குழந்தைகளின் திறமைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்!


ஒரு திறமை ஒருவருக்குள் மொட்டு விட்டு மலர்ந்திட இரண்டு விஷயங்கள் அமைந்திட வேண்டும். ஒன்று: குறிப்பிட்ட ஒரு திறமையை வளர்த்துக் கொள்ள அதில் அளவு கடந்த ஆர்வம் ஒருவருக்கு இருந்திட வேண்டும். இரண்டு: அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளை அவரது பெற்றோர்களும், அவர் வாழ்கின்ற சமூகம் தங்கு தடையின்றி வழங்கிட வேண்டும்.

மனிதர்களுக்குள் புதைந்திருக்கின்ற பல விதமான திறமைகளுள் ஒன்று தான் மொழியாற்றல். ஒரு மொழியை மிக இலாகவமாகக் கையாள்வதற்கென்று ஒரு திறமை வேண்டும். இதனை ஆங்கிலத்தில் linguistic intelligence என்று அழைக்கிறார்கள்.


இப்படிப்பட்ட திறமைக்கு நாம் ஸைத் பின் தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் காட்டலாம். அவருடைய வரலாற்றை நாம் சற்றே ஊன்றிப் படித்துப் பார்த்தால் – ஒரு மகனை வெற்றியாளனாக்கிப் பார்ப்பதில் ஒரு தாய்க்கு எந்த அளவு பங்கு இருந்திட வேண்டும் என்பது தெள்ளெனப் புரியும்.

அப்போது ஸைத் பின் தாபித் ரலி அவர்களுக்கு பதின்மூன்று வயது மட்டுமே. பத்ர் போரில் கலந்து கொள்ள அளவு கடந்த ஆர்வம். அவரை பெருமிதத்துடன் அண்ணலாரிடம் அழைத்துச் சென்றது அவரது தாயார் அந்நவ்வார் பின்த் மாலிக் அவர்களே! ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. காரணம் வயது! மிகவும் ஏமாற்றமடைந்தார் அந்தச் சிறுவர்.

வயது ஒரு குறையென்று போரில் பங்கெடுக்கும் பாக்கியம்தான் கிட்டவில்லை, வேறென்ன செய்யலாம்? சிந்தித்தார் சிறுவர். யோசனையொன்று பளிச்சிட்டது. திருமறை வசனங்களைப் படித்து உய்த்துணரும் மாணவனாய் ஆகிவிட்டால்? அதுவே சரியென்று தோன்றியது. மீண்டும் ஓடினார் தாயிடம். திட்டம் அறிந்த தாய்க்கு அளவிலா மகிழ்ச்சி. “சபாஷ்! சரியான முடிவு” என்று தட்டிக் கொடுத்தவர் உடனே தன்னுடைய உறவினர்களிடம் இது குறித்துப் பேசினார். “என் மகன் அல்லாஹ்வின் வேதம் கற்றவனாய் ஆக விரும்புகிறான். உதவி செய்யுங்கள்”.

அவரது உறவினர்கள் சிறுவர் ஸைது இப்னு தாபித்தை நபியவர்களிடம் அழைத்துச் சென்று சிபாரிசு செய்தார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! இந்த எங்களின் சிறுவன் ஸைது இப்னு தாபித், பனூ நஜ்ஜார் கோத்திரத்தைச் சேர்ந்தவன். நன்றாய் எழுதப் படிக்கத் தெரிந்தவன், புத்திக்கூர்மையுள்ளவன். குர்ஆனின் பதினேழு அத்தியாயங்களை மனனம் செய்து வைத்துள்ளான். தங்களுக்கு அருளப்பட்ட அதே நேர்த்தியுடன் அதை ஓதக்கூடியவனாகவும் இருக்கிறான். தங்களுடனிருந்து மேலும் மேலும் ஞானம் பெருக்கிக் கொள்ள விழைகிறான் அவன். தாங்களே அவனை ஓதச் சொல்லிக் கேட்டுப் பாருங்களேன்!”

“எங்கே நீ மனனம் செய்து வைத்துள்ளதை ஓது, கேட்கிறேன்” என்றார்கள் முஹம்மது நபியவர்கள். ஓதினார் ஸைது இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹு. அழகாய், தெளிவாய், நேர்த்தியுடன் அவரது நாவிலிருந்து வெளிவந்தன குர்ஆன் வசனங்கள். புரிந்துவிட்டது நபியவர்களுக்கு. அவருடைய உறவினர்கள் விவரித்ததைவிட ஸைது திறமைசாலி என்பது தெளிவாய்த் தெரிந்தது. அதையும் தாண்டி நபியவர்களை உவகையில் ஆழ்த்திய விஷயம் ஒன்றிருந்தது – ஸைது சிறப்பாய் எழுத, படிக்கக் கூடியவர் என்பது.

யாருக்கு என்ன திறமை இருக்கிறதோ அதை முற்றிலும் பயன்படுத்திக் கொள்ளும் தேர்ச்சி முஹம்மது நபியவர்களிடம் இருந்தது. எனவே ஸைதை எப்படி உருவாக்கிட வேண்டும் என்பது அவர்களுக்கு அக்கணமே உறுதியாகிவிட்டது.

“ஸைது! யூத கோத்திரத்தினர் நான் கூறுவதை சரியாகத்தான் எழுதிக் கொள்கிறார்களா என்பதை அறியும் வாய்ப்பு எனக்கில்லை. எனவே நீ உடனே யூதர்களின் ஹீப்ரு மொழியைக் கற்றுக்கொள்!

அவ்வளவுதானே, இதோ “தங்களது உத்தரவிற்கு அடிபணிந்தேன் நபியவர்களே” என்று உடனே காரியத்தில் இறங்கினார் ஸைது. இராப் பகல் என்று அயராது முனைந்து உழைத்து இரண்டே வாரங்களில் ஹீ்ப்ரு மொழியைக் கற்றுத் தேர்ந்தார் அவர். அதன் பிறகு யூதர்களுக்கு எழுதக் கூடிய கடிதம், அவர்களிடமிருந்து வரும் தகவல் என்று எதுவாய் இருந்தாலும் படிப்பது மொழிபெயர்ப்பது எழுதுவது எல்லாம் ஸைது பொறுப்பிற்கு வந்து சேர்ந்தது.

அதைத் தொடர்ந்து, “உனக்கு சிரியாக் மொழி தெரியுமா?” என்று கேட்டார்கள் நபிகள். “தெரியாது” என்றார் ஸைது. “சென்று அதைக் கற்று வா ஸைது”. அதையும் உடனே பயின்றார். அதுவும் எத்தனை நாட்களில்? பதினேழே நாட்களில். நபியவர்கள் இட்ட கட்டளைக்காக மிக இளவயதினர் ஒருவர் இரு வாரங்களில் ஒரு மொழியினைக் கற்று, தயாராய் வந்து நிற்கிறார்.

இவ்வாறாக – இளைஞர் ஸைது இப்னு தாபித் ஆழ்ந்த அறிவுள்ள ஒரு மொழி வல்லுநராய் வளர்ந்து வரலானார். நபியவர்களுக்கு அவரே அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பாளராக ஆகிப்போனார். அவரிடமிருந்த புத்திசாதுர்யம், செய்யும் செயல்களில் நேர்த்தி, துல்லியம் எல்லாமாய்ச் சேர்ந்து ஸைதின் திறமையின்மேல் ஆழ்ந்த நம்பிக்கை ஏற்பட்டது முஹம்மது நபியவர்களுக்கு.

அவ்வப்போது அருளப்பெறும் இறைவசனங்களை எழுதிவைத்துக் கொள்வதற்காகவே சிலரை நியமித்து வைத்திருந்தார்கள் நபியவர்கள். அவர்களுள் ஸைதும் பிரதானமான ஒருவராய் ஆகிப்போனார். இறைவசனம் புதிதாய் வந்திறங்கியதும் ஸைதை அழைத்துவரச் சொல்வார்கள். பிறகு அவர்கள் உச்சரிக்க உச்சரிக்க கவனமாய் எழுதிக் கொள்வார் ஸைது. எத்தகைய பாக்கியம் அது?

அது மட்டுமல்லாமல் மன்னர்களுக்கு நபியவர்கள் அனுப்பிவைத்த கடிதங்களை எழுதும் பணியும் ஸைதிற்கு அமைந்தது.

நபியவர்களின் மறைவுக்குப் பின்னர் – ஹள்ரத் அபூபக்ர் ரலி அவர்களின் காலத்தின் குர் ஆனைத் தொகுக்கும் மாபெரும் பணியையும் சுமந்து கொண்டவர்கள் ஸைத் அவர்கள் தான்! கலீஃபா உத்மான் ரலி அவர்கள் காலத்தில் திருமறையின் மூலப் பிரதிலிலிருந்து நகல்கள் எடுக்கும் மகத்தான பொறுப்பையும் செவ்வனே நிறைவேற்றியவர்கள் ஸைத் அவர்கள் தான்!

இப்பொழுது புத்தக வடிவத்தில் – அன்று அருளப்பெற்ற அதே துல்லியத்துடன் ஓர் எழுத்துகூட பிழையின்றி இன்று நம் கைகளில் தவழும் குர்ஆன் நூலிற்குப் பின் ஸைதின் உழைப்பு மகத்தானது என்பது மறுக்க முடியாத உண்மை!

இந்த அருமையான நபித்தோழரின் வரலாற்றில் பெற்றோர்கள் படித்துக் கொள்ள வேண்டிய பாடங்களை மட்டும் இங்கே பார்ப்போம்:

1. ஸைத் அவர்கள் தனது மொழித்திறமையைக் கண்டுணர்ந்து அதனை வளர்த்துக் கொள்ளத் துவங்கிய காலம் அவரது மிக இளமைப் பருவம் ஆகும் (adolescence). அதாவது அவரது – பதினான்கு பதினைந்து வயதிலிருந்தே – அவரது திறமைகள் வெளிப்படத் துவங்கி விட்டன. இதனைத் தான் இன்றைய சிறுவர்களின் பெற்றோர்கள் நன்கு கவனித்திட வேண்டும். அதாவது உங்கள் குழந்தைகள் எட்டாவது, ஒன்பதாவது வகுப்புகளில் படிக்கும் கால கட்டம் மிக முக்கியமானது. உங்கள் குழந்தைகளின் ஆர்வத்தின் அடிப்படையில் அவர்களுக்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளை நீங்கள் தவறாமல் வழங்கிட வேண்டும்.

2. இன்றைய தாய்மார்களுக்கெல்லாம் ஒரு அழகிய முன்மாதிரியாக இங்கே ஸைத் அவர்களின் தாயார் – அந்நவ்வார் பின்த் மாலிக் அவர்களைப் பார்க்க முடிகிறது. மகன் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தும் போதெல்லாம் – உடனே களத்தில் இறங்கி ஆவன செய்யத் தொடங்கி விடுகிறார் அவர். இப்படித் தான் ஒவ்வொரு தாயும் தான் பெற்ற செல்வங்களின் திறமைகளுக்கு வழி அமைத்துக் கொடுத்திட ஆர்வத்துடன் முயற்சிகள் மேற்கொண்டிட வேண்டும்,

3. பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளின் திறமைகளை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருங்கள். உங்கள் குழந்தைகளின் “பட்டப் படிப்பு” வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய “திறமைகளை” வழங்குவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மொழியாற்றல் (language skill), சிந்திக்கும் திறமை (thinking skill), கருத்துப் பரிமாற்றத் திறமை (communication skill), மற்றவர்களுடன் நல்லுறவு வைத்துக் கொண்டு அவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் திறமை (human relationship skill), இவற்றோடு சேர்ந்து சில தொழில் நுட்பத் திறமைகள் (technical skills) – இவைகளை உங்கள் குழந்தைகள் வளர்த்துக் கொள்ள உருதுணையாக விளங்கிடுங்கள்.

4. ஸைது அவர்களின் வாழ்வில் உங்களுக்குப் படிப்பினை என்னவென்றால் – அபரிமிதமான திறமை உங்கள் பிள்ளைகளிடம் இருந்தால் வாய்ப்புகள் தானாக உங்கள் குழந்தைகளைத் தேடி வரும் என்பது தான். இப்படித் தான் திருக்குர்ஆனைத் தொகுக்கும் அருமையான வாய்ப்பு ஸைது அவர்களை வந்தடைந்தது என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.

Comments