உங்கள் மனைவியும் ஒரு சுரங்கமே!

நம்மில் ஒவ்வொருவருக்கும் தனித்தனிச் சிறப்பியல்புகள் இருக்கின்றன. அது போலவே நம் ஒவ்வொருவரிடத்திலும் சில பல குறைபாடுகளும் இருக்கின்றன.

ஒரு சில குறிப்பிட்ட சிறப்பியல்புகளுடனும் சில குறைகளையும் கொண்ட ஒரு ஆண்மகனும் அதே போல சில சிறப்பியல்புகளுடன் சில குறைகளையும் கொண்ட ஒரு பெண்மணியும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் ஒன்றை அமைக்கின்றனர்.


அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்கின்றன. அது போலவே ஒவ்வொரு குழந்தைக்கும் சில சிறப்பியல்புகளும் உண்டு. சில குறைபாடுகளும் உண்டு.
இப்படிப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் ஒரு டீம்!

இக்குடும்பத்தில் உள்ள உறுப்பினர் ஒவ்வொருவரின் தனித்தனிச்  சிறப்பியல்புகளைக் கொண்டு அவரவரும் முன்னேறிச் சென்று வெற்றி பெற்று சாதனைகள் புரிந்திட அக்குடும்பத்தின் மற்ற  உறுப்பினர்கள் அனைவரும் உதவியாக ஒத்தாசையாக இருக்கின்றார்கள் எனில் அக்குடும்பத்தில் மகிழ்ச்சிக்குப் பஞ்சமே இருக்காது.

குறிப்பாக கணவனின் சிறப்பியல்புகளை மனைவி அங்கீகரிக்கின்றார், பாராட்டுகின்றார், அவருக்கு உதவி செய்கின்றார், உறுதுணையாக விளங்குகிறார் எனில் கணவன் மகிழ்ச்சி அடைகின்றான். கணவன் மனைவி உறவு மிகச்சிறப்பாக அமைகின்றது.

அது போலவே மனைவியின் சிறப்பியல்புகளை கணவர் அங்கீகரிக்கின்றார், பாராட்டுகின்றார், அவருக்கு உதவி செய்கின்றார், உறுதுணையாக விளங்குகிறார் எனில் மனைவி மகிழ்ச்சி அடைகின்றாள். இங்கேயும் கணவன் மனைவி உறவு மிகச்சிறப்பாக அமைகின்றது.

இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவெனில் கணவனும் மனைவியும் தனது துணையின் சிறப்பியல்புகளை மட்டுமே பார்த்திடும் போது மகிழ்ச்சியான குடும்பம் அமைகின்றது.
ஆனால் இங்கே பெரும்பாலான கணவன்மார்களும் மனைவிமார்களும் தத்தமது துணையின் குறைகளை அல்லவா பார்த்துக் கொண்டிருக்கின்றோம். பின் எப்படி வரும் மகிழ்ச்சி?

எனவே கணவன்மார்களே! மனைவிமார்களே! உங்கள் துணைவரின் சிறப்பியல்புகளை, அறிவுத்திறனை, குணநலன்களை, திறமைகளை முதலில் அங்கீகரியுங்கள்! அவர்களை மனம் திறந்து பாராட்டுங்கள். அவர்களை ஊக்கப்படுத்துங்கள்! உறுதுணையாக விளங்குங்கள்!

சுருங்கச் சொல்லின் உங்கள் துணைவர் ஒரு சுரங்கம். ஒரு பொக்கிஷம்! அந்தச் சுரங்கத்திலிருந்து பொன்னையும் வெள்ளியையும் இன்னும் அவைகளைவிடவும் சிறந்தவற்றை வெளியே கொண்டு வர வேண்டியது உங்கள் கரங்களில் தான் இருக்கிறது! அதில் தான் உங்கள் மகிழ்ச்சி அடங்கியுள்ளது! அதில் தான் உங்கள் உறவின் பலமும் அடங்கியுள்ளது!

இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கின்றது. அது - பொதுவாக கணவனின் திறமைகளுக்கு மனைவி ஊக்கமளிக்கும் நிலையை நாம் பரவலாகக் காண முடியும். ஆனால் மனைவியின் திறமைகளை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் கணவன்மார்களைக் காண்பது தான் அரிதினும் அரிதாக இருக்கின்றது!

எனவே கணவன்மார்களே! உங்கள் மனைவியின் சிறப்பியல்புகளை, திறமைகளை, நற்குணங்களை - இன்றே உட்கார்ந்து பட்டியலிடுங்கள். உங்கள் மனைவி எப்படிப்பட்ட ஒரு பொக்கிஷம் என்பது உங்களுக்குப் புரியும்.
நல்லதொரு மனைவியை  'பொக்கிஷம்' என்றார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்!

'மனிதர்கள் சுரங்கங்கள், தங்கத்தைப்போல, வெள்ளியைபோல!' என்பதும் நபிமொழியே!
அப்படியானால் உங்கள் மனைவியும் ஒரு சுரங்கம் தானே? அதிலிருந்து  'பொக்கிஷங்களை' வெளியே கொண்டு வந்து தூய்மைப்படுத்தி மெருகேற்றி உங்கள் மனைவியை வெற்றிபெறச் செய்திட வேண்டியது உங்கள் கடமை தானே? ' இது அப்படியே மனைவிக்கும் பொருந்தும்!

இதனைத் தான் ஆங்கிலத்தில் இப்படிச் சொல்கிறார்கள்:

"Bring out the best in each other!"

அண்ணலாரின் நபித்துவ ஆளுமைக்குப் பின்புலமாக நின்றவர்கள் அன்னை கதீஜா (ரலி) அவர்களே!

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவாற்றலை அங்கீகரித்து அவ்வறிவை முஸ்லிம் சமூகம் அள்ளிப்பருகிட வழியமைத்துத் தந்தவர்கள் அண்ணலார் அவர்களே!

Comments