தொழுகையும் இறை சிந்தனையும்!

தொழுகை இறை சிந்தனையோடு இணைக்கப்பட்டுள்ளது.

என்னை நினைவு கூறும் பொருட்டு - தொழுகையை நிலை நிறுத்துங்கள்" (20:14)

தொழுகையின் எந்த நிலையானாலும் - நின்றாலும், குனிந்து ருகூஉ செய்தாலும், சஜ்தாவில் இருக்கும்போதும் அல்லது அதற்குப் பின்னரும், குர் ஆனை ஓதும்போதும், மற்ற தஸ்பீஹ்களை ஓதும்போதும் - நாம் செய்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான் - அது - இறை சிந்தனையே!"

ஆக இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் தொழுகையும் இறை சிந்தனையும் பின்னிப் பிணைந்தவை என்பதைத் தான்.

ஆனால் இறை சிந்தனை என்பது நமது தொழுகையோடு முடிந்து விடுகின்ற ஒன்றா?



பின் வரும் இறை வசனத்தை கூர்ந்து நோக்குங்கள்:

பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும்,  பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். (62:10)

தொழுகையை முடித்து விட்டு, பொருளீட்டச் செல்லுங்கள் என்று நம்மை ஊக்கப் படுத்தும் இறைவன்,  அதே நேரத்தில் பொருளீட்டும் சமயங்களில் தன்னை மறந்து விடாமல் நினைவில் வையுங்கள் என்றும் நினைவு படுத்துகிறான். அதுவும் அதிகம் அதிகமாக நினைவில் வையுங்கள் என்று!

இதிலிருந்து என்ன தெரிகிறது?

இறை சிந்தனை என்பது தொழுகையோடு முடிந்து விடுவதல்ல என்பதும் புரிகிறது! அதுவே வெற்றிக்கான வழி என்பதும் புரிகிறது!

ஆனால்.....

மனிதன் மறதியாளன் ஆயிற்றே! மனிதன் இறைவனை   மறந்தால் என்ன நடக்கும்? தன்னை அறியாமலேயே அவன் பாவம் ஒன்றில் வீழ்ந்து விட வாய்ப்பு இருக்கின்றது! இறைவனை மறந்த நிலையில் தான் பாவ காரியங்கள் நடந்து விடுகின்றன.

இந்த இறை வசனத்தையும் சற்று ஆழமாக சிந்தியுங்கள்:

தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள். (3:135)

ஒருவன் பாவ காரியங்களில் ஈடுபட்டு விட்டால் என்னவாகும்? அத்தோடு அவனுக்கு இறைவனின் அருட்கொடைகள் தடுக்கப்பட்டு விடும்!

அருட்கொடைகள் தடுக்கப்பட்டு விட்டால் அவன் வெற்றி பெறுவது எங்ஙனம்?

தடைபட்டிருக்கும் அருட்கொடைகளை மீண்டும் பெற்றுக்கொள்வது எப்படி?

அது பாவ மன்னிப்பின் மூலம் தான்!

எப்போது ஒருவன் பாவ மன்னிப்பின் பக்கம் திரும்புவான்?

இறைவனை நினைத்து விடும்போது!!

இறை சிந்தனைக்கும் வெற்றிக்கும் உள்ள உறவு என்பது இது தான்!

ஆம்! இறை சிந்தனை வெற்றி தரும்!

Comments