இரக்க உணர்வும் இல்லற உறவும்!

23 மார்ச், 2014

சுன்னத்தான இல்லறம்:

சென்ற வாரம் - நாம் - சுன்னத்தான காதலைப் (மவத்தத்) பற்றி சற்றே கவனம் செலுத்தினோம். அடுத்து அதனுடன் மிக நெருக்கமான தொடர்புடைய இன்னொரு உணர்வு பற்றி இப்போது கவனம் செலுத்துவோம்.

அது தான் கணவன் மனைவியருக்கிடையே இறைவன் ஏற்படுத்தியுள்ள இரக்க உணர்வு! திருமறை 30:21 வசனம் காதல் உணர்வையும் இரக்க உணர்வையும் இணைத்தே தான் குறிப்பிடுகின்றது. (மவத்தத் வ ரஹ்மத்)


இன்னும், நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே காதல் உணர்வையும், இரக்க உணர்வையும் உண்டாக்கியிருப்பதுவும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; (30:21)

ரஹ்மத் - இரக்கம் - என்பது அல்லாஹு தஆலாவுடைய அரும்பண்புகளுள் ஒன்று!

இதே இரக்க உணர்வைத்தான் - திருமணத்தின் மூலம் கணவன் மனைவியருக்கிடையே பதிய வைத்திருக்கின்றான் வல்லோன் அல்லாஹு தஆலா!

இரக்க சிந்தனை வரும்போது மனிதனுக்கு பொறுப்புணர்ச்சி தானாக வந்து விடும். திருமண உறவைப் பொறுத்தவரை இந்த இரக்க உணர்ச்சி, கணவன் மனைவியருக்குள் கொண்டு வருவது பொறுப்புணர்ச்சியைத் தான்! கணவன் மனைவிக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான்! மனைவி கணவனுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறாள்!

இரக்க உணர்வு ஏற்படுத்தும் இன்னொரு அதிசயம் - துணைவர் தனது துணைவிக்குச் செய்திட வேண்டிய கடமைகளைச் செய்திட இயலாத சூழ்நிலையில் கூட, துணைவர் மீது துணைவி இரக்கம் காட்டுகிறார். கருணை என்பது கொடுப்பது மட்டுமே! அது பதிலுக்கு திரும்பவும் எதனையும் எதிர்பார்க்காதது! ஏனெனில் கொடுப்பதில் கிடைக்கின்ற இன்பம் ஒன்றைத் திரும்பப் பெறுவதில் இல்லை!

கணவன் மனைவி உறவில் - இரக்கம் என்பது இன்னும் பல ஆழ்ந்த அர்த்தங்களைக் கொண்டது.

துணைவி அல்லது துணைவரின் தவறுகளையும் பலவீனங்களையும் மன்னித்து அவைகளை மற்றவர் பார்வையிலிருந்து மறைக்கவும் செய்கிறது இரக்க உணர்வு!

ரஹ்மத் எனும் சொல்லின் வேர்ச்சொல் "ரஹ்ம்" ஆகும். ரஹ்ம் என்பது தாயின் கருவறையைக் குறிக்கும் சொல்லாகும். இது கருணை என்பதன் பொருளை இன்னும் விரிவாக்கி விடுகிறது.

கருவறை பாதுகாப்பானது; அது குழந்தையைப் பாதுகாக்கிறது! அது குழந்தையை வளர்க்கிறது! அது போலவே கணவன் மனைவி - இருவரும் ஒருவருக்கொருவரைப் பாதுகாக்கிறார்கள்! ஒருவரின் வளர்ச்சிக்கு இன்னொருவர் பொறுப்பேற்கிறார்! கருவறையில் குழந்தைக்கு எந்த பயமும் இல்லை! அது போலவே துணையின் நெருக்கத்தில் இன்னொரு துணை பயமின்றி பாதுகாப்புடன் வளர்கிறது!

கணவனும் மனைவியும் அல்லும் பகலும் சேர்ந்தே வாழ்வதால், கணவனின் குறைகள் மனைவிக்கும், மனைவியின் குறைகள் கணவனுக்கும் வெள்ளிடை மலை! அதாவது அவை வெளிப்படையாகத் தெரிந்து விடுகிறது! அவைகளை ஒருவருக்கொருவர் மறைத்துக் கொண்டிடவும் முடியாது! மறைத்திடவும் தேவையில்லை! ஏனெனில் முகமூடி அணிந்து கொண்டு இருவரும் இல்லறத்தை இனிமையாகக் கொண்டு செல்ல இயலாது!

கருணை உணர்வு மட்டும் இருவரிடத்திலும் இல்லை என்றால் நிலைமை என்னவாகும்?

தொடர்ந்து பார்ப்போம் - இன்ஷா அல்லாஹ்!

Comments