நபித்தோழியர் வரலாறுகள் எல்லாம் கதை போல் கேட்பதற்குத் தானா?

சுன்னத்தான இல்லறம்: 

"தீய்ந்து போன ரொட்டி!" - கதையில் ஒரு கணவனின் இரக்க குணத்தைப் பற்றிப் பார்த்தோம் அல்லவா? அது கதை தான்! ஆனால் ஒரு உண்மைச் சம்பவமே நமது இஸ்லாமிய வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. இங்கே ஒரு மனைவி தான் ஹீரோயின்!

ஒரு மனைவி தன் கணவனிடம் இந்த அளவுக்கு இரக்க உணர்வுடன் நடந்து கொள்வாரா என்று வியக்கும் அளவுக்கு நடந்து கொண்ட வரலாற்றுச் சம்பவம் அது! நீங்கள் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள்!

யாரைப்பற்றி நாம் இங்கே சொல்ல வருகின்றோம் என்பதை உங்களால் ஊகிக்க முடிகின்றதா?

CLUE: அவர் ஒரு சஹாபியப் பெண்மணி!

நாம் சொல்ல வந்தது உம்மு சுலைம் (ரலி) அவர்களைப் பற்றித்தான். அவரைப் பற்றிய நபிமொழி ஒன்றைப் படியுங்கள்!

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார்கள்:

என் தாயார் உம்மு சுலைம் அவர்களின் இரண்டாவது கணவரான) அபூ தல்ஹா(ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். ஒரு முறை அபூ தல்ஹா(ரலி) வெளியே செல்ல அப்போது அந்தப் பையன் இறந்துவிட்டான். அபூ தல்ஹா(ரலி) திரும்பி வந்தபோது 'என் மகன் என்ன ஆனான்?' என்று கேட்டார்கள்.

உம்மு சுலைம் துக்கத்தை வெளிக்காட்டாமல், 'அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்' என்று பதிலளித்துவிட்டு, அவர்களுக்கு முன்னால் இரவு உணவை வைத்தார். அபூ தல்ஹா(ரலி) இரவு உணவை அருந்தினார்கள்.

பிறகு உம்மு சுலைம் அவர்களுடன் அன்றிரவு தாம்பத்திய உறவுகொண்டார்கள். உறவு கொண்டு முடித்தபோது, உம்மு சுலைம் அவர்கள் தம் கணவரிடம் 'பையனை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்' என்று கூறினார்கள்.

விடிந்ததும் அபூ தல்ஹா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இன்றிரவு தாம்பத்திய உறவுகொண்டீர்களா?' எனக் கேட்டார்கள். அபூ தல்ஹா(ரலி), 'ஆம்' என்றார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாக' என்று பிரார்த்தித்தார்கள்......(புஹாரி எண் 5470 ஹதீஸ் சுருக்கம்)

நாம் கேட்பது இது தான்:

நபித்தோழியர் வரலாறுகள் எல்லாம் கதை கேட்பதற்குத் தானா?

அன்புச் சகோதரிகளே! உம்மு சுலைம் (ரலி) அவர்களின் - "மனநிலையைக்" - கொஞ்சமேனும் உங்கள் இல்லற வாழ்வில் பிரதிபலித்துக் காட்டிட மாட்டீர்களா?

Comments