ஹில்ஃபுல் ஃபுளூல் ஒப்பந்தமும் படிப்பினையும்

யமன் நாட்டின், ஜுபைத் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வணிகப் பொருட்களுடன் மக்கா வந்தார். மக்காவின் பனூ ஸஹ்ம் கோத்திரத்தைச் சேர்ந்த ஆஸ் இப்னு வாயில் என்பவர் அந்த யமன்வாசியிடமிருந்து சில பொருட்களை விலை பேசி வாங்கிக் கொண்டு அதற்கான தொலையைக் கொடுக்க மறுத்துவிட்டார்.


பறிகொடுத்தவர் தனது நட்புக் கோத்திரத்தார்களான பனூ அப்துத் தார், பனூ மக்ஜூம், பனூ ஸஹ்ம் ஆகியோரிடம் சென்று உதவி கேட்டபோது எவரும் அவரது கோரிக்கையை ஒரு பொருட்டாகவே மதித்திடவில்லை. உடனே அவர் அபூ குபைஸ் மலையில் ஏறிக்கொண்டு தனக்கிழைக்கப்பட்ட அநியாயத்தை உரத்த குரலில் முறையிட்டார். அங்கிருந்த  அண்ணலாரின் பெரிய தந்தை ஜுபைர் இப்னு அப்துல் முத்தலிப் – “ஏன் இவர் இவ்வாறு கைவிடப்பட்டார்?” என வினவினார்கள்.

இந்தப் பின்னணி தான் ஹிள்ஃபுல் ஃபுளூல் ஒப்பந்தம் உருவாகிடக் காரணம் ஆனது. அது ஃபிஜ்ஜார் போருக்குப் பின் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது. .

ஃபிஜ்ஜார் போருக்குப்பின் துல் கஃதா மாதத்தில்  ‘ஹில்ஃபுல் ஃபுளூல்’ எனும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த  ஒப்பந்தம் ஏற்பட்டது. இதில் கலந்து கொண்ட  குறைஷி கோத்திரத்தவர்கள் - பனூ ஹாஷிம், பனூ முத்தலிப், பனூ அஸத், பனூ ஜுஹ்ரா, பனூ தைம் ஆகியோர் ஆவர்.

அனைவரும் அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் அத்தைமீ என்ற பெரியவர் ஒருவரின் வீட்டில் ஒன்று கூடினர்.  அநீதி இழைக்கப்படுபவர் எவராயினும், அவருக்கு நீதி கிடைக்கச் செய்வதில் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் எனும் உடன்படிக்கை அங்கே  அப்போது உருவானது.

இவ்வுடன்படிக்கையில் நபி (ஸல்) அவர்களும் கலந்து கொண்டார்கள்.  அதன் பின் அந்த யமன்வாசியின் உரிமை மீட்டுத் தரப்பட்டது.

இவ்வுடன்படிக்கையில் கலந்து கொண்டது பற்றி நபித்துவம் கிடைத்ததற்குப் பின் ஒரு சமயத்தில் நபி (ஸல்)  கூறினார்கள்: அப்துல்லாஹ் இப்னு ஜத்ஆன் வீட்டில் நடந்த ஒப்பந்தத்தில் நான் கலந்து கொண்டேன். எனக்கு செந்நிற ஒட்டகைகள் கிடைப்பதைவிட அந்த ஒப்பந்தத்தில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இஸ்லாத்தின் வருகைக்குப் பின்பும் எனக்கு (அதுபோன்ற) ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அதை நான் ஒப்புக் கொள்ளவே செய்வேன்.

படிப்பினைகள்:

மனித இயல்பு எதிர்பார்க்கின்ற பொதுவான எல்லா நற்பண்புகளையும் இஸ்லாம் ஆரத்தழுவிக்கொள்ளவே செய்கிறது.  நீதியும் நியாயமும் மனித இயல்பின் தேட்டங்களுள் உள்ளவை தாம்!

இந்த அடிப்படையில் நீதிக்காகப் போராட முன் வருகின்ற முஸ்லிம் அல்லாதவர்களை – இஸ்லாம் அங்கீகரிப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களுடன் சேர்ந்து நீதிக்காகக் குரல் கொடுப்பதை ஊக்குவிக்கவும் செய்கிறது என்பதையே இந்த ஒப்பந்தம் நமக்கு ஒரு படிப்பினையாக வழங்குகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

அநியாயத்துக்கு உள்ளானவர் முஸ்லிம் அல்லாதவராக இருந்தாலும், அவருக்கும் நீதி கிடைத்திட முஸ்லிம்கள் பாடுபட்டாக வேண்டும் என்பதையும் இவ்வுடன்படிக்கை நமக்கு உணர்த்துகிறது.

Comments