அழகாக எழுதுங்கள். அல்லது அமைதியாக கடந்து சென்று விடுங்கள்!

கணவனும் மனைவியும் வீட்டில் சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் குறை சொல்லித் திட்டிக் கொண்டே இருக்க - தொடர்கிறது அந்தச் சண்டை. இருவரின் குரலும் உயர்ந்து கொண்டே செல்கிறது. சண்டை ஓய்வதாகக் காணோம்.


திடீரென்று விருந்தினர் ஒருவர் வந்து கதவைத் தட்டுகிறார். வந்த விருந்தினர் - இவர்கள் மீது நல்ல மதிப்பு வைத்திருப்பவர். இவர்களும் அந்த விருந்தினரை நன்றாக மதிப்பவர்கள் தாம்.

இப்போது சூழ்நிலை வேறு! அதனைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாமல், தங்களுக்குள் நடந்து கொண்டிருந்த அந்த சண்டையை அந்தக் கணவனும் மனைவியும் தொடர்ந்தால் அவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

**

விஷயத்துக்கு வருவோம். இப்போது முகநூலில் நமது சகோதரர்கள் சிலர் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும் வசை பாடிக்கொண்டும் பின்னூட்டங்கள் இடுகிறார்கள். இதனை நமது - முஸ்லிமல்லாத "விருந்தினர்கள்" பலர் பார்வையிடுகிறார்கள். இது நன்கு தெரிந்தும் நமது சகோதரர்கள் சண்டையைத் தொடர்கிறார்கள்.

அந்தச் சண்டையின் ஒரு பகுதி சாம்பிளுக்காக இதோ என்று ஒரு மூன்று வரிகளைத் தேர்வு செய்து வைத்திருந்தேன். அவைகளை நீக்கி விட்டே பதிவு செய்கிறேன். சம்பந்தப்பட்ட சகோதரர்களின் கண்ணியம் காத்திட.

எனது கேள்விகள் இரண்டு:

ஒன்று: நம்மைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றியெல்லாம் நாம் கவலைப்பட மாட்டோமா?

இரண்டு: நமது வார்த்தைகள் ஒவ்வொன்றும் நாம் பிரதிநிதித்துவப் படுத்தும் மார்க்கத்துக்கு நல்ல பெயர் வாங்கித் தர வேண்டாமா?

Comments