தலை கீழ் மாற்றம்! ஒரே ஒரு இறை வசனத்தில்!

அன்றைய அரபுக்களிடம் ஒரு பழக்கம் இருந்தது. அதாவது தந்தை ஒருவர் இறந்து விட்டால் - அவருடைய மனைவி, அந்தத் தந்தையின் மகனுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுவார்.

அந்த மகன் நினைத்தால் - தன் தந்தையின் மனைவியை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். அவன் என்ன செய்வான்?
ஒன்று: தானே தன் தந்தையின் மனைவியைத் திருமணம் செய்து கொள்வான்.

அல்லது: வேறு ஒருவருக்கு அப்பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பான்.

அல்லது: வேறு எவரையும் அப்பெண் திருமணம் செய்து கொள்ள விடாமல் தடுத்து விடுவான்.

அதாவது - அப்பெண்ணுக்கு அவளுடைய குடும்பத்தினரை விட தன் கணவனின் குடும்பத்துக்கே சகல உரிமையும் பாத்தியதையும் இருந்த காலம் அது!

இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தது திருக்குர் ஆன்!

நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை ( இறந்தவனுடைய பொருள்களாக மதித்து அவர்களைப்) பலவந்தமாக அடைவது உங்களுக்கு ஆகுமானது அல்ல! (4: 19 / முதல் பகுதி)

அடுத்து - அன்றைய அரபுக்களிடம் இன்னொரு பழக்கமும் இருந்தது. ஒரு பெண்ணை மஹர் கொடுத்துத் திருமணம் முடித்திருப்பான் கணவன். திருமணத்துக்குப் பின் சில பல அன்பளிப்புகளையும் கொடுத்திருப்பான் கணவன். ஒரு கட்டத்தில் - அவளை அவனுக்கு பிடிக்காமல் போய் விடும். விலகி விட முடிவு செய்வான். அப்படி அவன் தானாக முன் வந்து விலகினால் - மனைவிக்கு இவன் கொடுத்த எதையும் திரும்பப் பெற முடியாது. ஆனால் அந்த மனைவி இத்திருமணத்திலிருந்து தாமாக விலகி விட நாடினால் - அவள் பெற்ற மஹர் மற்றும் அன்பளிப்புகளைத் தன் கணவனிடம் திருப்பிக் கொடுத்து விட வேண்டும்.

இப்போது கணவன் என்ன செய்வான் தெரியுமா?

தானாக மண விலக்கு கோராமல் - தன் மனைவியைத் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டே இருப்பான்! ஒரு கட்டத்தில் தொல்லை தாங்காமல் அந்த மனைவி மண விலக்கு கோருவாள். பெற்ற மஹரையும் அன்பளிப்புகளையும் திருப்பிக் கொடுத்து விடுவாள்!

இந்தக் கேடு கெட்ட பழக்கத்துக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைத்தது திருக்குர்ஆன்!

பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்; (4: 19 / பகுதி 2)

இது தான் அன்றைய பெண்களின் நிலை! இந்த நிலையில் இருந்த ஒரு சமூகத்தை, அதில் இருந்த பெண்களின் நிலையை மாற்றி அவர்களைத் திருக்குர்ஆன் எந்த இடத்தில் கொண்டு வைத்தது தெரியுமா?

நன்மையான காரியங்கள் அனைத்திலும் அவர்களுடன் மிக நெருங்கிய உற்ற நண்பர்களாக நடந்து கொள்ளுங்கள்! (4: 19 / பகுதி 3)

கணவனையும் மனைவியையும் நெருங்கிய நண்பர்கள் என்கிறது திருக்குர்ஆன்! எப்படி நெருங்கி வாழ்வது என்பதற்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுகிறார்கள் அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்கள்!

ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழும்போது - அவர்களுக்கிடையேயான நெருக்கம் குறைவதற்குக் காரணம் என்ன தெரியுமா?

மனைவியின் குறைகள் ஒவ்வொன்றும் கணவனுக்குப் பெரிது பெரிதாகத் தெரியும்போது தான்!

இறைவன் சொல்வது என்ன?

நீங்கள் அவர்களை வெறுத்தால்....? ஒன்றை நீங்கள் வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம். (4: 19 / பகுதி 4)

அன்று -

ஒரு பெண் ஒரு உடமையாகப் பார்க்கப்பட்டாள்! அவள் ஒரு மனுஷியாகக் கூடப் பார்க்கப்படவில்லை! அவளுக்கென்று எந்த ஒரு உரிமையும் இல்லை! விரும்பியவரைத் திருமணம் செய்து கொள்ள முடியாது. விருப்பமில்லாத ஒருவனுடன் வாழ்ந்திட வேண்டிய நிர்ப்பந்தம். அவளிடம் இருக்கும் பொருள் - அது என்னேரமும் பறிக்கப்பட்டு விடலாம்! வன்முறைச் சிந்தனை உடைய ஆண் வர்க்கத்தின் அடிமைப் பொருள் அவள்!

ஆனால் - ஆண் பெண் உறவைப் புனிதமான ஒன்றாக்கி அவர்களை நெருங்கிய நண்பர்களாக வாழ வழி வகை செய்தது திருக்குர்ஆன்!

இந்தத் தலை கீழ் மாற்றத்தை ஒரே ஒரு இறை வசனத்தின் மூலம் திருக்குர் ஆன் எடுத்தியம்பும் அழகை ரசித்துப் படித்துப் பாருங்கள்!


நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை ( இறந்தவனுடைய பொருள்களாக மதித்து அவர்களைப்) பலவந்தமாக அடைவது உங்களுக்கு ஆகுமானது அல்ல! பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்; இன்னும், நன்மையான காரியங்கள் அனைத்திலும் அவர்களுடன் மிக நெருங்கிய உற்ற நண்பர்களாக நடந்து கொள்ளுங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால் - நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம். (4:19)

ஆம்! தலை கீழ் மாற்றம்! ஒரே ஒரு இறை வசனத்தில்!

Comments