அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குழந்தைகளை அடித்திருக்கிறார்களா?

பல பெற்றோர்கள் குழந்தைகளை அடித்துத் திருத்துவதையே மிகச் சரியான வழிமுறை என்று வாதிடுகின்றார்கள்.

தூரத்து உறவினர் பெண்மணி ஒருவர் தம் மகளுடன் எம் இல்லத்துக்கு வந்திருந்தார். குழந்தைகளை அடித்துத் திருத்துவது பற்றி பேச்சு வந்தது. அந்தப் பெண்மணியின் பத்து வயது மகள், “மாமா, அம்மா எதற்கெடுத்தாலும் என்னை தலையில் “ணங்…ணங்” என்று குட்டுகிறார்!” - என்று என்னிடம் முறையிட்டாள்.

அந்தப் பெண்மணி குறுக்கிட்டு, “அண்ணே! எங்க அம்மா எங்களை அப்படித்தான் குட்டிக் குட்டி வளர்த்தார்; அதனால் தான் நாங்கள் இப்போது நன்றாக இருக்கிறோம்; அது போல என் மகளை நான் குட்டி குட்டித்தான் வளர்ப்பேன்; எல்லாம் அவள் நன்றாக வர வேண்டும் என்பதற்காகத் தான்!” என்றார்.

அடிப்பதை நியாயப்படுத்திட அவர்கள் சொல்கின்ற 'பொன்மொழிகளைப்' பாருங்கள்:

- கோள் எடுத்தால் குரங்கும் ஆடும்!

- அடியாத மாடு படியாது!

- அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்!

- அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்!

குழந்தைகளை அடித்தால் நம் சொல்லுக்கு அவர்கள் உடனே கட்டுப்பட்டு விடுகிறார்கள் என்பது உண்மைதான்!

ஆனால் அது பய உணர்ச்சியினால் உந்தப்பட்டு! அதுவும் தற்காலிகமாக! அதுவும் நமது முன்னிலையில் மட்டும்!

ஆனால் குழந்தைகளை அடிப்பதனால் ஏற்படுகின்ற பாரதூரமான விளைவுகள் என்னென்ன?

சிறிய குழந்தைகள் தொடர்ந்த பய உணர்ச்சிக்கு ஆட்பட்டு விடுகிறார்கள்.

சற்றே வயது வந்த குழந்தைகளை அடித்தால் - அது கோபம், வெறுப்பு போன்ற உணர்ச்சிகளைத் தூண்டி விடும்! கட்டுப் பட மாட்டார்கள். எதிர்த்துப் பேசுவார்கள். விலகிப் போய் விடுவார்கள். மறைவாக செயல் படத் தொடங்கி விடுவார்கள்.

குழந்தைகள் வன்முறையாளர்களாக மாறுவது, அவர்களிடம் தற்கொலை எண்ணம் தலை தூக்குவது, அவர்கள் வீட்டை விட்டு ஓட நினைப்பது எல்லாமே - குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்ளும் பெற்றோர்களால் தான். அடித்தால் தான் காரியம் கைகூடும் என்பதைப் பெற்றவர்களிடமிருந்தே கற்றுக் கொண்டு விடுவார்கள்.

**

'அப்பா, அண்ணன் என்னை அடிக்கிறான், பாருங்களேன்.' - என்று ஓடி வருகிறான் தம்பி.

- 'அவன் தான்ப்பா முதலில் என்னை அடித்தான்.' - இது அண்ணன்.

- 'டேய்! யாரடா முதலில் அடித்தது? - இது தந்தை.

- தம்பி தயங்கியபடியே - அவன் ஏன்ப்பா என்னைத் திட்டினான். அதனால் தான் அவனை அடித்தேன்!'

- 'திட்டினால் என்னிடம் வந்து சொல்ல வேண்டியது தானே? அதற்காக ஏன் அண்ணனை அடித்தாய்?' - என்று அதட்டிய படியே தந்தை தம்பியை ஒரு தட்டு தட்டுகிறார். கூடவே அதனை சரி கட்டுவதற்கு அண்ணனையும் ஒரு போடு போடுகிறார்!

- 'இனி மேல் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளக் கூடாது! புரிகிறதா?' என்று அனுப்பி வைக்கிறார்.

இங்கே அந்த இரு சிறுவர்களும் தங்கள் தந்தையிடம் இருந்து கற்றுக் கொண்டதென்ன? இனி நாம் யாரையும் அடித்திடக் கூடாது - என்றா அவர்கள் கற்றுக் கொண்டார்கள்? இல்லை!

மாறாக - அடிப்பது தவறு என்றால் அப்பா நம்மை ஏன் அடித்திட வேண்டும்? அடிக்காமலேயே சொல்ல வேண்டியது தானே! ஆக தந்தை நம்மிடம் 'அடிக்கக் கூடாது' என்பதெல்லாம் ஒரு பேச்சுக்குத் தான். அவருக்குத் தேவைப்படும் போது அவர் அடிக்கலாம் என்றால் நமக்குத் தேவைப்படும் போது நாமும் அடிக்கலாம் தானே - இதுவே அவர்கள் கற்றுக் கொள்கின்ற பாடம்!

** *

குழந்தைகளை அடிப்பதற்குத் தான் மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதே என்கிறீர்களா? ஆம்!

'உங்கள் குழந்தை ஏழு வயதை எட்டி விடும் போது தொழுகையை நிறைவேற்றும்படி அவர்களை ஏவுங்கள். அவர்கள் பத்து வயதை எட்டி விடும் போது தொழுகையைத் தவற விட்டால் அவர்களை அடியுங்கள்.' (முஸ்லிம்)

ஆனால் அடிப்பது என்பது ஃபர்ளோ வாஜிபோ கிடையாது! தவிர்க்க முடியாத ஒரு சில சூழ்நிலைகளில் மட்டும் அடிப்பதை பயன் படுத்திக் கொள்ள 'அனுமதி' உள்ளது. அவ்வளவு தான்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குழந்தைகளை அடித்திருக்கிறார்களா என்ன?

ஒரு முறை ஒரு வேலைக்காரச் சிறுமியை ஒரு பொருள் வாங்கி வருமாறு கடைக்கு அனுப்புகிறார்கள் அண்ணல் நபியவர்கள். சிறுமியோ தெருவில் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று விடுகிறாள். நீண்ட நேரம் காத்திருந்து, காத்திருந்து, பொறுமையிழந்து, சிறுமியைத் தேடி கடை வீதிக்குப் போகிறார்கள் அண்ணலார். அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை நோக்கி அண்ணலார் என்ன சொன்னார்கள் தெரியுமா?

'மறுமையில் பதில் அளிக்க வேண்டும் என்கிற பொறுப்பு மட்டும் இல்லாமலிருந்தால் உன்னை இந்த மிஸ்வாக் குச்சியால் அடித்திருப்பேன்!'

எடை குறைவான, மிருதுவான விழுது தான் மிஸ்வாக்.

**

குழந்தைகளை அடிக்காதீர்கள் அடிக்காதீர்கள் என்று நாம் அழுத்திச் சொல்வது ஏன் தெரியுமா? குழந்தைகளைப் பிரம்பினால் அடிப்பது, கன்னத்தில் அறைவது, தலையில் குட்டுவது போன்ற 'தண்டனைகள்' குழந்தைகளின் உடலளவிலும் மனத்தளவிலும் ஏற்படுத்துகின்ற விளைவுகள் பாரதூரமானவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இத்தனைக்குப் பிறகும் “மென்மையான” முறைகள் எல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்து வராது என்று சொல்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் யார் தெரியுமா?

குழந்தைகளை செல்லம் கொடுத்துக் கெடுத்தவர்கள்!

தாமே முன் மாதிரியாக நடக்கத் தவறியவர்கள்!

இவர்கள் தாம்.

நீங்கள் அப்படி இல்லையே?

**

அடிப்பது கூடாது என்றால் குழந்தைகளை எவ்வாறு கட்டுப் படுத்துவது என்று கேட்கிறீர்களா?

ப்ளீஸ் வெயிட்!

Comments