பிரச்னை அழைப்பவர்களிடத்திலா? அழைக்கப்படுபவர்களிடத்திலா?

எனக்குக் கருத்துத் தெரிந்த காலத்திலிருந்து - இன்று வரை - எந்த மாற்றமும் இல்லாத நமது சமூகத்தின் நிலைபாடுகளுள் ஒன்று தான் இது: 

முஸ்லிம்களில் ஐந்து வேளை தொழுபவர்கள் 10 சதவிகிதம். தொழாதவர்கள் 90 சதவிகிதம். ஏன் இந்த நிலை?


ஐந்து வேளையும் தொழுதிட வேண்டியது முஸ்லிம்களின் கட்டாயக் கடமை என்பது முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் கூடத் தெரியுமே! இருந்தும் ஏன் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் தொழுவதில்லை?

எனக்குள் நான் அடிக்கடி கேட்டுக் கொள்ளும் கேள்வி ஒன்று உண்டு: தொழுகை எனும் "பொருளை" (product) முஸ்லிம்களிடத்திலேயே நம்மால் விற்பனை (marketing) செய்ய முடியவில்லையே? ஏன்?

தொழுகைக்கு அழைப்பவர்களைக் கண்டால் புதிய தலைமுறையினர் தப்பித்தால் போதும் என்று ஏன் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள்? பிரச்னை அழைப்பவர்களிடத்தில் இருக்கிறதா? அழைக்கப்படுபவர்களிடத்தில் இருக்கிறதா?

எமது ஆய்வில் மூன்று காரணங்களைச் சொல்வோம்.

ஒன்று: நமது நம்பிக்கையில் உறுதியின்மை. நம்மில் பலருக்கும் நமது நம்பிக்கைகள் குறித்தும், நமது வழிபாடுகள் குறித்தும், நமது மார்க்கச் சட்டங்கள் குறித்தும் பல சந்தேகங்கள் இருக்கின்றன. உறுதியற்ற நம்பிக்கை, தொழுகைக்கு நம்மைத் தூண்டுவதில்லை!

இரண்டு: தொழுகையாளிகளின் முன்னுக்குப் பின் முரணான செயல்பாடுகள். தொழுபவர்கள் முன்மாதிரி முஸ்லிம்களாக விளங்கிடவில்லை. அவர்களில் பலர் வேடதாரிகளாக விளங்குகிறார்கள். (தொழாதவர்களில் பலர் நல்லவர்களாக விளங்குவதும் நிதர்சனமான உண்மையே!). உண்மையைச் சொல்லப்போனால் தொழுகை நம்மிடையே ஒரு வெற்றுச் சடங்காகப் போய் விட்டிருக்கின்றது! அது நமக்குள் எந்த ஒரு நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்திடவில்லை! தொழுகையாளிகளில் பலர் மக்களின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இது ஒரு மவுனமான வெறுப்பு!

மூன்று: புதிய தலைமுறையினரிடம் கலந்துரையாடுவது எப்படி என்பதை இன்னும் சரிவரக் கற்றுக் கொள்ளாமை. அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைப்பது போல, புளித்துப் போன பேச்சாகப் போய் விட்டது நமது அழைப்பாளர்களின் பேச்சு. நமது சொல்லைக் கேட்பவரின் மனநிலையைக்கூடப் புரிந்து கொள்ளாமல், அவர்களின் சந்தேகங்களைப் புரிந்து கொள்ளாமல், பேசுவது என் கடமை என்று பேசுவதால் மட்டும் மாற்றம் வந்து விடாது. இது அலைவரிசைப் பிரச்னை!

மற்றவர்களை "மாற்றுவது" என்பது நம் கைகளில் இல்லை தான்! ஆனால் நம் வேலையை நாம் சரிவரச் செய்தோமா? செய்கிறோமா?

Comments