மாற்றத்துக்கு இதுவே நேரம்!

சுன்னத்தான இல்லறம்: 

ஒரு கணவனும் அவர் மனைவியும் திருமண ஆலோசகர் ஒருவரிடம் ஆலோசனைக்கு வந்திருந்தனர். அவர்களுக்குத் திருமணம் ஆகி ஒரு சில ஆண்டுகளே ஆகியிருந்தன.


அந்தக் கணவர் சொன்னார்: நான் என் நண்பர்களுடன் பழகுவது அவர்களுடன் நேரம் செலவழிப்பது, அளவளாவுவது - இவை எதுவுமே என் மனைவிக்குப் பிடிக்கவில்லை! வெளியே சென்று சற்றுத் தாமதமாக வீடு திரும்பினாலே - என் மனைவி கேள்வி கேட்கிறார்;

மனைவியின் ஆளுமை என்பது வேறு; கணவனின் ஆளுமை என்பது வெவ்வேறு தானே (அவர் wave length என்ற சொல்லைப் பயன் படுத்தினாராம்!).

மனைவியுடன் ஓரளவுக்குத் தானே பேசிட முடியும்; நம்மை ஒத்த நண்பர்களுடன் தானே எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியும்; அவ்வாறு பகிர்ந்து கொள்வதற்காக வெளியே சென்று வரும்போது சில சமயங்களில் தாமதம் ஆகத் தானே செய்யும்; இதனைப் போய் ஏன் என் மனைவி சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்?

மனைவி சொன்னார்: எல்லாவற்றையும் என்னிடம் பகிர்ந்து கொள்ள வேண்டியது தானே? ஏன் இவர் நண்பர்களிடம் ஓடுகின்றார்; நேரத்துக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்து விட வேண்டியது தானே?

மேலோட்டமாகப் பார்த்தால் - இது மிக சாதாரணமான ஒரு பிரச்னையாகத் தோன்றலாம். இதற்குப் போய் ஏன் இந்த மனைவி இப்படி அலட்டிக் கொள்கிறார் என்று கூட பல கணவன்மார்கள் நினைக்கலாம். ஆனால் அது அப்படியல்ல!

ஒரு மனைவியின் எதிர்பார்ப்புகள் எல்லாம் மிக மிக எளிமையானவை! தன் கணவன் தன்னோடு இருக்க வேண்டும்; தன்னுடனேயே அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்; தான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்; தன் மனதுக்குப் பிடித்த சின்னச் சின்ன தேவைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றித் தந்து கொண்டிருக்க வேண்டும்....!

அவ்வளவு தான்!

இதனைப் பல கணவன்மார்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்! அவர்களுக்கு அவர்களுடைய வெளி வேலை தருகின்ற மன அழுத்தமான சூழ்நிலைகளில் இருந்து தங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்ள (relaxation) அவர்கள் நாடுவது தங்கள் நண்பர்களையே!

அவர்கள் மனைவிக்கென்று ஒதுக்கும் நேரம் எது?

அந்தக் கணவரே சொல்கிறார்: "அது தான் - இரவு முழுவதும் மனைவியிடம் தானே சார் தங்கி இருக்கின்றோம்! பகலில் என்னை விட்டு விட வேண்டியது தானே!"

வீட்டுக்கு வெளியே நண்பர்களுடன் சில கணவன்மார்கள் அதிக நேரத்தை செலவிட விரும்புவது எதனை உணர்த்துகிறது?

கணவன் மனைவியருக்குள் நெருங்கிய நட்பு மலர்ந்திடவில்லை என்பதைத் தான்!

கணவன்மார்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியம்! ஏனெனில் கணவன் மனைவியருக்குள் நெருங்கிய நட்பு மலரவில்லை எனில் - அது ஏற்படுத்தும் பாரதூரமான பாதிப்புகளுள் ஒன்று - தாம்பத்திய வாழ்வில் தடுமாற்றம்!

இதனை நாம் சொல்லவில்லை! நவீன கால ஆய்வுகள் அவ்வாறு தான் சொல்கின்றன!

மாற்றத்துக்கு இதுவே நேரம்!

Comments