ஷரீஅத் பாடங்கள் - பகுதி 1

முன்னுரை:

ஷரீஅத் மற்றும் ஃபிக்ஹ் குறித்த அடிப்படைப் பாடங்களை எளிய முறையில் தொடர்ந்து எழுதிட நாடியுள்ளேன். நண்பர்களின் துஆ தேவை!

அடிப்படையிலிருந்து என்பதாலும் எளிய முறையில் என்பதாலும் - சற்று மெதுவாகவே தொடர் நகரலாம். சுற்றி வளைத்து எழுதுவது போல் தோன்றலாம். பொறுமை தேவை!

ஷரீஅத் பாடம் - 001

1 சொல்லும் பொருளும்

நீங்கள் உங்கள் நண்பர் ஒருவருடன் உரையாடுகிறீர்கள். அந்த உரையாடலில் நீங்கள் ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறீர்கள். அந்த சொல்லுக்கு உங்களிடம் ஒரு பொருள் இருக்கும். ஆனால் உங்கள் நண்பரிடம் அந்த சொல்லுக்கு அதே பொருள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் அந்தச் சொல்லுக்கு வேறொரு பொருளை வைத்திருப்பார்.

இந்த நிலையிலேயே உரையாடலைத் தொடர்ந்தால் கருத்துப் பரிமாற்றம் நடக்காது. உரையாடல் பாதியில் முறிந்து விடும். COMMUNICATION BREAKDOWN!

இஸ்லாம் என்றால் என்ன என்று ஒரு பத்து பேரிடம் கேட்டுப்பாருங்கள். ஷரீஅத் என்றால் என்ன என்று அது போன்று கேட்டுப் பாருங்கள். செக்யூலரிசம் என்றால் என்ன என்று கேட்டுப்பாருங்கள். ஆளுக்கு ஒரு பதிலைச் சொல்வார்கள்.

அப்படியானால் உரையாடலை எப்படித் தொடர்வது?

உங்களின் உரையாடலில் நீங்கள் ஒரு சொல்லைப் பயன்படுத்தும்போது, அதற்கு நீங்கள் என்ன பொருள் கொள்கிறீர்கள் என்பதையும் சேர்த்தே சொல்லி விடுங்கள். 

அது போல உங்கள் நண்பர் ஒரு சொல்லைப் பயன்படுத்தினால் அதற்கு அவர் என்ன பொருள் கொள்கிறார் என்பதைக் கேட்டுத் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.

எதற்காக இதனை இங்கே சொல்கிறோம் என்றால் - ஷரீஅத், ஃபிக்ஹ் போன்ற சொற்களை பலரும் பல விதமாகப் பயன்படுத்துகிறார்கள். எனவே இது போன்ற முக்கியமான இஸ்லாமியக் கலைச்சொற்களை நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கேள்வி: அப்படியானால் ஒரு சொல்லுக்கு ஏன் பல பொருள் வருகின்றது?

ஷரீஅத் பாடம்- 002

2 ஒரு சொல்லுக்கு ஏன் பல பொருள்கள் வருகின்றன?

அறிந்து கொள்வோம்:

ஒரு சொல்லுக்கு அகராதியில் கூட பல பொருள்கள் கொடுக்கப்படுவது உண்டு! ஒரு சொல் ஒரு மொழியில் தோற்றம் பெறும்போது அதற்கு ஒரு பொருள் இருந்திருக்கும். அதே நேரத்தில் – பிற்காலத்தில் அந்தச் சொல்லை மக்கள் வேறு ஒரு பொருளில் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். அது போலவே ஒரு சொல்லின் பொருள் காலத்துக்குக் காலம் கூட மாறுபடலாம்.

நாற்றம் என்றால் முற்காலத்தில் மணம் என்று பொருள்!

அது போலவே ஒரு சொல்லின் பொருள் சமயத்துக்கு சமயம் வேறுபடும். தொழுகை நோன்பு போன்ற சொற்களின் பொருள் சமயத்துக்கு சமயம் மாறுபடும். ஒரே சமயத்தைச் சேர்ந்த இரு பிரிவார் கூட ஒரே சொல்லுக்கு வேறு வேறு பொருள் கொடுப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு.

உதாரணம்: சுன்னத் வல் ஜமாஅத்

அது போலவே நவீன கோட்பாட்டாளர்கள் ஒரு சொல்லுக்கு அவரவர் கொள்கை கோட்பாடுகளுக்கேற்ப ஒரு பொருளைக் கொடுத்திருப்பார்கள்.

உதாரணம்: செக்யூலரிஸம்

இவற்றையெல்லாம் நாம் ஏன் இங்கே குறிப்பிடுகிறோம் என்றால் - ஷரீஅத் மற்றும் ஃபிக்ஹ் - மற்றும் இவை தொடர்பான ஏனைய சொற்களைப் புரிந்து கொள்ள 1)அரபி மொழியில் ஒரு சொல்லின் பொருள் என்ன என்பதையும் 2)நமது மார்க்கம் அந்த சொல்லுக்கு என்ன வரைவிலக்கணம் தருகிறது என்பதையும் 3) இஸ்லாமிய அறிஞர்கள் அதே சொல்லுக்கு என்ன விளக்கம் அளிக்கிறார்கள் என்பதையும் ஒரு சேரப் பார்த்து அறிந்து கொள்வது மிக அவசியம் என்பதை சுட்டிக்காட்டிடத்தான்! .


ஷரீஅத் பாடம்- 003

3 ஷரீஅத் என்ற சொல்லின் பூர்விகம்

ஷரீஅத் அல்லது ஷரீஆ என்பது பரந்து விரிந்த, இஸ்லாத்தின் அனைத்துத் துறைகளையும் தழுவி நிற்கின்ற ஆழமான பொருளைக் கொண்ட ஒரு சொல். இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் – இச்சொல்லின் பூர்விகம் என்ன என்பதைப் பாரத்திட வேண்டும்.

ஷரீஅத் என்ற சொல் எங்கிருந்து (origin) வந்தது ?

பாலைவனத்தில் மழை என்பது அரிதினும் அரிதாகவே பொழியும். அப்படிப்பொழிகின்ற மழை நீரை முடிந்த அளவு வீணாகி விடாமல் பயன்படுத்திக் கொள்ள அம்மக்கள் என்ன செய்வார்கள் என்றால் – பல்வேறு இடங்களில் அகலமான ஆழமான குட்டைகளை முதலில் உருவாக்குவார்களாம்.

பின்னர் அதிலே மழை நீரை சேமிப்பதற்காக, அந்த குட்டையைச் சுற்றி பல அகலமான நீரோடைகளை உருவாக்குவார்களாம். அதன் வாட்டம் எப்படி இருக்கும் எனில் ஓடைகளில் பொழிகின்ற மழை நீர் முழுவதும் அந்த அகலமான குட்டையில் வந்து சேர்ந்து விடுமாம்.

பாலைவனத்தில் பயணம் செய்வோர் அப்படிப்பட்ட ஓடைகளில் ஏதாவது ஒன்றைக் கண்டுவிட்டால் ஒட்டகத்தை அதன் வழியே ஓட்டிச் செல்வார்களாம். நீரால் நிரம்பி வழியும் அந்த நீர்த்தேக்கத்திலிருந்து தேவையான அளவுக்கு அவர்கள் தண்ணீரைப் பெற்றுக் கொள்வார்களாம்.

இத்தகைய ஓடைகளுக்கு அவர்கள் வைத்த பெயர் தான் ஷரீஅத் என்பது!

அன்றைய அரபுலக மக்கள் நீரோடைகளுக்கு வைத்திருந்த பெயரான ஷரீஅத் என்ற சொல்லையே அல்லாஹ் – தன் மார்க்க நெறிமுறைகளைக் குறித்திடும் சொல்லாக தேர்வு செய்து கொண்டான். ஏன் தெரியுமா?

அறிஞர்  முஹம்மத் அஸத் சொல்வதைக் கேட்போம்:

It is to be borne in mind that the literal meaning of the term shari’ah is “the way to a watering-place”, and since water is indispensable for all organic life, this term has in time come to denote a “system of laws”, both moral and practical, which shows man the way towards spiritual fulfillment and social welfare; hence, “religious law” in the widest sense of the term.

ஷரீஆ எனும் சொல் தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கிச் செல்லும் பாதை என்பதையே குறிக்கிறது என்பதை கவனத்தில் வைத்திட வேண்டும்; எப்படி தண்ணீர் என்பது உயிரினங்கள் வாழ்ந்திட இன்றியமையாத அடிப்படைத் தேவையாக இருக்கிறதோ, அது போலவே மனிதனின் ஆன்மிக உயர்வுக்காகவும், சமூக மேம்பாட்டுக்காகவும் மிகச் சிறந்ததொரு “வழியை” சுட்டிக் காட்டி, மனிதர்களின் அகத்தையும் புறத்தையும் நெறிப்படுத்தும் “சட்டத் தொகுப்பைக்” குறித்திட அதே - ஷரீஅத் - என்ற சொல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது!

எனவே ஷரீஅத் எனும் மார்க்க சட்டங்களின் தொகுப்பு என்பது பரந்து விரிந்த, இஸ்லாத்தின் அனைத்துத் துறைகளையும் தழுவி நிற்கின்ற ஆழமான பொருளைக் கொண்ட ஒரு சொல்லாகும்.

ஆம்! பாலைவனத்து நீரோடை - மனிதனின் தாகத்தைத் தீர்க்க வழி காட்டும்! மனித சமூகத்துக்கு இறைவன் வழங்கிய ஷரீஅத் – மனிதனின் ஆன்மிக தாகத்துக்கும் வழி சொல்லும்; மனிதனின் உலகியல் பிரச்னைகளைத் தீர்த்திடவும் வழி காட்டும்!

இதற்குப் பெயர் தான் ஷரீஅத்!

இது தான் ஷரீஅத் என்ற சொல்லின் பூர்விகம்!


ஷரீஅத் பாடம்- 004

4 ஷரீஅத்  என்பதில் “பயணம்” ஒன்று இருக்கிறது!

பனீ இஸ்ராயீல் சமூக வரலாற்றிலிருந்து  ஒரு நிகழ்வு……

(நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம்.(7:163)

முதலில் அந்த நிகழ்வு  என்ன என்று பார்ப்போம்: இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர் அய்லா எனும் செங்கடலோரத்து  கடற்கரை கிராமம் ஆகும். சனிக்கிழமையைக் கண்ணியப்படுத்த  வேண்டும்  என்று யூதர்களிடம் அல்லாஹ் உறுதி மொழி வாங்கியிருந்தான். அந்த நாளில் மீன்பிடிக்கச்  செல்வது  அவர்களுக்குத்  தடை செய்யப்பட்டிருந்தது.  

ஆனால்  அந்த நாளில் தான் அவர்களிடம் மீன்கள் கூட்டம் கூட்டமாக நீரின் மேல்மட்டத்துக்கு வந்தன. இதனைக் குறித்திட  --  ஷுர்ர-அன் என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதற்கு “தலைகளை வெளியாக்கிக் கொண்டு வந்தன” என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதனை நாம் இன்னும் ஆழமாகப் பார்த்திட  வேண்டியுள்ளது! ஏனெனில் இதில் வியப்பான விஷயம் ஒன்று உள்ளது.

அதாவது ஷுர்ர-அன் என்ற சொல்லின் மூலச்சொல்லும் ஷரீஅத் எனும் சொல்லின் மூலச்சொல்லும் ஒன்றே தான்.  ஷரஅ எனும் மூலச்சொல்லிலிருந்தே இந்த  ஷுர்ர-அன் எனும் பதமும் எடுத்தாளப்பட்டுள்ளது.

கேள்வி என்னவெனில்  - மீன்கள் வெளியே தலைகாட்டிக்கொண்டு வந்தன என்பதை குறித்திட ஷுர்ரஅன் என்ற சொல் எதற்காக பயன்படுத்தப்பட்டது?

இதற்கான விளக்கம்  தஃப்ஸீர் இப்னு கஃதீரில் காணக் கிடைக்கிறது:

They began using deceitful means to avoid honoring the Sabbath by placing nets, ropes, and artificial pools of water for the purpose of fishing before the Sabbath. When the fish came in abundance, on Saturday as usual, they were caught in the ropes and nets for the rest of Saturday. During the night, the Jews collected the fish after the Sabbath ended.  (Tafsir ibn Katheer)

மீன் பிடிப்பதற்குத் தடை  செய்யப்பட்ட சனிக்கிழமை  அன்று  மீன்கள்  தாமாகவே மேல்  மட்டத்துக்கு கூட்டம்  கூட்டமாக  வந்ததாலும்,  சனிக்கிழமை  அல்லாத வேறு நாட்களில் அவை அவ்வாறு வருவதில்லை என்பதாலும், யூதர்கள் தந்திரம் செய்தார்கள்.

மேல்மட்டத்துக்குத் தாமாகவே வருகின்ற  அந்த மீன்கள்  வந்து விழுவதற்காக, வலைகளையும், கயிறுகளையும்,  செயற்கையான  (ஓடைகளையும்), நீர்க்  குட்டைகளையும்  சனிக்கிழமைக்கு முன்னரேயே ஏற்பாடு செய்து  வைத்துவிடுவார்களாம்.

சனிக்கிழமை அன்று மேலேறி வருகின்ற  அந்த மீன்கள் அந்தக்  குட்டைக்கு வந்து வலையிலும்  கயிறுகளிலும் சிக்கிக்கொண்டு  விடுமாம்.  சனிக்கிழமை முடிந்து  இரவு வந்ததும்  யூதர்கள்  அந்த மீன்களை வந்து  பிடித்து  எடுத்துச் சென்று விடுவார்களாம்!  .

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில் -
மழைநீரை சேமிக்க பாலைவனத்தில் உருவாக்கப்பட்ட ஓடைக்கும் ஷரீஅத் என்று பெயர்.

அது போலவே யூதர்கள் மீன்பிடிக்கக்கூடாத  நாளில்  வருகின்ற மீன்களைப் பிடிப்பதற்காக அவர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட  நீர்க்குட்டைகளை நோக்கி  நீந்தி வருகின்ற மீன்களின் “பயணத்தைக்” குறித்திடப் பயன்  படுத்தப்பட்ட  சொல்லும் -  ஷுர்ரஅன்!

வியப்பாக இல்லை?!

ஆமாம்! ஷரீஅத்  என்பதில் “பயணம்” ஒன்று இருக்கிறது!

குர்ஆன் வசனங்களைக் கொண்டு இதனை நிறுவுவோம்.

***

ஷரீஅத் பாடம்- 005


5 வாழ்க்கைப் பயணம்!

திருமறையிலே - ஷரீஅத் எனும் சொல், அதன் மூலச்சொல்லான ‘ஷரஅ’ எனும் சொல் மற்றும் இதன் கிளைச்சொற்கள் – மொத்தம் ஐந்து இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளன.

திருமறை வசனங்களுக்குச் செல்லுமுன் இச்சொல்லுக்கு ஆங்கில அகராதியில் என்ன பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை முதலில் பார்த்து விடுவோம்:

SHA- RA – ‘A:

To go; enter; to begin; start; commence; to introduce; enact; prescribe; make laws; to legislate

SHAREE’AH:

Water hole; drinking place; approach to a water hole; the revealed, or canonical law of Islam

அகராதியில் ஷரீஅத்தின் மூலச்சொல்லான ‘ஷரஅ’ எனும் வினைச்சொல்லுக்கு - செல்தல், நுழைதல், துவக்குதல், ஆரம்பித்தல், அறிமுகம் செய்தல், சட்டம் வகுத்தல் – ஆகிய பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்க.

அது போல ஷரீஅத் எனும் சொல்லுக்கு – நீர்க் குட்டை, நீர் அருந்தும் இடம், நீர்க்குட்டையை நோக்கிச் செல்லுதல், இறக்கியருளப்பட்ட இஸ்லாமிய சட்டங்கள் ஆகிய பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளதையும் கவனத்தில் கொள்க.

இப்போது இறைவசனங்களுக்குச் செல்வோம். அந்த ஐந்து திருமறை வசனங்கள் இதோ:

42:13 / 42:21 / 7:163 / 5:48 / 45:18

முழுமையாக இவ்வசனங்களைப் படித்திட திருமறையை அணுகவும்.

இங்கே அவைகளை சுருக்கமாக மட்டும் பார்ப்போம்.

நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்; (42:13)

இதில் வரும் - ஷரஅ லகும் மினத் தீனி - என்ற அரபி மூலத்துக்கு “உங்களுக்கு அவன் மார்க்கமாக்கி இருக்கின்றான்” என்று மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் – “அவன் (இறைவன்) தனது மார்க்கத்திலிருந்து உங்களுக்காக ஒரு பாதை அமைத்துத் தந்திருக்கின்றான்” என்று மொழியாக்கம் செய்வது தான் அரபி மூலத்துக்கு நெருக்கமானது.

அதாவது தீன் என்பது மார்க்கத்தைக் குறிக்கிறது; ஷரஅ என்பது பாதை அமைத்துத் தருவதைக் குறிக்கிறது.

அடுத்து - இன்னொரு வசனம்:

அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(த் தெய்வங்)கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? (42:21)

இதில் வரும் ‘ஷரஊ’ எனும் சொல் ‘ஷரஅ’ என்பதன் பன்மையாகும். இதற்கு “பாதை அமைத்துத் தரக்கூடியவர்கள்” என்று பொருள் தரலாம்.

இங்கேயும் - இறைவனின் மார்க்கத்திலிருந்து அவர்களுக்கான ஒரு பாதையை அமைத்துத் தருபவர்கள் இறைவனன்றி வேறும் யாரும் இருக்கின்றார்களா என்ன?” என்று மொழியாக்கம் செய்வது அரபி மூலத்துக்கு நெருக்கமானதாகும்.

அடுத்து கவனியுங்கள்:

உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்; (5:48)

இங்கே ஷிர்அதன் என்ற சொல் வருகிறது; இதனை மார்க்கம் என்று மொழி பெயர்க்கிறார்கள். ஆனால் மார்க்கம் என்பதைக் குறித்திட “தீன்” என்ற சொல் இருப்பதனால் “ஷிர்அத்” என்பதற்கு பாதை அல்லது வழி என்று மொழிபெயர்ப்பதே சரியாகும்.

தஃப்ஸீர் இப்னுகஃதீரில் இதற்கு நமக்கு மேலதிகத் தகவல் காணக் கிடைக்கிறது:

“இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் "ஷிர்அத்" என்பது பாதையையும் "மின்ஹாஜ்" என்பது அறவழியையும் குறிக்கும் என்று கூறினார்கள். ஷிர்அத் அல்லது ஷரீஅத் என்பதற்கு "ஒன்றைச் சென்றடைவதற்கான ஆரம்பம்" என்பதே சொற்பொருளாகும். இதனால் தான் ஒன்றைத் தொடங்குவதற்கு "ஷரஅ" என்பர். அவ்வாறே நீர் நிலையை அடையும் பாதைக்கு "ஷரீஅத்" என்பர்."

இறுதியாக இன்னொரு வசனம்:

இதன் பின்னர் உம்மை ஷரீஅத்தில் ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக; அன்றியும், அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர். (45:18)

“ஃதும்ம ஜஅல்னாக ‘அலா ஷரீஅதின் மினல் அம்ரி ஃபத்தபிஃஹா” – என்பது இவ்வசனத்தின் முதல் பகுதியின் அரபி மூலம்.

இவ்வசனத்தில் தான் ஷரீஅத் என்ற சொல் அப்படியே பயன்படுத்தப் பட்டுள்ளது.

இங்கும் ஷரீஅத் என்பதை பாதை என்று வைத்துக் கொண்டால் “ஃபத்தபிஃஹா” என்பதை “ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக” என்றும் பொருள் கொண்டால் எல்லாமே பொருந்தி வருவதை கவனிக்கலாம்.

பாதையைப் பின் பற்றிச் செல்தல் என்றால் என்ன? அது ஒரு பயணம் தானே? அதுவும் அதன் முழுமையான பொருளில்!

Yes, it is a journey in the fullest sense!

இந்தப் பயணத்தின் துவக்கம் என்ன? இந்தப் பயணத்தின் முடிவு என்ன? இன்ஷா அல்லாஹ் அறிவோம்.

Comments