மனைவி ஒரு பொக்கிஷம்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? அவள் தான்- நல்லதொரு மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது தன்னுடைய கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள். (அறிவிப்பவர்: உமர் (ரலீ); நூல்: அபூதாவூத் 1412)

இது ஆழமாக ஆய்ந்திட வேண்டிய நபிமொழியாகும்.





பொக்கிஷம் என்றால் என்ன? பொன்னும் பொருளும் குவித்து வைக்கப்பட்ட விலை மதிப்பிட முடியாத சொத்தைத் தான் நாம் பொக்கிஷம் என்கிறோம்.

இந்த நபிமொழியில் நல்லதொரு மனைவியை ஒரு பொக்கிஷத்துடன் ஒப்பிடுகிறார்கள் நபியவர்கள். ஒரு பொக்கிஷத்துக்குள் – பொன்னும் பொருளும் புதைந்து கிடப்பது போல – நல்லதொரு மனைவி என்பவள் – “விலை மதிப்பில்லா அதிசயங்களையும் அற்புதங்களையும்” தன்னகத்தே பொதித்து வைத்திருப்பவள் என்று நாம் சொல்லலாம்!

எனவே நல்லதொரு மனைவியை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக் கொண்டவன் – மனைவியை ஒரு பொக்கிஷமாகக் கருதி – மதித்து நடக்க வேண்டும் என்பது தான் இந்த நபிமொழியின் உட்கருத்தாகும்.

ஒரு பொக்கிஷத்தை பெற்றுக் கொண்டவன் – அதனைக் கொண்டாடுவது போல – பொக்கிஷம் போன்ற தன் மனைவியை மதித்து நடக்க வேண்டும். மதிப்பளித்திட வேண்டும். குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது.

மனைவியின் சிறப்புகளை எண்ணி எண்ணி புளகாங்கிதம் அடைந்திட வேண்டும். மனைவியின் நல்ல அம்சங்கள் அனைத்தையும் கண்டுபிடித்து அவைகளை அங்கீகரித்திட வேண்டும். பாராட்டிட வேண்டும். அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திட வேண்டும். ஊருக்கும் உலகத்துக்கும் அதனை எடுத்துச் சொல்லிட வேண்டும்! உச்சி குளிர்ந்து போய் விடுவார் உங்கள் துணை!

நிறைகளைக் கவனித்திடும் போது – உறவு பலப்படுகிறது! முதுமை வரை! நம்பகத்தன்மை (Trust) ஏற்படுகிறது! அது வலிமை பெறுகிறது. தன்னை அப்படியே அர்ப்பணித்து (commitment) விடுவார் மனைவி! பிறகு எல்லாமே உங்களுக்குத்தான்!

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்திருக்கும் நபி மொழி ஒன்றை இங்கே சுருக்கமாகப் பார்ப்போம்:

முற்காலத்தில் பதினொன்று பெண்கள் ஓரிடத்தில் கூடி அமர்ந்து கொண்டு ஒவ்வொருவரும் தத்தம் கணவர் குறித்த செய்திகளில் எதையும் மூடி மறைக்காமல் எடுத்துரைப்பதென உறுதிமொழியும் தீர்மானமும் எடுத்துக்கொண்டனர்.

பின்பு – ஒவ்வொரு பெண்ணும் தத்தம் கணவர் குறித்து சொல்லிக் கொண்டே வந்தனர். இறுதியாக பதினொன்றாவது பெண் கூறினார்: என் கணவர் (பெயர்) அபூ ஸர்உ. அபூ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? ஆபரணங்களை அவர் என் காதுகளில் ஊஞ்சலாடச் செய்திருக்கிறார். (ஆசையாசையாக உணவளித்து) என் கொடுங்கைகளை கொழுக்கச் செய்துள்ளார்.

அவர் என்னைப் பூரிப்படையச் செய்திருக்கிறார். என் மனம் நிறைந்திருக்கிறது. ஒரு மலைக் குகையில் சிறிது ஆடுகளுடன் திரிந்துகொண்டு இருந்த குடும்பத்தில் என்னைக் கண்ட அவர், என்னை மனைவியாக ஏற்று குதிரைகளும் ஒட்டகங்களும் உள்ள, தானியக் களஞ்சியமும் கால்நடைச் செல்வங்களின் அரவமும் நிறைந்த வீட்டில் என்னை வாழச் செய்தார்.

நான் அவரிடம் எதையும் பேசுவேன்; நான் அலட்சியப்படுத்தப்- பட்டதில்லை. நான் தூங்கினாலும் நிம்மதியாக முற்பகல் வரைத் தூங்குகிறேன். நான் உண்டாலும் பருகினாலும் பெருமிதப்படும் அளவிற்கு உண்ணுகிறேன் பருகுகிறேன்.

எனது குறைகள் எல்லாவற்றையும் அவர் மறைத்து விடுவார். அவர் உளப்பூர்வமாக எனக்கு முற்றிலும் கட்டுப்பட்டு விட்டார்! எந்த அளவுக்கு எனில், நான் அவ்வளவு சிறப்பானவளா என்று என்னையே நான் விரும்பத் தொடங்கி விட்டேன்! ( ”I LOVE MYSELF!”)

ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (என்னருமைக் கணவரான) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘(ஆயிஷாவே!) உம்மு ஸர்விற்கு அபூ ஸர்உ எப்படியோ அப்படியே உனக்கு நானும் (அன்பாளனாக) இருப்பேன்’ என்றார்கள்.

ஒருவர் தன் மனைவியை பொக்கிஷமாக வைத்து நடத்துவது எப்படி என்பதன் என்பதன் இலக்கணம் புரிகிறதா?

இப்போது கேள்வி ஒன்று கேட்கப்படலாம்.

நிறை என்று சொன்னாலே குறை என்ற ஒன்றும் உண்டு தானே?

மனைவியரின் குறைகளை எப்படி எடுத்துக் கொள்வது?

நபி அவர்கள் கூறினார்கள்: “எந்த ஒரு முஃமினும் (நம்பிக்கையாளரும்) முஃமினான பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை அவர் வெறுத்தால் மற்றொரு குணத்தைப் பொருந்திக் கொள்வார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

”இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தைவெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்”என நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீ) நூல்: முஸ்லிம் 2915

நமக்கு என்ன அறிவுரை என்றால் – குறைகளைப் பொருட்படுத்திட வேண்டாம் என்பது தான். குறைகளையே கவனித்துக் கொண்டிருந்தால் – “வேறு ஒருவரை மணந்திருந்தால் நன்றாக அமைந்திருக்குமே என் வாழ்க்கை என்ற எண்ணம் மேலோங்கும். நம்பிக்கை மோசடிக்கு வழி திறந்து விடப்பட்டது போல ஆகி விடும்!

அடுத்து பொக்கிஷம் என்பதன் உட்பொருளில் இன்னுமொரு அம்சமும் உண்டு.

பொக்கிஷம் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று!

அதாவது – உங்கள் மனைவியை நீங்கள் தான் பாதுகாத்திட வேண்டும். இந்த பாதுகாவல் அவரது உடலுக்கும் உடமைகளுக்கும் மட்டும் அன்று! அவர்களுடைய உணர்வுகளுக்குப் பாதுகாப்பு அளிப்பவர் நீங்களே! முகம் வாடியிருக்கிறதா? சோகம் அப்பியிருக்கிறதா? வாய் திறக்கவில்லையா? உணவு உண்ணவில்லையா? தூங்கிடவில்லையா? மன உளைச்சலா? மன அழுத்தமா?

மன ரீதியாக அவருக்கு என்ன தேவை? அதனை நீங்கள் அளித்திட வேண்டும். புத்திமதி சொல்லக்கூடாது. கூட அமர்ந்து அவரைப் பேச விட வேண்டும். அமைதியாகக் காது கொடுத்துக் கேட்டிட வேண்டும். உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த உணர்வுகளை நீங்கள் அங்கீகரித்திட வேண்டும்.

ஒரு தடவை நபியவர்கள் ரமளான் இஃதிகாஃபின் போது தம் மனைவியர் அனைவரையும் அவர்களின் பெற்றோர்கள் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். ஆனால் ஸஃபிய்யா பின்த் ஹுயை என்ற ஒரேஒரு மனைவி மட்டும் செல்லவில்லை. அன்னை சஃபிய்யா அவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.

அவர்கள் வருத்தம் அடைந்து விடக்கூடாது என்பதற்காகவே – நபியவர்கள் – இஃதிகாஃபில் இருக்கும்போதே பள்ளிக்கருகில் மனைவியை வரவழைத்து நீண்ட நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்களாம். பிறகு அவர்கள் வீடு வரை அழைத்துச் சென்று விட்டு விட்டு வந்தார்களாம்!

அப்போது நடந்த சம்பவம் தான் இதோ:

ஸஃபிய்யா பின்த்து ஹுயை (ரலி) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்கüடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசி விட்டு திரும்பிச் செல்ல எழுந்தேன்.

அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னைத் திருப்பியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். – உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது- (என அறிவிப்பாளர் கூறுகிறார்.) அப்போது அன்சாரிகளில் இருவர் அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள்.

உடனே, நபி (ஸல்) அவர்கள், “நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான்” என்று சொன்னார்கள். இதைக் கேட்ட அவ்விருவரும், “அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்?)” என்று சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான் …அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான்… என்று நான் அஞ்சினேன்” என்று சொன்னார்கள். புகாரி (3281)

இப்போது கட்டுரையின் துவக்கத்தில் சொன்ன நபிமொழியை மீண்டும் கவனியுங்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? (அவள் தான்) நல்ல மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது (தன்னுடைய) கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள். / அறிவிப்பவர்: உமர் (ரலீ) / நூல்: அபூதாவூத் 1412

நீங்கள் – உங்கள் மனைவியை ஒரு பொக்கிஷம் போல் நடத்தினீர்கள் என்றால்

– அதாவது

ஒன்று: மனைவியின் நிறைகளைக் கவனித்து,

இரண்டு: அவருடைய குறைகளைப் புறக்கணித்து,

மூன்று: அவரது உணர்வுகளை நீங்கள் மதித்து நடந்தீர்கள் என்றால்

- இந்த மூன்றையும் நீங்கள் அவர்களுக்கு வழங்கினீர்கள் என்றால் -

உங்களுக்கு கிடைப்பது மூன்று!

ஒன்று: அவளை நீங்கள் நோக்கினால் உங்களை மகிழ்விப்பாள்!

இரண்டு: நீங்கள் கட்டளை இட்டால் கட்டுப்பட்டு விடுவாள்!

மூன்று: நீங்கள் அவரிடம் இல்லாமல் இருக்கும் போது தன் கற்பை உங்களுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள்.

அடுத்து நீங்கள் என்ன செய்திட வேண்டியது என்ன?

ஒரு நோட்புத்தகத்தை எடுத்துக் கொள்ளுங்கள்:

உங்கள் மனைவியின் நிறைகளை ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டே வாருங்கள்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன் – அந்த நோட்புக்கை எடுத்துக் காட்டுங்கள் உங்கள் துணையிடம். அது பற்றி உரையாடுங்கள்.

அற்புதங்கள் நடந்தேறும் உங்கள் இல்லற வாழ்க்கையில்!

Comments