இது ஒரு தொடர் ஓட்டம் போன்றது தான்!

தஸவ்வுஃப் மற்றும் சூஃபிஸம் போன்ற இஸ்லாமிய ஆன்மிகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை முற்றாகப் புறக்கணிப்போர் கவனத்திற்கு:

திருக்குர்ஆனில் எந்த ஒரு குறையும் கிடையாது! ஏனெனில் அது இறைவனால் அருளப்பட்டது; இறைவனாலேயே பாதுகாக்கப்பட்டது.

ஆனால் -திருக்குர்ஆன் விரிவுரை நூல்களில் குறைகள் உண்டு. மனித அறிவு இறைவசனங்களைப் புரிந்து கொள்ள முற்படுவதால் தவறுகள் ஏற்படுவது இயற்கையே. ஆனால், குறைகள் இருக்கின்றன என்பதற்காக திருக்குர்ஆன் விரிவுரைகளே தேவையில்லை என்று அவைகளை ஒதுக்கித் தள்ளி  விட முடியுமா? முடியாது!


நபிமொழி நூல்களில் குறைகள் உண்டு. நபிமொழி நூல்களில் பலவீனமான நபிமொழிகள், இட்டுக்கட்டப்பட்ட நபிமொழிகள் – என்றெல்லாம் இருக்கின்றன என்பது உண்மையே. இப்படிப்பட்ட குறைகள் இருக்கின்றன என்பதற்காக (சிலர் சொல்வது போல்) நபிமொழிகளே தேவையில்லை என்று அவைகளை ஒதுக்கித் தள்ளி விட முடியுமா? முடியவே முடியாது!

முன்னோர்களாகிய இமாம்கள் வகுத்துக் கொடுத்த ஃபிக்ஹ் நூல்களிலும் குறைபாடுகள் உண்டு! குர்ஆனுக்கும், நபிவழிகளுக்கும் மாற்றமான ஒரு சில கருத்துக்கள் அங்கே காணப்படுவது உண்மையே; அதற்காக அந்த ஃபிக்ஹ் நூல்களே தேவையில்லை என்று அவைகளை ஒதுக்கித் தள்ளி விட முடியுமா? முடியாது! கூடாது!

அது போலத்தான் தஸவ்வுஃபும், சூஃபியிஸமும். முன்னோர்களான இறைநேசச் செல்வர்கள் வடிவமைத்துத் தந்த ஆன்மிக நூல்களிலும் குறைபாடுகள் நிச்சயம் உண்டு. அதற்காக தஸவ்வுஃபும், சூஃபியிஸமும் தேவையே இல்லை என்று அவைகளை முற்றிலும் ஒதுக்கித் தள்ளி விட முடியாது!

முன்னோர்கள் விட்டுச் சென்றவை அனைத்தும் நமது அறிவுப் பொக்கிஷங்கள்! அவற்றில் சில பல குறைபாடுகள் இருந்த போதிலும்.

அப்படியானால் நாம் என்ன செய்திட வேண்டும்?

முன்னோர்களின் கருத்துக்கள் அவை எங்கிருந்து வந்தாலும், அவை அனைத்தும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அற்புதமான கருத்துக்களை வடிகட்டி எடுத்துக் கொண்டு, குறைபாடு உடைய கருத்துகளை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி அவைகளை நீக்கி விட்டு, மெருகேற்றி, வாழ்கின்ற தலைமுறைக்கு அவைகளை வழிகாட்டும் நெறிகளாக கையளிக்கப்பட வேண்டும்!

அது திருக்குர் ஆன் விரிவுரையாக, நபிமொழியாக, மார்க்க சட்டங்களாக, ஆன்மிகக் கருத்துகளாக – எதுவாக இருந்தாலும் அவை அனைத்துக்குமே - இது தான் வழி! இது தான் முறை!

அத்தோடு நம் வேலை முடிந்தது!

இனி அடுத்த தலைமுறை என்ன செய்யும்? நமது தலைமுறை செய்துவிட்ட குறைகளை அவர்கள் வந்து நீக்கி விட்டு, அவைகளை மீண்டும் மெருகேற்றி, அவர்களின் தலைமுறைக்குக் கையளிப்பார்கள்!
ஆக, இது ஒரு தொடர் ஓட்டம் போன்றது தான்!

ஃகலீஃபா என்றால் அடுத்து வருபவர் என்று பொருள்!
மனிதனை ““ஃகலீஃபா”  என்று திருமறை கூறுவதன் உட்பொருள் கூட இதுதான்!  

Comments