எப்படித் திருத்துவது குழந்தைகளை?


பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் – குழந்தைகளையும் மாணவர்களையும் திட்டாதீர்கள், அடிக்காதீர்கள் என்று சொன்னால் – பின்பு எப்படித் தான் அவர்களைத் திருத்துவது என்று கேட்கிறார்கள்.


குழந்தைகளை திட்டுவதனாலும் அடிப்பதனாலும் ஏற்படுகின்ற பாரதூரமான விளைவுகளைப் பற்றி நாம் முன்னரே விளக்கியுள்ளோம்.


இப்போது நமது அறிவுரைகளை மீறுகின்ற குழந்தைகளை எப்படி அடிக்காமலும் திட்டாமலும் திருத்துவது என்பதைப் பார்ப்போம்.

குழந்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமானவர்களே. எல்லாக் குழந்தைகளும் ஒன்று போலவே இருக்க மாட்டார்கள், ஒன்று போலவே செயல் பட மாட்டார்கள்.

எனினும் பெரும்பாலான குழந்தைகள் பெரியவர்களின் அறிவுறுத்தல்களுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களாகவே தான் இருப்பார்கள். ஒரு ஆய்வின் படி சுமார் 85% குழந்தைகள் இப்படிப்பட்டவர்கள் தானாம். இவர்களை compliant children என்று அழைக்கிறார்கள்,

ஆனால் மீதி சுமார் 15% குழந்தைகள் தான் எந்த அறிவுறுத்தல்களுக்கும் அப்படியே கட்டுப் படுவதில்லையாம். இவர்களை deviant children என்று அழைக்கிறார்கள்,

பள்ளிக் கூடங்களில் ஏற்படுகின்ற பெரும்பாலான பிரச்னைகள் இத்தகைய குழந்தைகளால் தான் ஏற்படுகின்றனவாம்.

இத்தகையவர்கள் பெற்றோர்களின் எந்த அறிவுறுத்தல்களுக்கும் கட்டுப் பட மாட்டார்கள். சட்டங்களை மீறுவார்கள். பெற்றோர்களுக்கு பெரும் சோதனையாக விளங்குவார்கள். எங்களுக்கு ஏன் இப்படி ஒரு பிள்ளை வந்து பிறந்துள்ளதோ என்று கூட பெற்றவர்கள் அங்கலாய்ப்பது உண்டு.

ஒன்றைச் செய்யாதே என்றால் அதனைச் செய்தே காட்டுவார்கள். ஒன்றைச் செய் என்றால் செய்யவே மாட்டார்கள்.

“வீட்டுக்குள் சிறிய குழந்தைகள் இருக்கின்றனர். பந்து விளையாடுவதாக இருந்தால் வெளியே போய் விளையாடுங்கள் என்பார் தாய். ஆனால் தாய் கொஞ்சம் அங்கே இங்கே போயிருக்கும் நேரம் பார்த்து வீட்டுக்குள்ளேயே விளையாடத் தொடங்கி விடுவார்கள். கேட்டால் நாங்கள் குழந்தைகள் மீது படாமல் விளையாடுவோம் என்று சமாளிப்பார்கள். பொறுமை இழப்பார் தாய்! இத்தகைய குழந்தைகளை strong willed children என்றும் அழைக்கிறார்கள்.

இது போன்ற சூழல்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பெரும்பாலான பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. ஒவ்வொரு பெற்றோரும் அவரவர் விருப்பம் போல ஒவ்வொரு வழிமுறையைப் பின் பற்றுவார்கள்.

ஒரு சில பெற்றோர்கள் திட்டுவது, அடிப்பது என்று “கடினமாக தண்டிக்கும்” வழிமுறையைப் பின்பற்றுவார்கள்.

வேறு சில பெற்றோர்களோ – “குழந்தைகள் என்றால் இப்படித் தான் இருப்பார்கள், அவர்களை அப்படியே விட்டு விட வேண்டியது தான்” – என்று விட்டு விடுவார்கள்!

இந்த இரண்டு வழி முறைகளுமே தவறு!

அப்படியானால் என்ன செய்வது?

பொதுவாக குழந்தைகளைத் திருத்துவதில் ஆசிரியர்களும், பெற்றோர்களும் செய்கின்ற தவறு ஒன்று இருக்கின்றது. அதாவது குழந்தைகள் என்ன செய்திட வேண்டும், என்னவெல்லாம் செய்திடக் கூடாது என்பதனை “வாய் மொழி” வழியே அறிவுறுத்துவது மட்டுமே போதும் என்று எண்ணுகிறார்கள். இதனை ஆங்கிலத்தில் verbal step என்று அழைக்கிறார்கள். ஆனால் இந்த வாய்மொழி அறிவுறுத்தல் மட்டுமே இப்படிப்பட்ட குழந்தைகளுக்குப் போதாது.

இன்னொரு படி நாம் மேலே செல்ல வேண்டும். அதற்குப் பெயர் தான் – “செயல் வழி அறிவுறுத்தல்”. அதாவது – Action step!

அது என்ன – செயல் வழி அறிவுறுத்தல் – என்கிறீர்களா?

மேலே சொல்லப் பட்ட அதே உதாரணத்துடன் விளக்குவோம்:

தாய் சொல்கிறார்; “வீட்டுக்குள்ளே பந்து விளையாடக் கூடாது. கைக்குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது.”

ஆனால் குழந்தையின் அண்ணன்மார்கள் இரண்டு பேரும் வீட்டுக்குள்ளேயே பந்தை எடுத்து விளையாடத் தொடங்கி விடுகிறார்கள்.

தாய் இதனை கவனித்து விடுகிறார். “என்ன? நான் முன்பே சொல்லியிருக்கின்றேனே, வீட்டுக்குள் பந்து விளையாடக் கூடாது என்று; வெளியே போய் விளையாடுங்கள்; அடுத்த தடவை நீங்கள் உள்ளே பந்து விளையாடுவதைப் பார்த்தால் பந்தை எடுத்து உள்ளே வைத்து விடுவேன், சரிதானே?” என்று சொல்லி விட்டு நகர்கிறார். இது தான் வாய் மொழி அறிவுறுத்தல்.

ஆனால் அந்த பெரிய குழந்தைகள் இருவரும் மீண்டும் பந்தைப் போட்டு வீட்டுக்குள்ளேயே விளையாட்டைத் தொடர்கிறார்கள். சற்று நேரத்தில் தாய் அங்கு வந்து சேர்கிறார்.

உடனே அவர்கள் அருகில் சென்று அந்த பந்தை அவர்களிடமிருந்து பறித்துக் கொண்டு – இன்று உங்களுக்கு பந்து விளையாட்டு அவ்வளவு தான்; சொன்ன பேச்சைக் கேட்பீர்கள் என்றால் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று உறுதியாகச் சொல்லி விட்டு பந்தை பத்திரமாக எடுத்து அலமாரியில் வைத்து மறக்காமல் பூட்டி சாவியை எடுத்துச் சென்று விடுகிறார். .

இது தான் செயல் வழி அறிவுறுத்தல்.

அதாவது தான் செய்த தவறுக்கான விளைவை இப்போது அவர்கள் அனுபவிக்கின்றார்கள். அவ்வளவு தான்!

இது போன்று ஒவ்வொரு தடவையும் குழந்தைகள் கட்டுப் பாடுகளை மீறி நடக்கும் போதும் இதே வழி முறையைப் பின்பற்றினால் வீட்டுக்குள் கட்டுப்பாடு தானே வரும்.

தவறுகள் செய்கின்ற மனிதர்களைத் திருத்துவதற்கு இறைவன் கடை பிடிக்கும் நியதியும் இதுவே தான்!

பின் வரும் இறை வசனத்தை சற்று ஆழமாக நோக்குங்கள்:

மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான். ( அல் குர்ஆன் 30: 41)

சிந்தனைக்குரிய வசனம் தானே இது!

ஆய்வுகள் தெரிவிப்பது என்னவென்றால் இது போன்று குழந்தைகள் செய்கின்ற சிறு சிறு தவறுகளுக்கெல்லாம் இவ்வாறு “விளைவுகளை அனுபவிக்க வைத்திடும்” பயிற்சியைத் தொடர்ந்து வழங்கிடும் போது விளைவுகளைக் குறித்து அஞ்சி தவறுகளிலிருந்து பின் வாங்கிடும் மன நிலை ஒன்று – அவர்களின் மூளை நரம்புகளின் நுணுக்கமான பிணைப்புகளில் ஆழமாகப் பதிவு செய்யப் படுகிறது,

பின்பு தவறு ஒன்றைச் செய்ய நினைக்கும்போது மூளை அவனுக்கு அதன் விளைவு குறித்து எச்சரிக்கத் துவங்கி விடும். பின்னர் தானாகவே இப்படிப்பட்ட குழந்தைகள் கட்டுப்பாடுகளைக் கடை பிடிப்பவர்களாக மாறி விடுவார்கள்.

இதுவே இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்கள் வழங்குகின்ற மிகப்பெரிய நன்கொடை (gift) ஆகும் என்றால் அது மிகையாகாது!

பெற்றோர்களே! தவறு செய்கின்ற குழந்தைகளிடம் நமது அணுகுமுறையை மாற்றிக் கொள்வோமா?

Comments