திருமண வாழ்வில் தினசரிப் போராட்டமா?

சுன்னத்தான இல்லறம்:

இனிமையான இல்லற வாழ்க்கைக்கு இரக்க குணம் மிக அவசியம். கணவன் மனைவியருக்கிடையே இரக்க உணர்வு குறைந்து போய் விட்டால் என்னவாகும்?

தன் துணை மீது இரக்கம் காட்டுவதில் குறை ஏற்பட்டால் - கணவன் மனைவி நல்லுறவே பாதிக்கப்பட்டு விடும்.


குறைகளை துணைவரிடமிருந்து மறைக்கத் தொடங்குவர். தனது குறைகள் பற்றி மனம் திறந்து இருவரும் பேசிட இயலாது!

ஒருவரின் குறைகளை இன்னொருவர் ஆராயத்தொடங்குவர்; சிறிய குறைகள் எல்லாம் பெரிது படுத்தப்படும்!

திருமண வாழ்வு என்பது தினசரிப் போராட்டமாக வெடிக்கும்!


சில நேரங்களில் அது சோகமயமாக (depression) மாறும்! மன அழுத்தத்துக்கு (chronic stress) வழி வகுக்கும்! நிம்மதி பறந்து போய் விடும்!

இன்னும் உடல் நலமும் பாதிக்கப்படும்!

குறைகளைச் சுட்டிக்காட்டினால் அதனை ஒத்துக் கொள்ளாமல் மறுக்கின்ற நிலை ஏற்பட்டு விடும். பின்னர், எவ்வாறு ஒருவர் குறையைக் களைந்திட இன்னொருவர் உதவி செய்திட முடியும்?

என்னைப் புரிந்து கொள்ளும்போதும் என் பலவீனங்களை சகித்துக் கொள்ளும்போதும் தான் வீடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. இது என் மனைவிக்கும் பொருந்தும்!

என்னை அப்படியே எனது நிறைகளுடனும் குறைகளுடனும் எனது துணை ஏற்றுக் கொண்டால் தான் நான் முழுமையாக வளர்வேன்! இது என் மனைவிக்கும் பொருந்தும்!

இரக்க உணர்வுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டால் அது விவாக விலக்குக்கு வழி வகுத்து விடும்! எச்சரிக்கை!!

சரி! இந்தக் கருணை உணர்வை இல்லற வாழ்வில் கணவனும் மனைவியும் எவ்வாறு வெளிப்படுத்துவது?

சிறிய சிறிய குறைகளா? கண்களை மூடிக் கொண்டு விடுங்கள்! அவைகளைக் கண்டு கொள்ளாதீர்கள்! (உங்களுக்கு ஒரு கதை இருக்கிறது அடுத்த பதிவில் - இன்ஷா அல்லாஹ்)

மனைவியின் தேவைகளை நீங்கள் நிறைவேற்றுங்கள்! உங்கள் மனைவியின் தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் செலுத்துவதும் கருணையே!

விட்டுக் கொடுத்து நெகிழ்ச்சியுடன் நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் துணை களைத்துப் போயிருக்கின்றாரா? புரோட்டாவும் சிக்கன் ரோஸ்ட்டும் தான் வேண்டும் என்று அடம் பிடிக்க வேண்டாம்! "மதியம் என்ன உணவம்மா? அதை நானே சூடு காட்டி சாப்பிட்டுக் கொள்கிறேன்; உனக்கென்ன வேண்டும் அதைச் சொல்!" என்று சொன்னால் அது தான் இரக்க உணர்ச்சியின் வெளிப்பாடு!

இந்த விட்டுக் கொடுக்கும் தன்மை உணவுக்கு மட்டுமல்ல! கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் எல்லாவிதமான கருத்து வேறுபாடுகளுக்கும் இதுவே அருமருந்து!

உங்கள் மனைவிக்கு ஒரு பிரச்சனை! ஆனால் அது குறித்து தாமே பேசுவதற்கு அவர் அஞ்சுகிறார் எனில் அவருக்காக நீங்களே குரல் கொடுங்கள்! குறிப்பாக உங்கள் தாய் மூலமாகவோ அல்லது உங்களின் சகோதரிகள் மூலமாகவோ உங்கள் மனைவி பாதிக்கப் பட்டிருந்தால் உங்கள் மனைவிக்காகக் குரல் கொடுப்பவர் யார்? அது நீங்கள் தான்! உங்கள் மனைவியை உங்களின் தாய்க்கோ உங்கள் சகோதரிகளுக்கோ அடிமையாக்கி விடாதீர்கள்!

உங்கள் மனைவியின் குடும்ப விஷயங்களில் அக்கரை செலுத்துவதும் உங்களின் கருணைப் பண்புக்கு அடையாளமாகும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் கருணை என்ற ஒரே ஒரு நற்பண்பு இருந்தால் போதும். குடும்பத்தின் எல்லாப் பிரச்சனைகளையும் அதனைக் கொண்டே தீர்த்துக் கொண்டு விடலாம்!

ஆம்! இரக்க குணம் இருந்தால் போதும்! இல்லறம் தானே இனிக்கும்!

Comments