நமது முக நூல் பக்கத்துக்கு வந்த ஒரு செய்தி!

சுன்னத்தான இல்லறம்: 

நமது முக நூல் பக்கத்துக்கு செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார் ஒரு சகோதரர். அது இதோ:


அஸ்ஸலாமு அலைக்கும்! எனக்குத் தெரிந்த ஒரு மனிதர். அவர் மனைவியிடம் பேசுவது கிடையாது; ஏன் அவரது ஒரு வயதே ஆன அந்த பிஞ்சு குழந்தையையும் கண்டு கொள்வது கிடையாது. இவர்களுக்குத் திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகப் போகிறது. அந்தப் பெண்ணையும் குழந்தையையும் ஆதரிப்பது அந்த பெண்ணின் தாய் தந்தை ஆவார்கள்.

அவருக்கு நாம் எழுதியிருந்த பதில்:

அந்தக் கணவனும், மனைவியும் ஒரு இஸ்லாமிய கவுன்ஸலரை அணுகுவது அவர்களுக்கும் நல்லது; அந்தப் பிஞ்சுக் குழந்தைக்கும் நல்லது!

அல்லாஹ் - இவர்களின் திருமண வாழ்வையும் அவர்களது குழந்தையையும் பாதுகாப்பானாக!

க்ஹைர்!

இந்தச் செய்தியில் திருமணம் ஆனவர்களுக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கும், பெண்ணைப் பெற்ற பெற்றோர்களுக்கும், ஏன் ஒட்டு மொத்த சமூகத்துக்கும் ஏராளமான படிப்பினைகள் இருக்கின்றன.

ஒவ்வொன்றாக பார்ப்போம்:

முதல் பாடம்:

தேவை - உடனடி திருமண சீர்திருத்தம்!

நாம் இங்கே வலியுறுத்திச் சொல்ல விரும்புவது இதனைத்தான்!

இன்று வழக்கத்தில் நாம் பார்க்கின்ற திருமண முறைகள் இரண்டு:

1. பெற்றோர் செய்து வைக்கின்ற பாரம்பரியத் திருமணம் (arranged marriage)

2. காதல் திருமணம் (love marriage)

இந்த இரண்டு முறைகளுமே மிகத் தவறானவை!

பெற்றவர்கள் ஒரு மாப்பிள்ளையைப் (அல்லது பெண்ணை) பார்த்திட - ஒருவரைப் பற்றி மற்றவர் அறிந்து கொள்ளாமலே - "என் பெற்றோர் யாரைத்திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார்களோ அவரே என் துணைவர்!" என்று கண்ணை மூடிக்கொண்டு செய்யப் படுகின்ற பாரம்பரியத் திருமண முறையில் - அடிப்படையில் ஒரு மிகப்பெரிய கோளாறு இருந்து வந்துள்ளதை - நமது புதிய தலைமுறையின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமும், அவசரமும் இப்போது ஏற்பட்டுள்ளது என்றால் அதில் மிகை இல்லை!

ஏனெனில் இன்றைய நமது முஸ்லிம்களின் இல்லற வாழ்க்கை முறையில்.....

பல குளறுபடிகள் காணப்படுகின்றன. ஒரு நெருக்கடியின் நிமித்தமாகவே கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்கிறார்கள்! அவர்களுக்குள் அன்பு, காதல், நேசம், பரிவு, இரக்கம், கருணை, அனுசரித்துப் போகும் பண்பு (adjustment), மன்னிக்கும் பண்பு - இவைகளெல்லாம் அரிதாகி விட்டன!

அது போலவே பெற்றோர் ஆலோசனைகள் ஏதுமின்றி நடக்கின்ற காதல் திருமணமும் வெற்றி பெறுவதில்லை! உடற் கவர்ச்சியினால் காதலில் விழுந்து தனது வாழ்க்கைத் துணை எப்படிப்பட்டதாய் இருந்திட வேண்டும் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படாமல் திருமணம் செய்து கொண்டு பின்னர் வருந்துகின்ற இல்லற ஜோடிகளையும் நாம் பார்த்தே வருகின்றோம்.

இரண்டு சகோதரிகள். மூத்த சகோதரிக்கு வயது இருபத்தி ஐந்து. காதலித்தார் ஒருவனை; வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டார்; மனைவியின் ஐந்து பவுன் நகையை செலவு செய்து வாழ்க்கை நடத்தினார்கள்; ஒரே ஒரு ஆண்டு தான் வாழ்க்கை; பணம் தீர்ந்தது; காதல் கணவன் ஓடிப்போய் விட்டான்! பெண்ணின் கையில் ஒரு ஆண் குழந்தை! அந்தப் பெண் அந்த ஆண் குழந்தையை ஒரு அனாதை விடுதியில் சேர்த்து விடுகிறார்! அந்தப் பெண்ணின் எதிர்காலம்? இதில் வேதனை என்னவென்றால் அவரது தங்கையும் காதலித்தார் ஒருவனை; வீட்டை விட்டு.... மேலே உள்ள பத்து வரிகளை அப்படியே CUT & PASTE செய்து கொள்ளுங்கள்! EXACTLY தங்கை விஷயத்திலும் அது தான் நடந்தது! இன்னா லில்லாஹி....

எனவே தான் சொல்கிறோம்:

உடற்கவர்ச்சியினால் உருவாகின்ற காதல் திருமணமும் வேண்டாம்! இன்று வழக்கத்தில் உள்ள பாரம்பரியத் திருமணமும் (arranged marriage) வேண்டாம்!

பின் எப்படித் தான் வாழ்க்கைத் துணையைத் தேடுவது என்று கேட்கிறீர்களா?

அடுத்த பதிவுகளில் - இன்ஷா அல்லாஹ்!

Comments