வீட்டுக்குள்ளே விண்மீன்கள்!


இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; (2:31)

அறிவு என்பது மனிதனின் முதன்மையான மனித வளம் ஆகும்.

ஆனால் பிறக்கும்போதெ மனிதன் அறிவாற்றல் மிக்கவனாகப் பிறப்பதில்லை. தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் எந்த ஒரு குழந்தையும் எந்த ஒன்றையுமே அறியாத நிலையிலேயே பிறக்கின்றது.


உங்கள் தாய்மார்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் – நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு – அவனே அமைத்தான். (16:78)

மனிதர்கள் தங்களின் அறிவை வளர்த்துக் கொள்வதற்காகத்தான் ஐந்து புலன்களையும், சிந்திகின்ற இதயத்தையும் வழங்கியிருக்கின்றான் வல்லோன் அல்லாஹு தஆலா.

புலன்களின் மூலமாக அறிவை வளர்த்துக் கொள்வதற்கு, குழந்தைகள் வளர்கின்ற சூழல் மிக முக்கியம்! அப்படிப்பட்ட சூழலை குழந்தைகளுக்கு வழங்கிட வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் நீங்காக் கடமையாகும்.

ஆதிபிதா ஆதம் (அலை) அவர்கள் காலம் தொடங்கி, இன்றைய நவீன அறிவியல் யுகம் வரை மனிதனின் அறிவு எப்படி வளர்ந்தது? நாம் மேலே குறிப்பிட்ட படி ஐந்து புலன்களின் வழியே தான் தன் அறிவை வளர்த்துக் கொள்கிறான் மனிதன்.

உதாரணமாக கண்களால் உற்று நோக்கி (observation) மனிதன் கற்றுக் கொண்ட ஒரு சம்பவம் பற்றி திருமறை குர்ஆன் நமக்குச் சொல்லிக்காட்டுகிறது.

ஆதத்தின் இரு மகன்கள் வரலாறு நமக்குத் தெரியும். ஆபில் அவர்களை அவருடைய சகோதரர் காபில் கொன்று விட்டார். இச்சம்பவம் திருமறையிலே விளக்கப் பட்டுள்ளது.

(இதன் பின்னரும்) அவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்றுவிடுமாறு தூண்டிற்று; ஆகவே அவர் (தம்) சகோதரரைக் கொலை செய்துவிட்டார்; அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவர் ஆகிவிட்டார். (5:30)

இது உலகில் நடந்த முதல் கொலை. சரி, பிரேதத்தை என்ன செய்வது?

பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் “அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!” என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார். (5: 31)

மனித இனம் இப்படித் தான் தனது அறிவை வளர்த்துக் கொண்டு வருகிறது – ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்திலிருந்து.. இன்று வரை!

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்பதும் உண்மையே!

மண்டை ஓட்டினை உதைத்து விளையாடியத் துவங்கிய மனிதன் தான் பின்னர் அதனை கால் பந்தாக மாற்றியிருக்கிறான்.

மாதிரிக் கணக்கு ஒன்றை விளக்கிக் காட்டித்தான் மற்ற கணக்குகளைப் போடச் சொல்கிறார் கணித ஆசிரியர்.

வல்லோன் இறைவன் உதாரணங்கள், உவமைகளைக் கூறுவதன் நோக்கமும் – மனிதனின் இயல்பு அறிந்து தான்! நாம் கண்களால் பார்த்து ரசிக்கின்ற தோட்டம் எனும் சொல் மூலமாகத் தான் நாம் பார்க்காத சுவனத்தை அறிமுகப்படுத்துகிறான் வல்லோன் அல்லாஹ்!

நபியவர்களை அழகிய முன்மாதிரியாக நமக்கு ஆக்கியிருப்பதுவும், நபியவர்களைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்கள் தொழுங்கள் என்பதுவும் நபிமொழி. ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதும் இதே வழிமுறையைப் பின்பற்றித்தான்.

குழந்தைகளும் அப்படித்தான் ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்கின்றன.

எங்கள் ஊரில் ஒரு ஆசிரியர். ஒரு முறை அவர் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைச் சொன்னார். அவரது சிறிய மழலைக் குழந்தைக்கு ஒவ்வொன்றாக இது என்ன, அது என்ன – என்று ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொடுத்து வந்தாராம்.

“கைக்குழந்தைக்கு” ஆங்கிலச் சொல் இலகுவாக இருக்கும் என்று BABY என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார். வீட்டில் வளர்க்கப் பட்டு வந்த கோழிகளை “BO-BO” என்றும் சொல்லிக் கொடுத்தாராம். ஒரு நாள் அவர் வீட்டுக் கோழி குஞ்சு பொரித்த போது கோழிக் குஞ்சுகளைப் பார்த்த அந்த மழலை எப்படி அழைத்திருக்கும் என்கிறீர்கள்?

“BABY-BOBO” என்று அழைத்ததாம்!

ஒரு உணவுப் பண்டத்தைத் தயாரிக்கிறான் ஒருவன். இன்னொருவன் வந்து அதில் புதிதாக ஒன்றை சேர்த்து அல்லது ஒன்றுக்கு பதிலாக இன்னொன்றைப் போட்டு புதியதொரு உணவுப் பண்டத்தை செய்து தருகிறான்.

நவின் கிருஷ்ணா என்ற மாணவன் ஒருவன் – பூச்சிகளைக் கொல்லும் பூச்சிக் கொல்லி மருந்து மனிதனையும் கொல்லும் என்றால் மனிதனுக்கு விஷமான நிகோடினை வைத்து பூச்சிகளைக் கொல்ல முடியுமா என்று சிந்தித்தான். விளைவு – நமக்கு அவ்வளவாகத் தீங்கு விளைவிக்காத தாவர-பூச்சிக் கொல்லி மருந்து தயார்!

நம்மைப் போன்ற சாமானியர்களுக்கும், இது போன்று பல சிந்தனைகள் உதிக்கத் தான் செய்யும். நமக்கும் கண்டுபிடிப்பாளர்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, நாம் சிந்திப்பதோடு நிறுத்திக் கொள்வோம். அவர்கள் செய்து பார்த்து விடுவார்கள். அவ்வளவு தான்!

இதில் பெற்றோர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் சொல்ல வேண்டியது ஒன்று இருக்கிறது.

நம் குழந்தைகள், இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து பார்க்க முயற்சிப்பார்கள். நாம் செய்ய வேண்டியது எல்லாம் அவர்களை ஊக்குவிப்பது தான்.

ஆனால் இதற்கு நேர்மாறாக அல்லவா நாம் நடந்து கொள்கிறோம்! நம் நாட்டில் அறிவியலாளர்கள் அதிகம் தோன்றாமைக்கு இதுவே காரணமாக இருக்கலாம் அல்லவா?

உங்கள் வீட்டுக்குள்ளும் “விண்மீன்கள்” இருக்கலாம். அவைகளைக் கண்டு பிடித்து ஒளி வீசிப் பிரகாசிக்கச் செய்வதெல்லாம் உங்கள் கரங்களில் தான் இருக்கின்றது!

புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். வீட்டுச் சூழல் உங்கள் குழந்தைகளின் ஆராய்ச்சிக்குத் தோதுவான ஆய்வுக்கூடங்களாக மாறட்டும்!!

அறிவியல் அறிஞர்களை வீட்டுக்கு வெளியில் தேட வேண்டாம். அவர்கள் உங்கள் இல்லங்களில் தான் இருக்கின்றார்கள்!

Comments