இடையில் வந்து சேர்ந்ததை, இடையிலேயே திருப்பி அனுப்பி விடலாம் தானே!

நம்மில் பல பெற்றோர்கள் - தங்கள் குழந்தைகளிடம் சில கெட்ட பழக்க வழக்கங்கள் வந்து விட்டால் - அவர்களைத் திருத்திடவே முடியாது என்று அழுத்திச் சொல்லி விடுகிறார்கள். ஆனால் அது தவறு!

குழந்தைகளிடம் காணப்படுகின்ற “தவறுகள்” எல்லாம் – அவர்கள் பிறக்கும்போதே அவர்களுடன் ஒட்டிக் கொண்டு பிறப்பதில்லை!

தூய்மையாகத் தான் அவர்கள் பிறக்கிறார்கள் என்ற உண்மையை நாம் உணர்ந்திட வேண்டும்.

கொஞ்சம் வளர்ந்ததும் அவர்களிடம் கெட்டப் பழக்கங்கள் வந்திருக்கின்றன என்றால் என்ன பொருள்? யாரிடமிருந்தோ அவர்கள் அதனைக் கற்றிருக்கிறார்கள் என்று தான் பொருள்! யார் கற்றுக் கொடுத்திருப்பார்கள்?

ஒன்று – பெற்றோர்; அல்லது – அண்ணன் - தம்பியர்; அல்லது – உறவினர்கள்; அல்லது – தாத்தா- பாட்டி; அல்லது – நண்பர்கள்; அல்லது – அண்டை அயலார்; அல்லது – காட்சி ஊடகங்கள் – இவற்றுள் ஏதாவது ஒன்று!

அது போலவே - நமது குழந்தைகளிடம் கெட்டவை தவிர்த்து, நல்ல பழக்கங்கள் என்று ஏதாவது காணப்பட்டால் - அதுவும் அவர்கள் கற்றுக் கொண்டது தான். ஒரு நல்ல பழக்கமும் அவர்களிடத்தில் இல்லை என்றால், என்ன பொருள்?

அவர்கள் பார்த்து கற்றுக் கொள்ள நம்மிடத்தில் எந்த ஒரு நல்ல பழக்கமும் இல்லை என்று தானே பொருள்?

எது எப்படியோ! நமது குழந்தைகளிடம் கெட்ட பழக்க வழக்கங்கள் ஏதேனும் காணப்பட்டால் அவைகளைக் களைந்திட முடியுமா என்பதே கேள்வி!

இன்ஷா அல்லாஹ் - முடியும் என்பது தான் முடிவான பதில்!

ஏன் தெரியுமா? இடையில் வந்து சேர்ந்த்தை, இடையிலேயே திருப்பி அனுப்பி விடலாம் தானே!

உங்கள் தாய்மார்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு - அவனே அமைத்தான். (16:78)

Comments