அல்லாஹ்வுடன் கண்ணியமாக நடந்து கொள்வது எப்படி?

"அதப்" எனும் நல்லொழுக்கம் கற்றுக் கொள்வோம் வாருங்கள்! - பகுதி 1

இறைமறை அல்-குர்ஆனின் அத்தியாயம் 49 - சூரத்துல் ஹுஜுராத்தின் முதல் வசனத்தை மட்டும் இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

பொதுவாகச் சொல்வதென்றால் - இந்த அத்தியாயம் முழுவதுமே இறை நம்பிக்கையாளர்களுக்கு பல நல்லொழுக்கங்களைக் (அரபியில் அதப்) கற்றுத் தந்திட  இறக்கியருளப் பட்ட அத்தியாயம் தான்.

அதப் என்றால் என்ன?


Adab (Arabic: أدب‎) in the context of behavior, refers to prescribed Islamic etiquette: "refinement, good manners, morals, decorum, decency, etc.",

பக்குவம், நன்னடத்தை, நல்லொழுக்கம், நாகரீகம், கண்ணியம் - இவை அனைத்தையும் உள்ளடக்கியதொரு செயல்பாட்டுக்குத் தான் "அதப்" எனப்படும். ஒருவரது செயல்பாட்டில் - இஸ்லாமிய வழிமுறையைக் கடைபிடிப்பதையே அதப் என்ற சொல் குறிக்கிறது.

இந்த சிறிய கட்டுரையில் - நாம் அல்லாஹ்வுடன் கண்ணியத்துடன், மரியாதையுடன், நடந்து கொள்வது எப்படி என்பதில் - மிக மிக முக்கியமான ஒரே ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

"முஃமின்களே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முன்னர் நீங்கள் முந்தாதீர்கள்; இறை உணர்வுடன் நீங்கள் நடந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவன்; நன்கறிபவன்." (40:1)



"O you who believe! Make not (a decision) in advance before Allah and His Messenger, and
have Taqwa of Allah. Verily, Allah is Hearing, Knowing." (49:1)

"நபித்தோழர்களில் சிலர் - "இன்னின்ன விஷயங்கள் குறித்து வஹி அருளப்பட்டாக வேண்டும் என்றும், இன்னின்ன நடைமுறைகள் எல்லாம் மார்க்கத்தில் (ஹலால்) அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் பேசிக் கொண்டிருந்தார்களாம்; இது போன்று அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முந்திக் கொண்டு அவர்கள் பேசிக் கொண்டிருந்த செயல்பாடு அல்லாஹ்வுக்கு சற்றும்  பிடிக்கவில்லை; இதனைக் கண்டிப்பதற்காகத் தான் இவ்வசனம் இறக்கியருளப்பட்டது என்று எங்களுக்கு சொல்லப்பட்டது" - என கதாதா அவர்கள் இதற்கு விளக்கம் தருகிறார்கள்.

இவ்வசனத்துக்கு அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தரும் விளக்கம் என்ன?

"குர் ஆனுக்கும் சுன்னத்திற்கும் முரண்படக்கூடிய எதனையும் நீங்கள் சொல்லாதீர்கள்!"

இதில் நமக்கென்ன படிப்பினை?

குறிப்பிட்ட ஒரு மார்க்க விஷயத்தில் அல்லாஹ் என்ன நமக்கு வழிகாட்டியிருக்கின்றான் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள முற்படாமலேயே - நமக்குள் நாமாகவே - மார்க்கம் "இப்படித் தான் வழிகாட்டியிருக்க வேண்டும்!" என்றோ, அல்லது "இது தான் சரியான கருத்தாக இருக்க முடியும்!" என்றோ - அவசரப்பட்டு கருத்து சொல்ல முன் வருவதை இவ்வசனம் வன்மையாகக் கண்டிக்கிறது.  

இன்னொரு பாடத்தையும் நாம் இங்கே கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

உண்மை என்பதும் சத்தியம் என்பதும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது! உண்மைக்கும் சத்தியத்துக்கும் யாரும் உரிமை கொண்டாடிட முடியாது. ஒரு குறிப்பிட்ட விஷயம் சம்பந்தமாக ஒரு அறிஞர் ஆய்வு செய்திட்ட போதிலும் - தனது கருத்தை முன் வைக்கும்போது அவர் இறை உணர்வுடன் (தக்வாவுடன்) நடந்து கொள்ள வேண்டும் என்றும் இவ்வசனம் நமக்குக் கற்றுத் தருகிறது. எனவே தான் மார்க்க அறிஞர்கள் தங்கள் ஆய்வின் முடிவைத் தெரிவிக்கும் போதெல்லாம் - "அல்லாஹ்வே மிக அறிந்தவன்!" என்றும் சேர்த்தே சொல்வதை நாம் பார்க்க முடியும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்!

Comments

  1. 'அதப்' எனும் வார்த்தைக்கு இப்பதிவு சுருக்கமான விளக்கவுரை!

    ReplyDelete

Post a Comment