கவிதை ஒன்று எழுதத் துவங்குங்கள்! உங்கள் கணவருக்காக!!

சுன்னத்தான இல்லறம்:

நாம் அடிக்கடி கேட்கின்ற துஆக்களும் ஒன்று தான் இது:

“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக!” (குர் ஆன் 25: 74)

இங்கே கண்களுக்குக் குளிர்ச்சி –என்பதன் பொருளை சற்றே ஆழமாகப் பார்ப்போம்:

நபியவர்கள் மக்காவிலே தோன்றுவதற்கு முன்னர் – அரபுக்களிடம் ஒரு பழக்கம் இருந்ததாம். யாரையாவது அவர்கள் கடுமையாகத் திட்ட வேண்டும் என்றால் -   அத்ஃகனல்லாஹு ஐனஹு (adkhanallahu ‘ainahu) என்று திட்டுவார்களாம்.

இதனை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்றால் அவன் கண்கள் புகையை வெளிப்படுத்தட்டும் என்று திட்டுவதாக சொல்லலாம். அதாவது அவன் கண்கள் சோகக் கண்ணீர் சொரியட்டும் என்று திட்டுவதாக பொருளாம். அப்படியானால் இதற்கு நேர் எதிர்ப்பதம் தான் “குர்ரத ஐன்!” அதாவது  உன் கண்கள் ஆனந்தக் கண்ணீரை சொரியட்டும் (tears of joy)!    

“குர்ரத ஐன்” – என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு. அந்தக் கால அரபுக்கள் - பாலைவனத்தில் பயணிக்கும்போது மணல் புயல் வீசினால் தங்களைக் காத்துக் கொள்ள ஏதாவது குகை போன்ற ஒதுங்குமிடம் கிடைத்து விட்டால்  - குர்ரத ஐனைய! “qurrata ‘ainayya” – என்பார்களாம். அதாவது என் கண்கள் குளிர்ந்து விட்டது என்று பொருள்!

இந்தப் பின்னணியில் நாம் மேலே சுட்டிக்காட்டிய துஆவை எடுத்துக் கொண்டோம் என்றால் – கண்களுக்குக் குளிர்ச்சி என்பது எதனைக் குறிக்கின்றது?

கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ, குழந்தைகள் பெற்றோர்களையோ அல்லது பெற்றோர்கள் குழந்தைகளையோ பார்க்கும்போது என்ன கிடைக்க வேண்டும்?

ஒன்று: அவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வெளிப்பட வேண்டுமே தவிர சோகக் கண்ணீர் வந்து விடக்கூடாது.

இரண்டு: குழந்தைகளையும் துணைவர் அல்லது துணைவியையும் கண்ட மாத்திரத்திலேயே – தங்களுக்கு “அடைக்கலம்” கிடைத்து விட்டது போன்று அவர்கள் உணர வேண்டும்!

இதனை – இன்றைய சூழலோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். கணவன் பொருள் ஈட்டவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெளியே செல்கிறார். வெளி உலகம் என்பது “பாலைவனப் புயல்” போன்றது எனில் அவர் வீட்டுக்குத் திரும்பும் போது – தனக்கு அடைக்கலம் தரும் இல்லத்துக்கு வந்து விட்டதாக  அவர் உணர வேண்டும். இதனை மனைவியர் புரிந்து கொள்வது நலம்.

அது போலவே - மனைவியர் வீட்டிலிருக்கும்போது - சில உறவுகள் - வீட்டிலேயே ஒரு பாலைவனப் புயலைக் கிளப்பி விட்டுப் போயிருப்பார்கள். மனைவி சோர்ந்து போயிருப்பார். கணவர் வரட்டும் என்று காத்திருப்பார். கணவனைக் கண்ட மாத்திரத்திலேயே - தனது உணர்வுகளைக் கொட்டித் தீர்க்க முன் வருவார். கணவன் அடைக்கலம் தந்து அரவணைத்துக் கொள்ள வேண்டும் மனைவியை!

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டுக்கு வரும்போது ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு கவிதை வாசிப்பதுண்டாம்! கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?

அந்தக் கவிதையின் வரிகளில் சில இதோ..

அல்லாஹ் வானத்தில் ஒரு சூரியனைப் படைத்திருக்கிறான்!
அல்லாஹ் எனக்கென்றே ஒரு சூரியனையும் தந்திருக்கின்றான்!

எனது சூரியன் வானத்தில் உள்ள சூரியனை விட மிகச் சிறந்தது!

வானத்துச் சூரியன் ஃபஜ்ருக்கு பின்னால் உதிக்கும்!
ஆனால் எனது சூரியனோ இஷாவுக்குப் பின்னால் தான் என் பக்கமாக  உதிக்கும்!!

எப்படி இருக்கின்றது அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் கவிதை வரிகள்?

இப்படிக் கவிதை பாடி கணவனை வரவேற்றால் – எந்தக் கணவனுக்குத்தான் தன் மனைவி “கண் குளிர்ச்சியாகத்” தெரிய மாட்டாள்?  

கணவனை வரவேற்க கவிதை பாடுவதும் ஒரு சுன்னத் தான்!

எழுதத் துவங்குங்கள் – உங்கள் கவிதைகளை – உங்கள் கணவருக்காக!

பின் குறிப்பு:

ஆனால் நமது நிலை என்னவெனில் நமது வீடுகள் – “பாலைவனப் புயலால்” சூழப்பட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது! கணவனோ அடைக்கலம் தேடி வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்! அல்லாஹ் – இப்படிப்பட்ட நிலையிலிருந்து நம்மைக் காப்பானாக!

Comments