திருமணம் முடிந்ததும் – புதுக் கணவன் மனைவியர் என்ன செய்திட வேண்டும்?

சுன்னத்தான இல்லறம்: 

புதுக் கணவன்மார்களே! உங்கள் புது மனைவியைப் பேச விடுங்கள்!

இது தான் நீங்கள் செய்திட வேண்டிய முதல் வேலை. பல புதுக் கணவன்மார்கள் – தங்கள் புது மனைவியைச் சந்தித்ததும் – தங்களைப் பற்றிய பெருமைகளை, தங்கள் சாதனைகளை அள்ளிக் கொட்டத் தொடங்கி விடுகிறார்கள்.

நீங்கள் முந்திக் கொள்ள வேண்டாம். மாறாக – அவர்கள் பேசட்டும் முதலில்.

எப்படிப் பேச வைப்பது?

கேள்விகளைக் கேளுங்கள்!

எதைப் பற்றிக் கேட்க வேண்டும்?

உங்கள் மனைவியைப் பற்றித் தான்!

கேள்விகள் கேட்பதன் நோக்கம் என்ன?

உங்கள் மனைவியைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வதற்காக! தெரிந்து கொள்வதற்காக! புரிந்து கொள்வதற்காக!

எப்படிக் கேட்க வேண்டும்?


ஒரு வரியில் அல்லது ஒரு சொல்லில் பதில் சொல்லி விடுகின்ற கேள்விகள் வேண்டாம்;

எடுத்துக்காட்டு: உனக்கு தேநீர் பிடிக்குமா? காபி பிடிக்குமா?

ஒரு கேள்வி கேட்டால் – அவர்கள் அதற்கு விரிவாக பதில் அளித்திடுமாறு கேள்விகளைத் தேர்வு செய்யுங்கள்!

ஹனி! உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் சொல் பார்க்கலாம்?

கேள்வி கேட்டு விட்டு கணவன்மார்கள் செய்யக் கூடாதது என்ன?

அவர்கள் பதில் சொல்லும்போது உங்கள் கவனத்தை வேறு பக்கம் திருப்புதல்!

இது கூடவே கூடாது! அவர்கள் முகத்தை நேருக்கு நேர் பார்த்து அவர்கள் தருகின்ற பதில்களை நீங்கள் ரசித்துக் கேட்டிட வேண்டும்!

வேறு எது பற்றியெல்லாம் கேட்டிட வேண்டும்?

உங்கள் மனைவியின் குடும்பத்தைப் பற்றி, அவருடைய உறவினர்கள் பற்றி; அவர் வளர்ந்த சூழல் பற்றி, அவருடைய கல்வி பற்றி, அவருடைய சிறு வயது அனுபவங்களைப் பற்றி, அவருடைய சாதனைகள் பற்றி, அவருடைய ஆர்வங்களைப் பற்றி, எப்படிப்பட்டவர்களை அவருக்குப் பிடிக்கும் என்பது பற்றி, அவர் எதிர்காலத்தில் தான் என்ன செய்திட விரும்புகிறார் என்பது பற்றியெல்லாம்!

அது போலவே – உங்கள் மனைவியரும் உங்களிடம் கேள்விகள் கேட்பார்கள்!

அப்போது நீங்களும் பேசுங்கள்! உங்களைப் பற்றி நீங்கள் பேசிடத் தான் வேண்டும்; உங்களைப் பற்றி புரிய வைத்திட வேண்டும்!

ஆனால் நீங்கள் பேசும்போது கடைபிடிக்க வேண்டிய நுட்பங்கள் கொஞ்சம் இருக்கின்றன!

அது என்ன நுட்பங்கள்?

மிகக் குறைவாகவே நீங்கள் பேசிட வேண்டும்!

விலாவாரியாக நீங்கள் பேசிடவே கூடாது! (இது ஒரு நுட்பமான சுன்னத்!)

உங்களைப் பற்றி நீங்கள் தம்பட்டம் அடித்துக் கொள்ளக் கூடாது! உங்கள் குடும்பத்தைப் பற்றிய தற்பெருமை கூடவே கூடாது! எதனையும் மிகைப்படுத்திடக் கூடாது! மனைவியை impress செய்வதற்காக - செய்யாத சாதனைகளை செய்து காட்டியதாக பொய் சொல்லி விடக் கூடாது! சுருக்கமாகச் சொன்னால் சற்றே அடக்கி வாசியுங்கள்!

இவ்வாறு கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முயற்சிப்பது என்பது ஒரே நாளில் நடந்து விடுவது அல்ல!

கொஞ்சம் கொஞ்சமாக ஒருவர் துணையைப் பற்றி மற்றவர் அறிந்து கொள்தல் அவசியம்;

இது தான் இளம் கணவன்மார்கள் திருமணத்துக்குப் பின்னர் செய்திட வேண்டிய மிக முக்கியமான வேலை முதல் வேலை என்று நான் சொல்வேன்.

இதனால் ஏற்படும் நன்மைகள் அளப்பரியது! நம்புங்கள்!

Comments