேர்ந்து ஒரு காரியத்தை முடித்துத் தரும் திறமை, உணர்ச்சிகளை ஒழுங்கு படுத்திக் கொள்ளும் திறமை, தொழில் நுட்பத்திறமைகள், தன்னை ஒழுங்கு படுத்திக் கொள்ளும் திறமை – இவை அனைத்தும் வாழ்க்கையின் வெற்றிக்குத் தேவையான அடிப்படைத் திறமைகளாகும்.

ஒரு ஆய்வின் படி – கல்லூரிகளில் படித்து விட்டு வெளி வருகின்ற மாணவர்களில் 90% – க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு “பணியாற்றும் திறமை” இல்லையாம்! They are unemployable! – என்று சொல்கிறார்கள்!

விழித்துக் கொள்ள வேண்டியது பெற்றோர்களே!

நீங்கள் என்ன தான் சொல்ல வருகின்றீர்கள் என்கிறீர்களா?

குறித்துக் கொள்ளுங்கள்:

உங்கள் வீட்டை சுத்தப் படுத்தும் பணிகளில் உங்கள் பிள்ளைகளையும் ஈடுபடுத்துங்கள். குறிப்பாக கழிவறைகளை சுத்தப்படுத்துவதிலும் அவர்களை ஈடுபடுத்துங்கள்! குழந்தைகள் தானே என்று விட்டு விட வேண்டாம்!

உங்கள் பிள்ளைகளுக்கென்று தனி இடம் ஒன்றைக் கொடுத்து அவர்களது பொருள்களை ஒழுங்காக அடுக்கி வைக்கச் சொல்லி ஆர்வமூட்டுங்கள்.

அவர்கள் துணிகளை அவர்களே துவைத்திடச் செய்திடுங்கள். யந்திரத்தில் (washing machine) துவைப்பதாக இருந்தாலும் அதனை அவர்களே செய்து கொள்ள வேண்டும் என்று விதியுங்கள். சிறு குழந்தைகளுக்குக் கூட அவர்களது அழுக்குத்துணிகளை இங்கு தான் போட வேண்டும் என்றும் துவைக்கப் பட்ட துணிமணிகளை இப்படித்தான் அடுக்கி வைத்திட வேண்டும் என்றும் பயிற்சி கொடுங்கள்.

வீட்டுக்குத்தேவையான மளிகை, காய்கறிகள் வாங்குவது எப்படி என்ற பயிற்சியும் அவசியமான பயிற்சியாகும். ஒரு பொருளில் சிறந்ததை தேர்வு செய்வது எப்படி, விலையை சரிபார்ப்பது எப்படி, பொருள் கொடுத்து ஒரு பொருள் வாங்குவது எப்படி, (தேவையேற்படின்) பேரம் பேசுவது எப்படி – போன்ற திறமைகள் தானாகவே வளரும்.

மற்றவர்களுடன் பழகுவது எப்படி என்று கற்றுக் கொள்ளுங்கள். சிரித்த முகம் காட்டுவதன் அவசியத்தை உணர்த்துங்கள். நலம் விசாரித்தலைப் பழக்குங்கள்.

பேச்சுத்திறமையை வளர்த்துக் கொள்ள வீட்டிலேயே பயிற்சி அளியுங்கள். அழகாகப் பேசுவது எப்படி என்று கற்றுக் கொடுங்கள். மற்றவர்கள் பேசும்போது காது தாழ்த்திக் கேட்பதன் அவசியத்தை உணர்த்துங்கள். அன்றைய செய்திகளை விவாதப் பொருளாக்குங்கள். கேள்விகள் கேளுங்கள். பதில் தராதீர்கள். அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்த்திடுங்கள்.

மின் சாதனங்களையும், மின்னணு சாதனங்களையும் பொருத்துவது எப்படி, அவைகளைப் பழுது பார்ப்பது எப்படி, தண்ணீர்க் குழாய்களைச் சரி செய்வது எப்படி, சின்னச் சின்ன கொத்தனார் வேலைகள், ஆசாரி வேலைகள் செய்வது எப்படி, கிழிந்த துணிகளைத் தைப்பது எப்படி, பொத்தான்களைத் தைப்பது எப்படி, சிறு தோட்டங்களைப் பராமரிப்பது எப்படி, – போன்ற தொழில் நுட்பங்களைக் கொஞ்சமேனும் அவர்கள் கற்றுக் கொள்ள வகை செய்யுங்கள்.

தலைமைத்துவத் திறமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொடுங்கள். ஒரு விஷயத்தில் மிகச் சரியானதைத் தேர்வு செய்வது (decision making) எப்படி என்ற பயிற்சியும் தாருங்கள். ஒரு பிரச்னையைத் தீர்ப்பது எப்படி என்ற பயிற்சியும் அவசியம். மற்றவர்கள் நமது கருத்தை ஏற்க வைப்பது என்ற பயிற்சியும் தேவை.

தோல்விகளைச் சந்திப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள்; கோபம், பதற்றம் – போன்ற உணர்ச்சிகளை ஒழுங்கு படுத்துவது எப்படி; அவைகளை பொருத்தமாக வெளிப்படுத்துவது எப்படி என்றும் பயிற்சி அளியுங்கள். (பொறியியல், மருத்துவம் படிக்கும் மாணவர்களும் மாணவிகளும் கூட ஏன் தற்கொலையை நாடுகின்றார்கள்?)

உங்கள் பிள்ளைகள் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியே வருவதற்குள் நாம் மேலே குறிப்பிட்டுள்ள திறமைகளை கொஞ்சமேனும் வளர்த்துக் கொண்டிருந்தால் - அவர்கள் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது!

Comments