வெற்றிக்கு முதல் தேவை – ஒரு இலக்கு!

மனித வாழ்க்கையின் வெற்றிக்கு முதல் தேவை – ஒரு இலக்கு! அதாவது Life Goal!

நாம் எந்த ஊருக்குச் சென்றிட வேண்டும் என்பது முடிவாகாவிட்டால் எல்லாப் பேருந்துகளுமே நமது பேருந்துகள் தான் என்று சொல்வார்கள்!

வாழ்க்கையில் இலக்கு ஒன்றை நிர்ணயித்துக் கொள்பவர்கள் தான் அந்த இலக்கு நோக்கி தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வார்கள்! இலக்கு என்று ஒன்று இருந்தால் தானே – வெற்றி பற்றி நாம் பேசிட முடியும்? இலக்கே இல்லாதவர்களுக்கு ஏது வெற்றி?
இந்த அடிப்படையில் தான் – ஒரு இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கி நம்மைப் பயணிக்க வைக்கின்றது

தொழுகை! அது என்ன இலக்கு?

மரணம் வரை – இறைவனுக்கு அடிபணிந்து வாழ்ந்து, அவனது திருப்தியைப் பெற்று, அவன் வாக்களித்துள்ள

சுவர்க்கத்தை அடைவது தான் நமது இலக்கு!

தொழுகையையும் சுவர்க்கத்தையும் இணைத்துச் சொல்லப்பட்டிருப்பதன் நுணுக்கம் – தொழுகையாளியை ஒரு இலக்கு உடையவனாக ஆக்கிடத்தான்!

இலக்கு ஒன்றைத் தலையில் சுமந்திருப்பவன் – தனது இலக்கு பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பான்!

அதற்கென செய்ய வேண்டுவன பற்றியே அவனது கவனம் இருக்கும்.

அதே போலத்தான் ஐந்து வேளைத் தொழுபவன் – ஒரு வேளை தொழுது விட்டுத் திரும்பினாலும் அடுத்த

வேளை தொழுகை குறித்தே அவனது கவனம் இருக்கும்.

ஒருவனுக்கு எந்த ஒன்றில் ஆர்வம் மிகைத்திருக்கின்றதோ அந்த ஒன்றில் தான் அவனது வாழ்வின் இலக்கும் அமைந்திருக்கும். இலக்கை அடைந்திட உறுதியுடன் செயல் படும்போது அவனது ஆர்வம் சற்றும் குறைந்திடுவதில்லை!

ஒரு இறைநம்பிக்கையாளனின் தொழுகையும் அப்படிப்பட்டது தான். தொழுகையில் அவனது ஆர்வம்

கிஞ்சிற்றும் குறையாது. ஏனெனில் ஆர்வமற்ற தொழுகையை இறைவன் அங்கீகரிப்பதில்லை என்பதை அவன் அறிந்தே வைத்திருக்கின்றான்! (மாவூன் அத்தியாயம் பார்க்க!)

அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவப் பொறுப்பு வழங்கப்பட்ட துவக்க காலத்திலேயே – நபியவர்களுக்கு தொழுகையும் கடமையாக்கப்பட்டு விட்டது என்பதை நாம் அறிவோம்!

நபியவர்களின் வாழ்வின் இலக்கு – இஸ்லாத்தை வெற்றி பெறச் செய்வதே! அதாவது நபியவர்களின் இறுதி மூச்சு வரை அவர்களின் சிந்தனை மற்றும் செயல்பாடுகள் அனைத்துமே – அவர்களின் பொறுப்பை முழுமையாக நிறைவேற்றுவது குறித்துத் தான் சுற்றிச் சுழகும்.

அதே நேரத்தில் – “மரணம் வரும் வரை தொழுகையைக் கடைபிடியுங்கள்!” – என்பது இறை கட்டளை.

இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் – வாழ்வின் இலக்கு (Life Goal) என்பதும்

தொழுகை என்பதும் நமது மரணம் வரை தொடர வேண்டியவை.

இலக்கினை அடையத் துடிப்பவர்கள் உடையவர்கள் கூர்நோக்கு (concentration and mindfulness)

உடையவர்களாகத் திகழ்ந்திட வேண்டும். அதற்கானப் பயிற்சியைத் தொழுகை செவ்வனே வழங்குகிறது.

தொழுகை கவனச் சிதறல்களில் இருந்து (distractions) நம்மைப் பாதுகாக்க வல்லது.

இலக்கு உடையவர்கள் – வீணான செயல்களில் – ஈடுபட மாட்டார்கள். வீணானவற்றில் ஈடுபடுவதற்கு

அவர்களுக்கு ஏது நேரம்? தொழுகையும் – வீணான செயல்களில் மூழ்கி விடாமல் நம்மைப் பாதுகாத்து விடும் ஒரு அரணாகும்!

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள்

தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். இன்னும், அவர்கள் வீணானவற்றை விட்டு விலகியிருப்பார்கள்.(23: 1-3)

இன்ஷா அல்லாஹ் – மேலும் தொழுகைக்கும் வெற்றிக்கும் உள்ள பிணைப்பைப் பற்றி தொடர்ந்து எழுதுவோம்.

சகோதரர்களே! சகோதரிகளே! வாழ்க்கையில் உங்களின் இலக்கு என்ன?

WHAT IS YOUR LIFE GOAL?

Comments