தேவை: ஒரு அரைமணி நேரம் - ஆசுவாசம்!

கணவன் மனைவியருக்கிடையே பிரச்னைகளும் சச்சரவுகளும் தொடர்ந்து கொண்டே இருக்குமானால் - அவர்களை உணர்ச்சி வெள்ளத்தில் அடித்துச் சென்று விடும் என்பதை முன்னரே நாம் எழுதியிருக்கிறோம். அவ்வாறு அவர்கள் உணர்ச்சி வெள்ளத்தில் சிக்கியிருக்கும்போது அவர்களால் தெளிவாக சிந்திக்கக்கூட முடியாது.

பிரச்னைகள்  குறித்துப் பேசும்போது - சரியாக உரையாடக் கூட முடியாது. தீர்க்கமான முடிவு எதனையும் எடுத்திட முடியாது. உணர்ச்சிச் சிக்கலில் இருக்கும்போது அடுத்து என்ன நடந்திடுமோ எனும் அச்சம் அவர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும். ஒன்று உணர்ச்சிக் கொந்தளிப்பில் வெடித்துச் சிதறும் சண்டை அங்கே அரங்கேறும். அல்லது அமைதி வழிப் பின்வாங்கலும் நடந்தேறலாம்.

பிரச்னைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் நல்லெண்ணப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லாத சூழல் அது. ஏனெனில் நாடித்துடிப்பு ஒரு நூறைக் கூடத் தாண்டி விடலாம் அப்போது! எதனையும் காதில் வாங்கிக் கொள்ள இயலாத நாடித்துடிப்பு அது.  வியர்த்துக் கொட்டும். உடல் நடுங்கும். மூச்சு திணரும். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் ஒருவனைப் போல் தான் அவனது நிலை!  

இந்த உணர்ச்சி வெள்ளத்தில் சிக்கியிருக்கும் கணவன் மனைவியரில் யார் முதலில் வெளியே வருவார்கள்? கணவனா, மனைவியா எனில் - மனைவியே விரைவில் வெளியே வந்து விடுகிறார்கள். கணவனுக்கு இது மிகவும் கஷ்டம். ஏனெனில் கணவன் மற்றும் மனைவியரின் இரத்த நாளங்களின் அமைப்பு வேறு வேறு! மனைவியருக்கு சாதகமான அமைப்பு அது!

எனவே -இந்த உணர்ச்சி வெள்ளம் எனும் பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு ஒன்றை எட்டிட கணவன் மனைவியர் இருவருமே மனது வைத்து - மீண்டும் அவர்களுக்குள் - காதல், இரக்கம், மன நிம்மதி - மலர்ந்திட - முன் வர வேண்டும். இல்லையேல் - இது மண விலக்கை நோக்கியே அவர்களைத் தள்ளி விட்டு விடும் என்பது உண்மையிலும் உண்மை!

அதே நேரத்தில் - இதற்குத் தற்காலிகத் தீர்வு ஒன்றும் இருக்கின்றது. அது தான் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்தல் ஆகும். ஆங்கிலத்தில் - relaxation -  என்று சொல்லலாம்.  

இதற்கு என்ன செய்வது?

நன்றாக இழுத்து மூச்சு விடுங்கள்! அல்லது - இறை சிந்தனையில் ஈடுபடுங்கள்! அல்லது ஏதேனும் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்!

அல்லது பிரச்னை குறித்து சிந்திக்க வாய்ப்பே இல்லாத ஒன்றை - ஒரு இடத்தை அல்லது ஒரு பொருளை கற்பனை செய்து கொள்ளுங்கள். நீரில் மிதக்கலாம். வானில் பறக்கலாம். சுவனத்தைச் சுற்றி வரலாம். கற்பனை தானே!

எல்லாம் ஒரு அரைமணி நேரம் மட்டுமே. அது போதும். நிதானத்துக்கு வந்து விடலாம். நாடித்துடிப்பு நார்மலாகி விடும்.

அதற்குப் பின்னரே நீங்கள் எந்த ஒன்று குறித்தும் தெளிவாகச் சிந்திக்கவும் முடியும்; பேசவும் முடியும்; நீங்கள் விரும்பினால் பிரச்னை தீர்க்கும் பேச்சினை மீண்டும் தொடரவும் முடியும்.

எனவே நாம் சொல்ல வருவது என்னவெனில் - பிரச்னை குறித்து கணவனும் மனைவியும் பேசிக் கொண்டிருக்கும்போது - உணர்ச்சி வசப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டால் - ஒரு அரை மணி நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேச்சைத் தொடர்தலே புத்திசாலித் தனமானது! எனினும் இது ஒரு தற்காலிக மருந்தே! நாம் முன்னர் குறிப்பிட்டது போல - நிரந்தரத் தீர்வு ஒன்றுக்கு கணவன் மனைவி இருவருமே மனது வைத்து முயற்சிக்க வேண்டும்.

இங்கே நாம் சொல்லியிருப்பது - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் ஒருவனுக்கு வெள்ளத்தின் சீற்றம் சற்றே தணிந்தால் - சற்றெ ஆசுவாசப்படுத்திக் கொண்டு - வெள்ளத்தின் பிடியிலிருந்து வெளி வருவது குறித்து சிந்தித்திட முடியும் அல்லவா? அது போன்ற ஒரு நிலையை வழங்குவது தான் relaxation எனும் ஆசுவாசம்! 

Comments