குர்ஆனை உன் கரத்தில் எடு!

என் அன்பான புதிய தலைமுறை முஸ்லிம் இளைஞர்களே!

உணர்ச்சி வசப் படாமல் சிந்தித்து - என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்!

உங்களுக்கென்று ஒரு குர்ஆன் பிரதி உண்டா?

உங்களுக்கென்று ஒரு குர்ஆன் மொழிபெயர்ப்பு உண்டா?

குர்ஆனை - பிழையின்றி ஓதத் தெரியுமா?

குர்ஆன் மொழிபெயர்ப்பை ஒரு தடவையாவது படித்தது உண்டா?

குர் ஆனின் கருத்துக்களைக் குறித்து சிந்தித்துப் பார்த்ததுண்டா?

என்ன வாழ்க்கை வாழ்கிறோம் நாம்?

ஊரோடு ஒத்து வாழ் என்று

உலகத்தை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டு

உண்டு கழித்து உறங்கி விழித்து வளர்ந்து தேய்ந்து போய்விடவா

நாம் முஸ்லிம் ஆனோம்?

நவீன மனிதர்களாகிய நாமே உருவாக்கிக் கொண்ட பிரச்னைகளால்

நாம் அனைவருமே மூழ்கிக் கொண்டிருக்கின்றோம்.

இது உண்மையா, இல்லையா?

இன்றளவும் கூட தீர்வு காண இயலாமல் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்

நவீன உலகின் எல்லாப் பிரச்னைகளுக்கும்

குர் ஆன் மட்டுமே நடைமுறை தீர்வாகும் என்பது உனக்குத் தெரியுமா?

என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்:

மக்களின் மூட நம்பிக்கைகளை அகற்றுவது எப்படி?

மதுவிலிருந்து மக்களை காப்பது எப்படி?

இனப்பிரச்னைக்கு தீர்வு என்ன?

எய்ட்ஸ் வராமல் தடுப்பது எப்படி?

சிசுக்கொலையைத் தடுக்க வழி ஏதும் உண்டா?

லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பது எப்படி?

வரதட்சனைப் பிரச்னைக்கு தீர்வு உண்டா?

வட்டியின் பிடியிலிருந்து உலகைக் காப்பது எப்படி?

குற்றங்களைக் குறைத்திட வழி ஏதும் உண்டா?

நீதியும் நியாயமும் செழித்திட வழி ஏதும் உண்டா?

குர்ஆனில் மட்டுமே இவை அனைத்துக்கும் தீர்வு உண்டு!

குர்ஆனைத் தவிர வேறு தீர்வு உண்டா?

குர் ஆன் ஒரு புறம் இருக்கட்டும்.

இன்றைய மனிதனின் மனக்கவலையை போக்கிட வழி உண்டா?

மன அழுத்தத்துக்கு மருந்து உண்டா?

தனி மனித வாழ்க்கைக்கு வழி காட்டுதல் உண்டா?

குடும்ப வாழ்க்கைக்கு வழி காட்டுதல் உண்டா?

சுரண்டலற்ற பொருளாதாரத்துக்கு வழி காட்டுதல் உண்டா?

தூய்மையான அரசியலுக்கு வழி காட்டுதல் உண்டா?

இன்றைய மனிதனுக்கு - தன்னைப் பற்றி, தன் உள்ளத்தைப் பற்றி

இவ்வுலகத்தில் தனது இருப்பு எதற்கு என்பது பற்றி தெரியுமா?

அறிவு படைத்த மனிதனுக்கு

அறிவியலை அணுகுவது எப்படி என்று தெரியுமா?

தொழில் நுட்பத்தினை முறையாக எப்படி கையாள வேண்டும் என்று தெரியுமா?

தன் வரலாற்றிலிருந்து பாடம் படிப்பது எப்படி என்று தெரியுமா?

நல்லதொரு சமூக மாற்றத்தை நிகழ்த்துவது எப்படி என்பது தெரியுமா?

இன்றைய மனிதனுக்கு

நேர்மையாக வணிகத்தில் ஈடுபடுவது எப்படி என்று தெரியுமா?

ஒரு கூட்டமைப்பை நேர்மையான முறையில்

எவ்வாறு மேலாண்மை செய்திடுவது என்பது தான் தெரியுமா?

நீதியை நிலை நிறுத்தும் சட்டம் வகுக்கத் தெரியுமா?

குற்றங்களைக் குறைக்கத் தான் தெரியுமா?

மேலே சொல்லப்பட்ட எல்லாப் பிரச்னைகளுக்கும்

குர் ஆனில் மட்டுமே தீர்வு இருக்கிறது என்று

உனக்காவது தெரியுமா? ஓ எனதருமை முஸ்லிம் இளைஞனே!

குர் ஆனை உன் கரத்தில் எடு! முறைப்படி ஓது!

மொழி பெயர்ப்பைப் படி! சிந்தித்துப் பார்! கேள்வி கேள்!

கருத்துக்களைச் சேகரி! நடைமுறைப் படுத்து! எடுத்துச் சொல்! புரிய வை!

மாறும் ஒரு நாள் இவ்வுலகம்! எல்லாப் பிரச்னைகளும் தீரும். தீர்க்கப் படும்.

உலகம் அமைதியைத் தழுவும்.

அப்போது தான்

"இஸ்லாம்" என்றால் "அமைதி" என்று உலகம் ஒத்துக் கொள்ளும்.

அதற்கு - நீயும் நானும்

முஸ்லிம்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கின்ற நம் அனைவரும்

செய்திட வேண்டியதெல்லாம்

குர் ஆனை நம் கரத்தில் ஏந்துவது ஒன்று மட்டுமே!

Comments