என்னவாயிற்று சமீமாவுக்கு?

சமீமா ஒரு சிறுமி. வயது எட்டு. நான்காம் வகுப்பு படிக்கிறாள். மிக நன்றாகப் படித்துக் கொண்டிருந்த சமீமாவிடம் சில மாற்றங்கள். முன்பு போல் இப்போது நன்றாக படிப்பதில்லையாம். பல பாடங்களில் ஃபெயில் மார்க் வாங்குகிறாளாம். பள்ளிக்கூடத்திலிருந்து பெற்றோருக்கு அழைப்பு. முன்பு போல் அவள் இல்லை; படிப்பில் கவனம் இல்லை; போதாததற்கு இப்போதெல்லாம் மற்ற சிறுமிகளை அடித்து விடுகிறாளாம். அடிக்கடி இது நடக்கிறதாம் என பெற்றோரிடம் தெரிவிக்கப்படுகிறது.

என்னவாயிற்று சமீமாவுக்கு?


**

அது ஒரு கூட்டுக் குடும்பம். கணவன் (சலீம்), மனைவி, கணவனின் தாய், கணவனின் சகோதரி (ரஹீமா) எல்லாரும் ஒரே வீட்டில். சகோதரி விவாக விலக்கு பெற்று அண்ணன் வீட்டில் தாயுடன் சேர்ந்து வசிக்கிறார். சகோதரி ரஹீமாவுக்கு ஒரு மகன். சலீமுக்கு ஒரே மகள். இந்த இரண்டு குழந்தைகளும் சேர்ந்து விளையாடுவார்கள். ஆனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்து விடும். பெரும்பாலும் வம்புக்கு இழுப்பவன் சகோதரி மகன் தான். டக்கென்று அடித்து விடுவான் அவன். பாட்டி எழுந்து வருவார். பேரனைக் கட்டிப்பிடித்துக் கொள்வார். பேத்தியைக் கண்டிப்பார்: “அவன் சின்னப் பிள்ளை தானே! அவன் அடித்தால், அவனைத் திருப்பியா அடிப்பது?” “ஏன் புள்ள! என்ன புள்ள வளர்க்கிற? கண்டிச்சு வைக்கிறதில்ல?” என்று மருமகளுக்கும் ஒரு டோஸ் கொடுப்பார் அவர்.

மருமகள் தன் மகளை அழைத்து விசாரிப்பார். “என் மேல எந்தத் தப்பும் இல்லைம்மா! எப்ப பாத்தாலும் அவன் தான் என்னை வம்புக்கு இழுத்து அடித்து விடுகிறான் அம்மா!” என்பாள் மகள். தாய்க்குப் புரிகிறது. ஆனால் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. “அவன் உன்னை அடித்தால் நீ திருப்பி அவனை அடிக்காதே!” என்று மட்டும் சொல்கிறார் மகளிடம்.

“என்னைக் கண்டிக்கிறீர்களே! அவனை ஏன் கண்டிக்க மாட்டேன் என்கிறீர்கள்?” என்று கேட்கிறாள் மகள்.

ஆனாலும் அவர்கள் இருவருக்கும் சண்டை அடிக்கடி தொடரும். மகள் வயிற்றுப் பிள்ளை மேல் பாசம் கொண்ட பாட்டி – மருமகளைத் தொடர்ந்து திட்ட – வேறு எந்த ஒன்றையும் செய்ய முடியாத மருமகள் – தன் மகளைப் போட்டு அடிக்கத் தொடங்குகிறார். அதுவே ஒரு தொடர்கதையாகப் போய் விடுகிறது!

விளைவு?

கட்டுரையின் ஆரம்ப வரிகளை மீண்டும் படியுங்கள்.

சமீமா வேறு யாருமில்லை! சலீமின் மகள் தான் அவள்!!

**

சமீமாவுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்ததற்கும், அவள் மற்ற சிறுமிகளை அடிக்கத் தொடங்கியிருப்பதற்கும் காரணம் இப்போது புரிகிறதா?

**

பெற்றோர்கள் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம்:

குழந்தைகளை அடிக்காதீர்கள்!

குழந்தைகளை அடிப்பது உங்கள் வழக்கம் என்றால் – இன்றோடு அப்பழக்கத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள்!

குழந்தைகளை அடிப்பது குறித்து மேலும் சிந்திப்போம் இன்ஷா அல்லாஹ்!

Comments