முழு உலகமும் வசப்படும்! முத்தான மூன்று கலைகள் இருந்தால்!

Grammar - என்றால் இலக்கணம் என்று நமக்குத் தெரியும். இலக்கணம் பிறழாமல் பேசுவதும் எழுதுவதும் ஒரு கலை!

Logic - என்றால் தர்க்கம் என்று பொருள். அதாவது பகுத்தறிவு ரீதியாக ஒன்றை ஆய்வுக்கு உட்படுத்தி அறிவுக்குப் பொருத்தமானதையும், பொருத்தமற்றதையும் பிரித்து அடையாளம் காட்டும் கலை இது.

Rhetoric - என்றால் சொல்லாட்சி என்று பொருள்.  அதாவது மிகச் சரியான சொற்களைத் தேர்வு செய்து அவைகளைத் துல்லியமாகப் பயன்படுத்தி மக்களைக் கவர்ந்திழுக்கும் கலை இது.

இந்த மூன்று கலைகளையும் (trivium) மனித சமூகத்தின் சக்தி மிக்க கருவிகள்  (powerful tools) என்று குறிப்பிடுகிறார் ஸைத்தூனா கல்லூரியின் நிறுவனர்களில் ஒருவரான அறிஞர் ஹம்ஸா யூசுஃப்.


ஸைத்தூனா கல்லூரி மாணவர்களுக்கு முன்னால் இதனை அவர் குறிப்பிட்டு வலியுறுத்திப் பேசும்போது, "இந்த முத்தான மூன்று கலைகளையும் நீங்கள் கைவரப் பெற்றுக் கொண்டால், நீங்கள் உலகின் வலிமை மிக்க சக்தியாக (formidable force ) மாறுவீர்கள் என்றும் ஆர்வமூட்டிப் பேசினார் அவர். நான்கு வருட பட்டப்படிப்பில் இவைகளை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள் என்றும், இந்த மூன்றையும் வைத்துக் கொண்டு, ஒருவர் இந்த உலகத்தையே அசைத்துக் காட்ட முடியும் (you can move the world) என்றும் அவர் குறிப்பிட்டார்.  

அவர் உதாரணம் காட்டத் தவறவும் இல்லை:

1  டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் - இந்த மூன்று கலைகளைளையும் வைத்துக்கொண்டு ஒரு சமூகம் முழுவதையுமே அசைத்துக் காட்டியவர் அவர் (moved a whole nation)

2  மால்கம் X அவர்களிடமும் இவை மிகுந்து காணப்பட்டன! பெருங்கொண்ட மக்களை மாற்றிக்காட்டியவர் அவர் என்பதை நாமும் அறிந்திருக்கிறோம்.

3 ஜான் F கென்னடியிடமும் இந்த முக்கலைகளும் விஞ்சியிருந்தன என்கிறார் அவர்.

4  பராக் ஹுஸைன் ஒபாமா: சொற்களைத் தேர்வு செய்து அவைகளைத் துல்லியமாகப் பயன்படுத்துவதில் இவர் மன்னர் (master of rhetoric) என்கிறார் ஹம்ஸா யூசுஃப். ஒன்று அவருக்கு அந்தத் திறமை இருக்க வேண்டும் அல்லது அவருக்கு எழுதிக் கொடுக்கக்கூடியவர்களுக்கு இருந்திருக்க வேண்டும் என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார் பேராசிரியர்.

5 இறுதியாக அவர் குறிப்பிடும் உதாரணம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். அண்ணலாரிடம் இவை மூன்றும் மிகுந்து காணப்பட்டன! இந்த மூன்றிலும் நபியவர்களைத் தட்டிக் கொள்ள யாரும் இல்லை!
இலக்கணத்தில் அவர்கள் மிகவும் துல்லியமானவர்கள்;  தர்க்கத்தில் (logic) அவர்கள் உச்சத்தைத் தொடுபவர்கள்; அது போலவே சொற்களைக் கையாள்வதில் மக்களைக் கவர்ந்து இழுப்பவர்கள்; கட்டுப்பட வைப்பவர்கள்! மனித சமூகத்தின் ஆறில் ஒரு பகுதியை மாற்றிக் காட்டியவர்கள்!

இறுதியாக அவர் குறிப்பிட்டது  - நாவன்மையால் பொய்யை உண்மை போல் சித்தரித்துக் (logical fallacies) காட்டக்கூடியவர்களைத் தோலுரித்துக்காட்டுவதற்கும் - இக்கலைகள் அவசியம் என்கிறார் அவர்.

இந்த மூன்று கலைகளையும் கற்றுக்கொள்வது என்பது - இஸ்லாமிய நாகரிகத்தின் மிக முக்கியமான அம்சமாக விளங்கியிருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார் அவர். ஆனால் இப்போது அவைகளை நாம் மறந்து விட்டோம்.

இப்போது இக்கலைகளை ஆர்வத்துடன் கற்பார் யார்?

இந்த மூன்றுகலைகளும் - liberal arts - எனப்படும் வரையரைக்குள் வரும் என்றும் குறிப்பிடுகிறார் அவர். அது என்ன liberal arts? இந்த மூன்று கலைகளையும் கற்றுக்கொள்பவர்களை அது எல்லாவிதமான அடிமைத்தளைகளில் இருந்தும் விடுவித்து விடுமாம்!

பொது வாழ்க்கைக்கு வர விரும்பும் இன்றைய இளைஞர்கள் இக்கலைகளை கற்றுக்கொள்ள அவசியம் முன் வர வேண்டும். இது காலத்தின் கட்டாயம் ஆகும்!

சிந்திப்போமா?

Comments