ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனிப்பிறவியே!


“மக்கள் சுரங்கங்கள்! தங்கத்தைப் போல! வெள்ளியைப் போல!” – இந்த நபி மொழியில் நாம் பெற்றோர்கள் இன்னும் ஒரு பாடத்தையும் படித்துக் கொள்ள வேண்டியுள்ளது!


தங்கச் சுரங்கத்தில் நமக்குத் தங்கம் தான் கிடைக்கும். வெள்ளிச் சுரங்கத்தில் நமக்கு வெள்ளி மட்டும் தான் கிடைக்கும். வெள்ளிச் சுரங்கத்தில் தங்கம் கிடைப்பது அரிது! தங்கச் சுரங்கத்தில் பெட்ரோலியம் கிடைப்பது அரிது! இப்படித் தான் ஒவ்வொன்றும்.


அது போலத் தான் மனிதனும் அவன் வளங்களும்! இறைவனின் படைப்பில் மனிதம் ஒரு அற்புதமான படைப்பு! மனிதப் படைப்பில் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான அம்சங்கள் பல இருந்தாலும், இரண்டு மனிதர்கள் கூட வெவ்வேறானவர்களே!

ஒருவர் முகம் போன்று இன்னொருவர் முகம் இருப்பதில்லை! ஒருவர் குரல் போன்று இன்னொருவர் குரல் அமைவதில்லை. அது போலவே அறிவாற்றலில் மனிதர்கள் வெவ்வேறானவர்களே! அழகிய பண்புகளைப் பெற்றிருப்பதில் மனிதர்கள் வெவ்வேறானவர்களே! ஆன்மிக உணர்வுகளிலும் இரண்டு மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள் அன்று! மன வலிமை சார்ந்த அம்சங்களிலும், இரண்டு மனிதர்கள் ஒன்று படுவதில்லை!

அப்படியானால் என்ன பொருள்? ஒவ்வொரு மனிதனும் ஒரு தனிப்பிறவியே! இந்த முடிவுக்கு நாம் வந்தால், நம்மில் பல மாற்றங்கள் தானாகவே ஏற்படும்.

“எதிர் வீட்டுக் குழந்தை அடம் பிடிக்காமல் ஐந்து நிமிடங்களில் சாப்பிட்டு விடுகிறது; ஆனால் எனது குழந்தை மட்டும் பாடாய்ப் படுத்துகிறது” – என்று பேசுவது அறிவீனம்.

“பக்கத்து வீட்டுப் பையன் ஓடி ஓடி வேலை பார்ப்பதில் படு சுறுசுறுப்பு; ஆனால் என் பையன் மட்டும் வீட்டை விட்டு அசையவே மாட்டேன்கிறான்” – என்று ஒப்பிடுவது மிகத் தவறு.

“கணக்கில் உன் நண்பன் நூற்றுக்கு நூறு வாங்கும் போது உனக்கென்ன கேடு” – என்று மகனைத் திட்டுவதும் சரியன்று.

அது போலவே – மனிதர்கள் குணங்களிலும் வேறு பட்டு நிற்கிறார்கள்.

நபி மொழி உணர்த்தும் செய்தி:

நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கிடையே (ரிஸ்கை) வாழ்வாதாரங்களை பங்கிட்டது போல நற்குணங்களையும் உங்களுக்கிடையே பங்கிட்டுள்ளான். (நூல்: அஹ்மது)

ஆம்! நபித் தோழர்களின் குண நலன்களை நாம் ஆய்ந்தோம் என்றாலே தெள்ளென இது விளங்கும்.

அபூ பக்ர் சித்தீக் (ரலி) – உண்மையாளராகிறார்.

உமர் (ரலி) – நீதிக்கு ஒரு உமர் என்று பெயர் எடுக்கிறார்.

உத்மான் (ரலி) – வெட்க உணர்வை முழுமைப் படுத்தியவர் எனப் பெயர் பெறுகிறார்.

அலீ (ரலி) – வீரத்துக்கு முன்னுதாரணமாய்த் திகழ்கிறார்.

வணிகத் திறமையில் அப்துர் ரஹ்மான் பின் அஃவ்ப் (ரலி) முன்னிலையில் நிற்கிறார்.

இனிய குரலுக்குச் சொந்தக் காரராக பிலால் (ரலி) – இடம் பெற்றுக் கொள்கிறார்.

பறவைகளைக் கொஞ்சி வளர்க்க நுஃகைர் (ரலி) என்ற ஒரு நபித் தோழர் முன் வருகிறார்.

உடல் வலிமையை வெளிப் படுத்திக் காட்டுவதில் சில நபித் தோழர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.

இந்த ஒரு பாடத்தை இன்று உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது; எனவே இப்போது கேள்விகள் பல எழுந்துள்ளன:

ஒரே ஒரு திறமையை வைத்து அளவிடப் படுகின்ற IQ Test , எல்லாருடைய அறிவுத் திறனையும் கணித்துச் சொல்வது எப்படி சரியான அளவீடாக இருக்கும் என்ற கேள்வி இப்போது Multiple Intelligence எனும் புதிய கோட்பாட்டை முன்னிருத்தி யிருக்கின்றது.

மாணவர்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள் எனும்போது – அனைவருக்கும் ஒரே பாடத்திட்டம் என்பது எப்படி சரியாகும் என்று கேள்வி கேட்கத் தொடங்கி விட்டார்கள் நவீன கல்வியாளர்கள். ஒரே விதமான தேர்வு முறையில் (Examination) மாணவர்களின் வெற்றி தோல்வியை எப்படி தீர்மானிக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

குழந்தை வளர்ப்பில் – குழந்தைகளின் ஏதாவது ஒரே ஒரு பிரச்னைக்குக் கூட பொதுவான ஒரு தீர்வை (solution) முன் வைத்து விட முடியாது; ஏனெனில் ஒரு குழந்தைக்கு அது சரி வரலாம்; இன்னொரு குழந்தைக்கும் அதே வழி முறை சரி வரும் என்று எதிர்பார்க்க முடியாது.

இதில் இன்னொரு முக்கியமான பாடத்தையும் மாணவர்களுக்கு நாம் முன் வைக்கலாம்:

இன்னொரு மாணவனோடு ஒருகாலமும் உங்களை ஒப்பிட்டுக் கொள்ள வேண்டாம். “அவனைப் போல் என்னால் படிக்க முடியவில்லையே, அவன் அரை மணி நேரம் படித்து விட்டு, எண்பது மதிப்பெண் பெறுகிறான்; ஆனால் நான் இரண்டு மணி நேரம் படிக்கிறேன், எனக்கு மதிப்பெண் ஐம்பதைத் தாண்ட மாட்டேன் என்கிறதே!” – என்றெல்லாம் ஒப்பிடும் போது விளைவு தாழ்வு மனப்பான்மையே!

இது குறித்து இன்னும் நாம் இன்ஷா அல்லாஹ் விரிவாக எழுதுவோம்.

Comments