உணர்ச்சி வசப்பட்டு விட்டால் படிப்பு எப்படி வரும்?

அந்த மாணவனுக்கு பதினான்கு வயது தான். விடுதி ஒன்றில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கின்றான். பள்ளியில் நன்றாகப் படிப்பதில்லை, போதிய மதிப்பெண் எடுப்பதில்லை - என்று கவுன்ஸலிங்குக்கு அனுப்பப்பட்டிருக்கின்றான்.


படிப்பில் அவன் பலவீனமானவனா என்றால் அது தான் இல்லை! படிப்பில் அவனுக்கு ஆர்வமில்லையா என்றால் அதுவும் இல்லை! கேள்விகள் கேட்டால் - டாண் டாண் என்று பதில் சொல்கிறான். தெள்ளத் தெளிவாகப் பேசுகிறான். பின் ஏன் படிக்கவில்லை?

சற்று ஆசுவாசத்துக்குப் பிறகு பேச ஆரம்பித்தான்: "சார்! என் தந்தையை நான் வெறுக்கிறேன்!" - என்றான். அவர் மிகக் கொடூரமானவர் (very very harsh) சார்; அவர் ஒரு மிருகம்; என் தாயுடனும் அப்படித்தான்; அவர் வேலை செய்யும் கம்பெனியிலும் அப்படித்தான்; இந்தக் கடிதத்தைப் படித்துப்பாருங்கள் சார்!" - என்று ஒரு கடிதத்தை நீட்டினான்.

அப்படி ஒரு கடிதத்தை நீங்கள் கற்பனை செய்து கூடப் பார்த்திட முடியாது! அவ்வளவு கடுமையான வார்த்தைகள். "ஒரே ஒரு கடிதம் தான் இப்படி என்று நினைக்காதீர்கள் சார்; அடிக்கடி கடிதம் வரும்; எல்லாமே இப்படித்தான்; புத்தகத்தைத் திறந்தால் எனக்கு எப்படி சார் படிப்பு வரும்?" - என்று என்னையே என் முகத்தைப் பார்த்து நேரடியாகக் கேட்டான்.

முதலில் என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை!

படிப்பினை: ஒருவர் கடுமையான உணர்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட்டு விட்டால் - அவருடைய "அறிவு" வேலை செய்யாது;  

கவுன்ஸலிங்குக்குப் பிறகு அவன் சொன்னான்: 

என் தந்தையைப் பள்ளிக்கு அழைத்திட வேண்டாம் என்று பள்ளியில் சொல்லி விடுங்கள் சார்; நான் இனி நன்றாகப் படித்துக் காட்டுகிறேன்; சிறப்பு வகுப்புகள் எல்லாம் எனக்குத் தேவை இல்லை; நானே படித்து மார்க் வாங்கிக் காட்டுகிறேன் சார்!" 

அவனுடைய வகுப்பாசிரியருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது. மாணவனுக்கு இப்போது தேவை அன்பும் அரவணைப்பும், அவன் மீது சற்றே அக்கரையும் தான்! அதனை ஒரு ஆசிரியர் கூடத் தர முடியும்!

குறிப்பு: இது சற்றே கற்பனை கலந்த ஒரு உண்மை சம்பவம்!  

Comments