அறிவில்லாமல் இணை வைத்தால் மன்னிப்பு உண்டா?

ஒருவருக்கு அறிவே இல்லாத நிலையில், அவர் ஷிர்க் எனும் இணை வைத்தலில் ஈடுபட்டு, அதே நிலையில் மரணித்தும் விடுகிறார் எனில், இறைவனிடத்தில் இவருக்குப்  பாவ மன்னிப்பு உண்டா?

இது குறித்து பெரும்பாலான அறிஞர்கள் சொல்வதென்ன?


நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர,  எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (4:48)

இந்த இறை வசனத்தின் அடிப்படையில் - ஷிர்க் எனும் இணை வைத்தலைத் தவிர மற்ற பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு மட்டுமே  வாய்ப்பிருக்கிறது என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாக இருக்கிறது.

ஏனெனில், பொதுவாகவே மனிதனுக்கு சிந்திக்கும் ஆற்றலும் பகுத்தறிகின்ற அறிவும் கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட அறிவை மிகச் சரியாகப் பயன்படுத்த வேண்டியது மனிதனின் கடமையும் பொறுப்பும் (INTELLECTUAL RESPONSIBILITY).

மனித இயல்பிலேயே அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவு - இணை வைத்தலைத் தவறு என்றே சொல்லும். அறிவைப் பயன்படுத்தத் தவறி “மன்னிக்கப்பட முடியாத” பாவம் ஒன்றில் ஈடுபட்டு விட்டால் - அவன் இறைவனுக்கு பதில் சொல்லித்தான்  ஆக வேண்டும்.

எனவே - இறைவன் – இணை வைத்தல் எனும் பாவத்துக்கு தண்டனை வழங்கவே செய்வான்  என்பதே இந்த அறிஞர்களின் கருத்து.

ஆனால் இமாம் கஸ்ஸாலி அவர்கள் இந்த விஷயத்தில் கருத்து வேறு படுகிறார்.

“அறிந்து கொண்டே” இணைவைப்பில் ஈடுபட்டால்  அதற்கு மன்னிப்பே கிடையாது என்பது உண்மை தான். ஆனால் – தனக்கு அது பற்றிய அறிவு இல்லாத நிலையில் ஒருவர் இணை வைப்பில் ஈடுபடுவதற்கு வாய்ப்பே இல்லை என்று எப்படி சொல்ல முடியும்? பின் வரும் வசனத்தை ஊன்றிப் படியுங்கள்:

நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (2:22)

அறிந்து கொண்ட நிலையில் - இணை வைக்காதீர்கள் என்று தான் இவ்வசனம் சொல்கிறது.

அப்படியானால் - அறிவில்லாமல் ஷிர்க் வைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதைத்தான் இவ்வசனம் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது.

அப்படியானால் - அறியாமல் ஒருவர் ஷிர்க் வைத்து, அந்த நிலையிலேயே அவர் இறந்தும் போய்  விட்டால், அவரை இறைவன் குற்றம் பிடிப்பான் என்று சொல்வது, மகத்துவம் மிக்க  இறைவனின் இரக்கப் பண்பிற்கும், நியாய உணர்வுக்கும் பொருத்தமாகத் தெரியவில்லை என்றே இமாம் கஸ்ஸாலி அவர்கள் கருதுகிறார்கள்.

அதுவே அறிவுக்கும் பொருத்தமாக இருக்கிறது. இறைவனின் கருணைக்கும் பொருத்தமாக இருக்கிறது என்று சுட்டிக் காட்டுகிறார் அறிஞர் ஹம்ஸா யூசுப் அவர்கள்.

இறைவனின் கருணை எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறது என்கிறது இறை மறை வசனம் ஒன்று:

“எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்!” (40: 7)

இது வானவர்கள் கேட்கும் துஆவாக திருமறையில் இடம்பெற்றுள்ள வசனமாகும்!

ஆனால் மக்கள் அறியாதவர்களாக இணை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு இறைத்தூதர் வருகிறார். இணைவைத்தல் அறிவுக்குப் பொருத்தமானது அல்ல என்று உணர்த்துகிறார். எனினும் அவர்கள் இணை வைப்பில் “அறிந்து கொண்டே” தொடர்கிறார்கள் எனில் அவர்களின் நிலையே வேறு!

ஆனால் – இறைத்தூதர் ஒருவரின் வருகையை அறியாத நிலையில், அறிவில்லாமல் இணை வைத்தால் – அவர்களை இறைவன் எவ்வாறு தண்டனைக்கு உட்படுத்துவான் என்ற நியாயமான கேள்விக்கு இமாம் கஸ்ஸாலி அவர்களின் கருத்தே சரியான பதிலாக இருக்க் முடியும்!

(நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை. (17: 15)

அல்லாஹ் மிக அறிந்தவன்!

எனினும் - இதில் நமக்கு மிக முக்கியமான ஒரு படிப்பினை இருக்கிறது:

இணை வைக்கும் ஒருவரை நாம் கண்டால் - நம் மனத்தில் கருணை தான் வெளிப்பட வேண்டும். இவர் நரகத்துக்குத் தான் போவார் என்று முத்திரை குத்தும் மனப்பான்மை நமக்குக் கூடாது!  ஒருவரை - இவர் நரகத்துக்குத் தான் போவார் என்று முத்திரை குத்த (TO JUDGE) நாம் யார்?

Comments