தொலைபேசி தலாக்!

இஸ்லாமிய மாத இதழ்களில் இப்படி சில கேள்விகள் கேட்கப் படுகின்றன:

“எஸ்.எம்.எஸ் வழியே அல்லது தொலைபேசி வழியே தலாக் சொன்னால் தலாக் நிகழ்ந்து விடுமா?” ஆம்! நிகழ்ந்து விடும் என்று ஒரே வரியில் பதில் அளிக்கப் படுகிறது.

ஆனால் பின்னணி என்ன என்பது புரிந்து கொள்ளப் படாமலே பதில்கள் அளிக்கப் படுவதால், பலரது வாழ்க்கை பாதிக்கப் படுகிறது என்பதை ஏனோ புரிந்து கொள்ளத் தவறி விடுகிறோம். சாதாரணமாக மருத்துவம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மருத்துவர்கள் கூட, தங்கள் ஆலோசனைகளை எழுதி விட்டு, இறுதியில் அருகில் உள்ள மருத்துவரை அணுகவும் என்று முடிக்கிறார்கள்.


ஏன் அப்படிப் பட்ட ஒரு அணுகுமுறையை நாம் மேற்கொள்ளக் கூடாது? தலாக் சம்பந்தப் பட்ட கேள்விகளுக்கு அளிக்கின்ற பதில்களோடு சேர்த்து, அருகிலுள்ள இமாமையோ, அரபுக் கல்லூரியையோ அணுகவும் என்று எழுதலாம் தானே? விஷயத்துக்கு வருவோம்.

முஸ்லிம் சமுகத்தில் தலாக் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று சமூக ஆர்வலர்கள் பலரும் தங்கள் கவலையை வெளிப் படுத்தி வருகின்றனர். குடும்ப நீதி மன்றங்களுக்கு அதிக அளவில் வருபவர்கள் முஸ்லிம்களே என்றும் ஒரு தகவல்.

“அல்லாஹ் அனுமதித்தவற்றில் அவனிடம் மிகவும் வெறுப்புக்குரியது தலாக்கை விட வேறு எதுவும் இல்லை” (நபிமொழி.ஆதார நூல்: அபூ தாவூத்)

இருந்தும் அடிக்கடி தலாக் நிகழ்வதற்குக் காரணங்கள் என்ன? ஏன் நமது கணவன்மார்கள் தலாக்கை நாடுகிறார்கள்? அதுவும் தொலைபேசி வழியேயும், எஸ்.எம்.எஸ் வழியேயும், மின்னஞ்சல் வழியேயும் ஏன் தலாக் விடுகிறார்கள்? காரணங்களை ஆய்வோம்.

1. மனைவியை விட்டு விட்டு வெளி நாடுகளுக்கு கணவன் வேலைக்குச் செல்வது தான் – பெரும்பாலும் – தொலைபேசிஃஎஸ்.எம்.எஸ் – தலாக்குக்கு வழி வகுக்கின்றன. திருமணம் முடித்து ஒரு சில மாதங்களுக்குள்ளேயே கணவன் வெளி நாடு புறப்பட்டு விடுவதாலும்இ இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் ஊருக்கு வந்து ஒன்றிரண்டு மாதங்கள் தங்கிச் செல்வதாலும் – கணவன் மனைவிக்கு இடையே உள ரீதியான புரிந்துணர்வு ஏற்படுவது இல்லை. கணவன், மனைவியோடு சேர்ந்து செலவு செய்திடும் நேரம் மிகவும் குறைவே.

2. வரதட்சனை மற்றும் கொடுக்கல் வாங்கல் பிரச்னைகளும் தலாக் விடக் காரணமாகி விடுகின்றன. “சொன்ன படி நகை செய்து போடவில்லை, சீர் எடுத்துத் தரவில்லை; பாலும் பழமும் சீர் நாம் எதிர்பார்த்த படி செய்யவில்லை. எதிர் வீட்டில் இவ்வளவு வாங்கினார்கள், அந்த வீட்டுக்கு அவ்வளவு வந்து சேர்ந்தது. எனவே தலாக் ஒன்று தான் இதற்குத் தீர்வு” என்று முடிவு கட்டி விடுகிறார்கள். இது போன்ற காரணங்களுக்காக ஒரு பெண்ணை தலாக் விடுவதில் கணவனை விட அவனது தாயே முன்னே நிற்கின்றாள். 3. தலாக் விடுவதற்கான காரணங்களில் பல “அற்பமானவை”. “மாமியார் பேச்சைக் கேட்பதிலை. நாத்தனாரை மதிப்பதில்லை. அனுமதி வாங்காமல் ‘அம்மா வீட்டுக்குப் போகிறேன்’ என்று ஒரு வரியில் சொல்லி விட்டுப் போய் விடுகிறாள்…”. இப்படிப் பட்ட காரணங்களுக்கெல்லாம் விவாக ரத்து தான் தீர்வா? கணவன் அருகில் இருந்திருந்தால் உடனுக்குடனேயே திருத்தி விடலாம் தானே!

ஆக, இது போன்ற சூழ்நிலைகளில் “அப்பாவிக் கணவன்மார்கள்” தொலை தூரத்தில் இருந்து கொண்டு அம்மா பேச்சைக் கேட்டு அவசரப் பட்டு தலாக் விட்டு விட்டு பின்னர் “உண்மை நிலவரம்” வெளிப்பட்ட உடன் மனம் வருந்தி இனி சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கின்றதா என்று அறிந்திடத் தான் பத்திரிகைகளுக்கு எழுதிக் கேட்கின்றார்கள்.

இது போன்ற சிக்கல்களிலிருந்து நம் சமுதாயம் விடுபடும் வழி வகைகளை இங்கு ஆய்வோம்.

1. திருமணத்தை “கலாச்சார” வழியில் நடத்தி விட்டு, தலாக் கூடுமா என்று மார்க்க அறிஞர்களைக் கேள்வி கேட்பவர்களைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்போம். வரதட்சனை கூடுமா என்று எந்தப் பத்திரிகைக்காவது எழுதிக் கேட்டதுண்டா? திருமணத்துக்கு “கலாச்சாரம்”. விவாகரத்துக்கு மார்க்கமா? ஏன் இந்த இரட்டை நிலை? எனவே தான் சொல்கிறோம். சீர்திருத்தம் என்பது திருமணத்துக்கு முன்பேயே துவங்கி விட வேண்டும். 2. மனைவியை விட்டு விட்டு வெளி நாடு செல்வதற்கு எந்த அறிஞர் நமக்கு “ஃபத்வா” கொடுத்திருக்கிறார்? இளைஞர்களே! இளம் கணவன்மார்களே! இன்று ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவு உங்களுக்கு ஒரு வாய்ப்பைத் தந்துள்ளது. எதிர்காலம் குறித்து இப்போதே திட்டமிடுங்கள். ஒன்று மனைவியோடு சேர்ந்து வாழ “கஞ்சியோ கூழோ” அது போதும் என்று புறப்பட்டு விடுங்கள். அல்லது வசதி இருப்பின் மனைவியை உடன் அழைத்துச் சென்று விடுங்கள்.

3. தாய் பேச்சைக் கேட்பதற்கு ஒரு வரம்பு இருக்கின்றது. படைத்தவனுக்கு மாறு செய்யும் வகையில் படைப்பினங்களுக்குக் கட்டுப்படுதல் கூடாது என்பது நபி மொழி. எனவே “எந்த ஒரு நியாயமான காரணமுமின்றி – அம்மா தலாக் விடச் சொன்னார். அதனால் தான் சொன்னேன்” என்றெல்லாம் கூறுவது ஆண்மையற்ற செயல்.

4. வெளி நாட்டில் இருக்கும் போதே – மனைவியுடன் பிணக்கா? உங்களை மதிக்கவில்லையா? உங்கள் பேச்சைக் கேட்பதில்லையா? எதிர்த்துப் பேசுகிறாளா? அவமதித்து விட்டாளா? உடனேயே தலாக் விட்டு விடலாம் என்று தோன்றுகிறதா? அவசரப் படாதீர்கள். முதலில் உங்கள் கோபம் தணியட்டும். பின்பு நேரடியாக மனைவியுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் மனைவியின் தரப்பை செவி தாழ்த்திக் கேளுங்கள். இது மிகவும் முக்கியம். பின்னர் பொறுமையாக உங்கள் எதிர்பார்ப்பை வெளிப் படுத்துங்கள். ஈகோவை விட்டு விடுங்கள். நபியவர்கள் கூட தங்கள் மனைவிமார்களிடம் எப்படி நடந்து கொண்டிருந்தார்கள் என்று ஆலிம்களிடம் கேட்டுப் பாருங்கள். தொலைபேசியில் நேரடியாக பேசிட தயக்கமா? இருவருக்கும் பொதுவான இன்னொருவர் மூலமாக உங்கள் கருத்துக்களை தெரியப் படுத்துங்கள். அவர் மூலம் உங்கள் மனைவியின் கருத்துக்களைப் புரிந்து கொள்ளுங்கள்.

5. இதுவெல்லாம் சரிப்படாதா? தலாக்குக்கு அவசரப் படுவதற்கு பதிலாக ஒரு தடவை ஊருக்கு வந்து செல்லுங்கள். வந்ததும் ஆலிம்களை அணுகி விளக்கம் கேட்டுக் கொள்ளுங்கள். பிரச்னையை சுமுகமாகத் தீர்த்திட முயற்சி செய்யுங்கள். “துபாயிலிருந்து” புறப்படும்போது உங்கள் மனைவியிடம் இருந்த வெறுப்பு உங்கள் மனைவியை நேரில் பார்த்ததுமே பறந்து போய் விட வாய்ப்பு இருக்கிறது. அல்லாமல் தொலைபேசித் தலாக்கின் பக்கம் நாடினால் என்னென்ன “வாய்ப்புகளை” நீங்கள் இழக்கிறீர்கள் என்பதை சற்றே சிந்தியுங்கள்.

5. தலாக் விடுவது என்று முடிவெடுத்து விட்டால் மார்க்கம் எப்படி அதனைக் கற்றுத் தருகிறது தெரியுமா?

அ. உங்கள் மனைவி மாதவிடாயிலிருக்கும் போது நீங்கள் தலாக் விடக்கூடாது. அல்லாஹ் இதனை விதித்திருப்பதில் ஒரு பெரிய உளவியல் தத்துவமே அடங்கியுள்ளது! ஆனால் தொலைபேசியில் தலாக் சொல்ல முற்பட்டால், உங்கள் மனைவியிடம் “ஏண்டீ! நீ இப்போ மென்ஸஸில் இருக்கிறாயா? சுத்தமாக இருக்கிறாயா” என்று கேட்கப் போகிறீர்களா? சொல்லுங்கள்?

ஆ. மாதவிடாயிலிருந்து சுத்தமான பின்னர், மனைவியுடன் உடலுறவு கொள்ளாத நிலையில் ஒரே ஒரு தலாக் விடலாம். உங்கள் மனைவி மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்த நிலையில் இருவருக்குமே உடலுறவு ஆசை மேலோங்கியிருக்கும். அந்த ஆசையை விட உங்கள் வெறுப்பு மிகைத்தால் மட்டுமே தலாக் சொல்லிட இயலும். ஆனால் ஒரே ஒரு தடவை நீங்கள் சேர்ந்து விட்டாலும், அவ்வளவு தான். அந்த மாதம் நீங்கள் தலாக் விடவே முடியாது. சுப்ஹானல்லாஹ்! எஸ்.எம்.எஸ் – தலாக் இந்த வாய்ப்பை உங்களுக்கு வழங்கிடுமா?

இ. ஒரு தலாக் சொல்லி விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் மனைவியை நீங்கள் அவருக்கு வழங்கியிருந்த வீட்டை விட்டு வெளியேற்றிட முடியாது. அவர்களாகவும் வெளியேறிச் சென்றிடவும் கூடாது. இப்போது இருவரும் ஒரே வீட்டில். தலாக் விட்டிருக்கும் நிலையில் நீங்கள் உங்கள் மனைவியைத் தீண்டக் கூட முடியாது. தீண்டினாலே தலாக் முறிந்து விடும் தெரியுமா? சரி, தீண்டவும் இல்லை. அவர் பாட்டுக்கு அவர் வேலையைப் பார்க்கிறார். நீங்கள் பாட்டுக்கு உங்கள் வேலையைப் பார்க்கிறீர்கள். என்ன நடக்கும்? பழைய நினைவுகள் உங்களை பின்னோக்கி அழைத்துச் செல்லும். நீங்கள் உல்லாசமாக இருந்த கணங்களை மீட்டிப் பார்ப்பீர்கள்.

இப்போது சோகமே உருவான முகத்துடன் உங்கள் மனைவி உலா வருவதையும் கவனிப்பீர்கள். இரக்கம் வரும் உங்கள் மனைவி மீது. உங்கள் மனைவியின் ஒரு குறை உங்களுக்குப் பெரிதாகத் தெரிந்தால், அவருடைய இன்னொரு நிறையை நினைவு கூற வாய்ப்பு இப்போது. இப்படி ஒரு மாத கால அவகாசம் உங்களுக்குத் தரப் பட்டிருப்பதன் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள மாட்டீர்களா? நீங்கள் இரண்டாவது தலாக் விட்டாலும், இதே நடைமுறையைத் தான் கையாள வேண்டும். இன்னொரு வாய்ப்பு! இன்னொரு மாதம்! என் அன்புச் சகோதரர்களே! தொலை பேசித் தலாக்கில் இதற்கெல்லாம் சாத்தியம் உண்டா?

ஈ. எனவே கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து பிரச்னை தலைதூக்கினால் – முதலில் கணவன் தன்னளவில் – மார்க்க அறிஞர்களின் வழி காட்டுதல்களுடன் – பிரச்னையைத் தீர்க்க முயல வேண்டும். அடுத்து குடும்ப அளவில் ஒன்று கூடி சுமுகமான ஒரு தீர்வுக்கு வழி காண வேண்டும். தேவைப் படின் மன நல ஆலோசகர் ஒருவரையும் தம்பதிகள் இருவரும் சேர்ந்து சென்று சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். அப்படியும் பிரச்னை தீரவில்லை எனில் மார்க்க அறிஞர்களிடம் தலாக் விடும் முறைகள் குறித்தும், அதன் நிபந்தனைகள் குறித்துமான வழி காட்டுதல்களை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். உ. தலாக் பிரச்னையில் அவசரம் காட்டக் கூடாது. ஏனெனில் பாதிக்கப் படுவது ஒரு பெண் மட்டுமல்ல. அந்த பெண்ணின் குடும்பத்தார்களும் சேர்ந்து பாதிப்புக்குள்ளாகிறார்கள். அவர்களின் குழந்தைகளும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். ஏன், ஒரு தலைமுறையின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடுகிறது. இதில் கணவன், மனைவி, குடும்பம், உறவினர்கள், ஜமாஅத் தலைவர்கள், ஆலிம் பெருமக்கள், முஸ்லிம் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது. ஏனெனில் இது குறித்து ஒவ்வொருவரும் அல்லாஹ்வுக்கு பதில் சொல்லக் கடமைப் பட்டவர்களே என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

6. இறுதியில் ஒரு வேண்டுகோள். நம் சமுகத்தின் “பயணக் கலாச்சாரம்” பல பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ந்மது சமுகத்தின் புதிய தலைமுறை மீளாய்வு செய்திடும் காலம் வந்து விட்டது. இனியும் இதில் தாமதிப்பதில் பொருள் இல்லை. “நாங்கள் எல்லாம் இல்லையா? உங்கள் வாப்பா சிங்கப்பூரில் இருந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வருவார்கள். அப்படி என்ன உங்களுக்கு பொண்டாட்டி சுகம் கேட்கிறது? ” என்று சில தாய்மார்கள் இன்னும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். “ஊம். ஊருக்கு வந்து விட்டால் செலவுக்கு என்ன பண்ணுவதாம்?” என்று வீட்டுச் செலவுக்கு ஒரு பெரிய்ய பட்டியல் போட்டுக் கொண்டு மகன்களின் உழைப்பையும இல்லற வாழ்க்கையையும் சூரையாடிக் கொண்டிருக்கும் தாய்மார்களுக்குக் கட்டுப் பட்டுத் தான் ஆக வேண்டுமா? சொல்லுங்கள்!

7. என் அன்புக்குரிய தாய்மார்களே! இறுதியில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அதிகம் பாதிக்கப் படுவது பெண்ணினம் தான் என்பதை எப்போது தான் உணர்வீர்களோ?

Comments