துணையைத் தேர்வு செய்வதில் இரண்டு முக்கியமான விஷயங்கள்!

சுன்னத்தான இல்லறம்: 

துணையைத் தேர்வு செய்வதில் இரண்டு முக்கியமான விஷயங்கள்!

ஒருவர் தனது வாழ்க்கைத்துணையைத் தேர்வு செய்திடும் போது கவனித்திட வேண்டிய மிக முக்கியமான இரண்டு விஷயங்கள்:

1. இறைவனுக்கும் அவருக்கும் உள்ள உறவு

2. அவருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள உறவு

1. இறைவனுக்கும் அவருக்கும் உள்ள உறவு:

“ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக மணம் முடிக்கப்படுகிறாள். அவளின் செலவத்திற்காக, அவளது குடும்ப கௌரவத்திற்காக, அவளது அழகிற்காக, அவளது மார்க்க விழுமியங்களுக்காக. நீர் மார்க்கமுடையவளைப் பற்றிக் கொள். உன் கரத்தை அழிவிலிருந்து பாது காத்துக்கொள்வாய்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள நபி மொழி அறிவுறுத்துவது போல = மார்க்கப்பற்றுள்ள ஒரு பெண்ணையே தேர்வு செய்யுங்கள். அது போல - மார்க்கப்பற்றுள்ள ஆண்மகனையே பெண்கள் தேர்வு செய்திடட்டும்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

A . ஐந்து வேளை தொழுபவரா அவர்? நோன்பு வைப்பவரா? தங்கு தடையின்றி அவருக்குக் குர்ஆன் ஓதத் தெரிகிறதா? இது பற்றிக் கேட்டு விடுங்கள் அவரையே!

B. தோற்றம்: ஹிஜாப் அணியும் பெண், தாடி வைத்திருக்கும் ஆண் (பெண்கள் இதனை வலியுறுத்தட்டும் - ஏன் ஒரு பெண்ணைப் போல் தோற்றமுடையவரை மணக்கிறீர்கள்?). இவை தவிர்த்த "ஸ்டைல்"களில் மயங்கி விட வேண்டாம்!

C. நற்குணங்கள்: உண்மையைப் பேசுவதற்கு தைரியம், கண்ணியம், தன்னம்பிக்கை, கம்பீரம் (ஆண்களிடத்தில்), நாணம் (பெண்களிடத்தில்), வெட்க உணர்ச்சி (இருவருக்கும்), பதற்றமடையாத நிதானம், அமைதியில் அழகு காணும் நேர்த்தி, நடுநிலையான பேச்சு.

எச்சரிக்கை:

ஆணோ அல்லது பெண்ணோ - அல்லாஹு தஆலா என்ன சொல்கிறான் என்பது பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை என்றால் - திருமணத்திற்குப் பின் - அவர்கள் - நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது பற்றிக் கவலைப் படுவார்கள் என்றா எண்ணுகிறீர்கள்? ம்ஹூம்!

இறையச்சம் என்ற ஒன்று இருந்து விட்டால் அது போதும் - உங்கள் திருமணத்தை இனிமையாக்கிட! பாதுகாத்திட! பிரச்னை என்று ஒன்று வந்து விட்டால் தீர்வு ஒன்றைக் கண்டிட!

திருமணம் ஆன புதிதில் இருக்கும் அழகு, ஈர்ப்பு, கவர்ச்சி - இவைகளெல்லாம் சில மாதங்களுக்குத் தான்! அதன் பிறகு, உங்கள் வாழ்க்கைக்கு அழகு கூட்டிட உதவிக்கு வருவது தக்வா எனும் இறையச்சமே!

எனவே தான் சொல்கிறோம்! துவக்கத்திலேயே இது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்! மார்க்கத்தைப் பற்றிக் கவலைப்படாத வாழ்க்கைத் துணை வேண்டவே வேண்டாம்! அவர்கள் எவ்வளவு கவர்ச்சியாக இருந்தாலும் சரியே!

2. அவருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள உறவு

மார்க்கப் பற்று என்பதனைத் தொடர்ந்து - நீங்கள் அடுத்து கவனித்திட வேண்டிய விஷயம் - அவர் மற்றவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறார் - என்பதனைத் தான்.

ஒரு ஆணோ அல்லது பெண்ணோ - ஒருவரை "நல்லவர் இவர்" என்று அறிவது எப்படி? அவருடைய தொழுகை, நோன்பு, குர்ஆன் ஓதுதல், அவருடைய தோற்றம் - இவைகளை வைத்தா என்றால் நிச்சயம் இல்லை! பின் எதனை வைத்து? அவர் பிறருடன் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை வைத்துத் தான்!

உமர் (ரலி) அவர்கள் கேட்கும் நிபந்தனைகள்:

"நீ அவர் பக்கத்து வீட்டுக்காரரா?" அல்லது " நீ அவருடன் பயணம் செய்திருக்கிறீர்களா?" அல்லது "நீ அவருடன் கொடுக்கல் வாங்கல் செய்ததுண்டா?"

இம்மூன்று கேள்விகளிலும் காணப்படும் பொதுவான ஒரே அம்சம் - "நீ மற்றவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறாய்?" - என்பது தான்!

நீங்கள் தேர்வு செய்திடும் வாழ்க்கைத் துணைவர் / துணைவி - அவர்களுடைய பணியாளர்களுடன், பெற்றோர்களுடன், உடன் பிறந்தவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனியுங்கள்.

மற்றவர்களுடன் பழகும் போது, மென்மையாக நடக்கிறார்களா (குறிப்பாக அவர்களுக்குக் கீழே பணியாற்றுகின்ற வேலையாட்கள், கார் டிரைவர்) என்பதை நன்கு கவனியுங்கள்;

அவர்களுக்கு இரக்க உணர்வு இருக்கிறதா? மற்றவர் நிலை குறித்து (empathy) அக்கரைப் படுகிறாரா? கண்ணியமாக மற்றவர்களிடம் பேசுகின்றாரா? நன்றி சொல்கின்றாரா? சிறிய தவறுகள் ஏதாவது நிகழ்ந்தால் "மன்னிக்கவும்" என்று சொல்கிறாரா? புன்முறுவல் முகம் காட்டுகின்றாரா? சிடுசிடுவென்று பேசுகின்றாரா? நகைச்சுவை உணர்வு இருக்கின்றதா?- என்பதையெல்லாம் அவசியம் கவனியுங்கள்!

எச்சரிக்கை:

பிறருடன் பழகுதல் எனும் விஷயம் மிக முக்கியம். ஏனெனில் ஒருவருடைய தொழுகை, தொப்பி, தாடி (அல்லது ஹிஜாப்) - இவற்றையெல்லாம் பார்த்து ஏமாந்து விட வேண்டாம். வேடதாரிகள் அங்கிங்கெனாத படி எங்கும் நிறைந்து காணப்படுகின்றார்கள்!

உங்கள் எதிர்காலத் துணைவர் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பார்ப்பது மிகவும் அவசியம், ஏனெனில் - பிறரிடம் அவர் எவ்வாறு நடந்து கொள்கிறாரோ exactly அவ்வாறே தான் அவர் உங்களிடமும் நடக்க இருக்கின்றார் என்பதனை மறந்து விட வேண்டாம்!

Comments