தொடரட்டும் நமது பங்களிப்பு!

வெள்ளம் வடிந்து விடும்! மக்கள் "இயல்பு" வாழ்க்கைக்குத் திரும்பி விடுவர்! நிவாரணப்பணிகளின் "அளவு" குறைந்து விடும்! மக்கள் எளிதில் அனைத்தையும் மறந்து விடுவார்கள்!

ஆனாலும் - பாதிப்புக்குள்ளானவர்கள் உண்மையிலேயே "இயல்பு" வாழ்க்கைக்குத் திரும்பி விடுவது என்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல!

எனவே - சென்னை வெள்ள சூழ்நிலையில் மனம் உவந்து நிவாரணப்பணிகள் மேற்கொண்ட எம் அன்பு நெஞ்சங்கள் தங்கள் மக்கள் நலப் பணிகளை இடை நிறுத்தி விடாமல் மேலும் தொடர்ந்திட வேண்டும் என்பதற்கே இந்தப் பதிவு!

என்ன செய்யலாம்?
நிவாரணப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முன் வருபவர்கள் தங்களுக்குள் சிறு சிறு குழுக்களை

ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்! ஒவ்வொரு குழுவும் தங்களுக்கென்று ஒரு பகுதியைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வீடாகச் சென்று அவர்களுடன் அமர்ந்து ஆறுதலாகப் பேசிட வேண்டும்! அன்பைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்! நம் இல்லத்துப் பெண்களையும் அழைத்துக் கொண்டு செல்தல் தனிச் சிறப்பு!

பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன தேவைகள் (needs) இருக்கின்றன என்பதை அவர்களைக் கேட்காமலேயே குறிப்பறிந்து புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்! அவர்களின் தேவைகள் நிறைவேறும் வரை நம்மால் ஆன உதவிகளைத் தொடர்ந்திட வேண்டும்!

உணவுத் தேவை; உடைத் தேவை; மருந்துகளின் தேவை; வீடு பழுதுபார்க்கும் அவசியம் - இவற்றுக்கு அப்பாலும் நமது பங்களிப்பை விரிவு படுத்திட வேண்டிய அவசியம் இருக்கிறது.

சிலர் சேர்த்து வைத்த சொத்துக்களையே இழந்து நிற்பார்கள். அத்தகையவர்களுக்கு நம்மால் இயன்றவரை நமது பொது நிதியிலிருந்து தாராளமாக செலவு செய்திடலாம்!

சிலர் பண உதவியை ஏற்க மறுப்பார்கள்! ஆனால் - கடனாகப் பெற்றுக்கொள்ள முன் வருவார்கள்!

வட்டியில்லாக் கடனை நாமே ஏற்பாடு செய்து தரலாம்! இன்றைய சூழலில் கொடும் வட்டியிலிருந்து அவர்களைக் காப்பது கூட பேருதவி தான்!

பண உதவி என்பது அவசியம் தான்! ஆனாலும் பணம் மட்டுமே உதவி என்று ஆகி விடாது! நமக்கு ஓடோடி வந்து உதவி செய்திட நமக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது கூட மிகப்பெரிய உளவியல் பலம் ஆகும்!

சுருக்கமாகச் சொல்வதென்றால் - நமது பங்களிப்பு என்பது குறுகியது அன்று! அது அகிலம் தழுவியது! அது தற்காலிகமானதும் அன்று! அது உலகம் அழியும் வரைத் தொடரக்கூடியது!

இது அகிலத்தாருக்கெல்லாம் அருட்கொடை அண்ணல் நபிகளாரின் முன்மாதிரியைப் பின்பற்ற விரும்புகின்ற

நம் அனைவர் மீதும் நீங்காப் பொறுப்பு ஆகும்!

இதனை நிறைவேற்றிட நமது சொந்தப் பிரச்னைகளை சற்றெ ஒதுக்கி வைத்திட நேர்ந்தாலும் சரியே! ஏனெனில் - நீங்கள் உங்கள் இறைவனுக்கு உதவி செய்தால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வான் என்பது இறை வாக்கு!

வாருங்கள்! தமிழக முஸ்லிம்களாகிய நாம் அகில உலக முஸ்லிம்களுக்கே முன்மாதிரியாக இருப்போம்!

சென்னை வெள்ளத்தின் போது முஸ்லிம்கள் நடந்து கொண்டது உலக முஸ்லிம்களுக்கெல்லாம் ஒரு அரிய பாடம் என்றால் அது மிகை ஆகாது!

தொடரட்டும் நமது பங்களிப்பு!

Comments